பில்லா 2 - விமர்சனம்
|
 |
By
2012-07-16 13:59:14 |
அஜித், யுவன் சங்கர் ராஜா, ஆர்.டி. ராஜசேகர் மற்றும் உன்னைப் போல் ஒருவன் இயக்குனர் சக்ரி டோலட்டி என ஏக எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ள, 2007 இல் வெளியாகி சக்கைபோடு போட்ட பில்லாவின் முந்தைய பாகமே (பிரீக்குவல்) பில்லா 2. அகதியான சாதரண டேவில் பில்லா எவ்வாறு டோன் பில்லாவாக மாறுகின்றான் என்பதே படத்தின் ஒரு வரிக் கதை!
ஏய் என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா என்று அஜித் கர்ஜிப்பதோடு படம் கர்ஜிக்க ஆரம்பிக்கிறது. நாயகர்கள் குத்துப்பாட்டுடன் அறிமுகமாகும் காட்சிகளை பார்த்து பார்த்து அலுத்துப்போனவர்களுக்கு இது அதிர்ச்சியாகவும் ஆனந்தமாகவுமே இருக்கிறது.
ஆரம்ப எழுத்தோட்டத்துடன் பில்லாவின் சிறு வயது முதல் இலங்கை அகதியாக இந்தியா வரும் வரையிலான வாழ்க்கையை காட்சிப்படுத்தி ஆங்கிலப்படத்தினை போன்று எழுத்தோட்டத்திற்கு வீணாக நேரம் செலவுசெய்யாமல் படத்தின் கதையினை எடுத்துச்செல்ல ஆரம்பிக்கின்றார் இயக்குனர்.
இலங்கை அகதியாக இந்திய முகாமிற்கு வந்து சேரும் பில்லா, டேவில் பில்லாவாக அசாத்திய தைரியமானவராக முதல் காட்சியிலிருந்தே மிளிர்கிறார் அஜித்.
முகாமிலிருக்கும் ஒருவர் மூலம் பாய் ஒருவரிடம் மீன்களை சென்னைக்கு கொண்டு செல்லும் வேலையை பொறுப்பேற்கின்றனர் பில்லாவும் அவனது நண்பன் ரஞ்சித்தும். சென்னைக்கு போகும் வழியில், கொண்டு செல்வது மீன் அல்ல கடத்தல் வைரங்கள் என்பதும் தம்மை கொல்ல சதி என்பதனையும் உணர்கின்றனர். அங்கிருந்து தப்பித்து அண்ணாச்சியிடம் சேர்ந்து இது ஆசையில்லை அண்ணாச்சி பசி என்று தனது கடத்தல் தொழிலை ஆரம்பிக்கிறான் பில்லா.
திரைக்கதை இந்த இடத்திலிருந்து சூடுபிடிக்கின்றது. தொடர்ந்து வரும் காட்சிகளில் வேகம் என்றால் அப்படியொரு வேகம் இந்த வேகத்தில்தான் சில காட்சிகள் நசுங்கிப்போகின்றது. அதனால் ரசிகர்களுக்கு இந்த வேகம் சில இடங்களில் சோகமாக மாறுகிறது.
காரணம் கதைப்படி படத்தின் காட்சிகள் மிக வேகமாக வேறு வேறு இடங்கள் என மாறுவதனால் சில இடங்களில் மட்டும் கோர்வையாக்கப்பட்டது போல் தெரிகிறது. அடுத்தடுத்த காட்சிகளில் பில்லா தன்னை எதிர்த்தவர்களை எப்படி தீர்த்துக்கட்டி தனக்கான இடத்தினை டோனாக தக்கவைக்கின்றான். தனது அக்கா, முறைப்பெண் மற்றும் உடனிருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை. அதனை இதுதான் ஆரம்பம் என முடித்து பில்லாவினை நினைவுபடுத்துகிறார்கள்
இலங்கை அகதியாக கடலிலிருந்து கப்பலில் தரைக்கும் டான் பில்லாவாக தரையிலிருந்து ஹெலிக்கொப்டரில் வானில் பறக்கும் வரையில் பில்லாவின் வாழ்கையை மாற்றும் கடத்தல்களும் கொலைகளுமே மொத்தப் படம்.
நாம வாழ வேண்டும் என்றால் யாரை வேண்டுமானாலும் எத்தனை பேரை வேண்டுமானால் கொல்லாம் என்று பில்லாவில் (2007) சொல்வதனை இந்த பாகத்தில் செயல்படுத்தியிருக்கிறார்கள் போல அந்தளவிற்கு எண்ணிலடங்கா கொலைகள் அஜித் பேசுவதனை விட அதிகமாக ஆயுதங்கள் பேசுகிறது ஆனாலும் அந்த ஆயுதங்கள் பயன்படுத்தியிருக்கும் காட்சிகள் பல சாத்தியமில்லை என்றாலும் நம்பும் விதமாகவும் கொலிவூட் தரத்திலும் இருக்கிறது.
இத்தனை இருந்தும் இயக்குனர் (ஒருவேளை உன்னை போல் ஒருவன் கமல் படமோ???) பல இடங்களில் சறுக்கிவிட்டார். இரண்டு பேராக போய் ஜோர்ஜியாவில் உள்ள வில்லனின் துப்பாக்கித் தொழிற்சாலையை அழிப்பது, திரைக்கதையில் சில இடங்களில் காட்சிகள் கோர்வை போல் இருப்பது, இலங்கை அகதிகள் எவரும் இலங்கை தமிழில் பேசவில்லையே (ஒருவகையில் இதுவும் நல்லதே இலங்கை தமிழ் என்ற பெயரில் தமிழை கொலையா கொல்லுறதுக்கு இது பரவாயில்லை), இரண்டாம் பாதியில் அமைந்த பாடல்கள், அழுத்தமாக அமையாத சில காட்சிகள் என சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது.
இவற்றை எல்லாம் கடந்து அஜித் தனியாளாக படத்தினை தாங்கிப்பிடிக்கும் தூணாக இருக்கிறார். இவரை விட்டால் இது போன்ற பாத்திரத்திற்கு தமிழ் சினிமாவில் ஆளில்லை என்பது நிச்சயம். அப்படி ஒரு அசத்தல் லுக். குண்டாக இருந்தாலும் சில இடங்களை தவிர்த்து இளமையாகவே தெரிகிறார். அகதியாக இருந்து டோனாக மாறுவதினை சின்ன சின்ன அசைவுகள் மூலம் அசத்தியிருக்கிறார்.
மேலும் படத்தின் சண்டைக்காட்சிகள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது. குறிப்பாக ஆரம்ப கத்திச் சண்டை, போத்தல்களால் போடும் சண்டை மற்றும் இறுதி காட்சியில் அந்த மயிர்க்கூச்செறியும் ஹெலிகொப்டர் சண்டை என அனைத்தும். எந்த காட்சியிலும் வானுக்கும் பூமிக்கும் வில்லன்களையோ நாயகனையோ உதைத்து பறக்கவிடவில்லை.
இதனை தவிர்த்து படத்தின் வசனங்களை இரா.முருகன் மற்றும் ஜாபர் கத்தி போன்று தீட்டியிருக்கின்றனர். இவர்களின் பிரதிபலிப்பாக அஜித் பேசும் ஒவ்வொரு வசனமும் நச் ரகம் (திரையரங்கமே கைதட்டல்களால் அதிர்கிறது). ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு மற்றுமொரு நாயகனாக படத்திற்கு உதவியிருக்கிறது.
யுவனின் பின்னணி இசை படத்திற்கு பலம். காதை கிளிக்கும் சத்தங்கள் இல்லாம் இதமாக உள்ளது. பாடல்கள் மனதில் நிற்கவில்லை என்றாலும் கதையுடன் நகவர்வதால் ரசிக்கும் படி உள்ளது. கேங்ஸ்டர் பாடல் இறுதியில் ப்ளூப்பர்சுடன் வருகிறது அதனையும் முடித்துவிட்டே ரசிகர் கிளம்புகிறார்கள். விசுவல்கள் ரசிக்கும் படி உள்ளது குறிப்பாக எனக்குள்ளே மிருகம் பாடல் புது அனுபவம்.
பில்லாவின் நண்பனாக வரும் ரஞ்சித் பாத்திரத்திரத்திற்கு ஜேபீ சிறந்த தெரிவு. வித்யூத் ஜம்வால், சுதீப் வில்லன்களாக சளைக்கவில்லை ஏனைய வில்லன்களும் பரவாயில்லை. நாயகிகளான புரூனா, பார்வதி சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதில் நகைச்சுவை நடிகர் இருந்திருந்தால் மிஸ்ஸன் இம்பொஸிபிள் படத்தில் டொம் குரூஸுடன் வடிவேலு இருந்திருந்தால் எப்படி இருக்கும்??? அப்படி இருந்திருக்கும்.
பில்லா 2 - ஹொலிவூட் தரத்திலமைந்த ஒரு தமிழ் திரைப்படம்
எல்லாம் சரி இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் எதற்கு என்று தான் தெரியவில்லை!!!