திரும்புகிறதா இந்தியா ?

Published By: Gayathri

08 Feb, 2021 | 11:44 AM
image

- கபில்

கிழக்கில் முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை வலுவாக எதிர்க்கும் கருணா, பிள்ளையான், வியாழேந்திரன், அதனை தமக்கான அரசியல் தளமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் அரச தரப்பில் நெருங்கிய பிணைப்பில் உள்ள இவர்களுடனான இந்தியாவின் பகிரங்கச் சந்திப்புக்கள் அவர்களைப் பலப்படுத்தி பயன்படுத்திக்கொள்வதற்கான முயற்சியா என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவின் கையை விட்டுப்போயுள்ள நிலையில், கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கிழக்கு முனையத்தின் நூறுசதவீத உரிமையையும், இலங்கையே கொண்டிருக்கும் என்ற முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டு விட்டபோதும், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அனுராக் சிறிவத்சவா, சர்வதேச அளவில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை மதிக்க வேண்டியது முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்திய தூதுவர் இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அரசாங்கம் திட்டவட்டமான முடிவை அறிவித்து விட்ட பின்னரும், இந்தியா பேச்சுக்களை நடத்திக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் இலங்கை அரசுடன் இத்தகைய ஊடாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கொழும்பில் உள்ள இந்திய துணை தூதுவர் வினோத் ஜேக்கப், வேறு சில சந்திப்புகளில் கவனத்தைச் செலுத்தியிருந்தார்.

அவரது சந்திப்புக்களில் முன்வரிசையில் இருந்தவர்களில் கருணாவும், பிள்ளையானும் முக்கியமானவர்கள். இவர்களுடன் இந்திய இராஜதந்திரி ஒருவர் வெளிப்படையாக, அண்மைக்காலத்தில் சந்திப்புகளை நடத்தியிருப்பது இதுதான் முதல்முறை.

இந்தச் சந்திப்புகள் அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தனித்தனியான இந்தச் சந்திப்புகளில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் அவசியமும், மாகாண சபைகள் மூலமான அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியமும், வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

பொதுத் தேர்தலில், பிள்ளையானின் வெற்றி இந்தியாவை திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது என்பது ஒரு விடயம். ஏற்கனவே, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பு வந்திருந்தபோது, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை தனியாகச் சந்தித்திருந்தார்.

பிள்ளையான், வியாழேந்திரன், கருணா ஆகிய மூவரும், தீவிர தமிழ் தேசிய பற்றாளர்களால், துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுகின்ற போதிலும், கிழக்கில் அவர்கள் அரசியல் ரீதியான சில வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்த மூவரினது அரசியல் வெற்றிகளிலும், முக்கியமான ஒரு பொதுப்பண்பு உள்ளது. அது முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை இவர்கள் கையில் எடுத்திருப்பதாகும்.

கிழக்கில் முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை வலுவாக எதிர்க்கும் இவர்கள், அதனை தமக்கான அரசியல் தளமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அரச தரப்பில் இணைந்துள்ள அல்லது அவர்களுடன் நெருங்கிய பிணைப்பில் உள்ள இவர்களைப் பலப்படுத்திக் கொள்வதற்கு இந்தியா முனைகிறதா என்ற கேள்விகளும் உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியா எப்போதும் தனது கைக்குள் வைத்திருக்கிறது என்ற கருத்தே உள்ளது. இவ்வாறான நிலையில் கிழக்கில் கூட்டமைப்புக்கு மாற்றாக உருவாகும் இவர்களை ஒதுக்கி வைப்பதை, இந்தியா சாதகமானதாக கருதவில்லைபோலத் தெரிகிறது.

எனவே, அவர்களை அரவணைத்துக் கொள்வது இந்தியாவின் இலக்காக இருக்கலாம். ஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணாவுக்கு கொழும்பில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டபோது, இந்தியாவே அவருக்கு புகலிடம் கொடுத்து மும்பையில் தங்கவைத்திருந்தது.

அங்கிருந்தே அவர் நேபாளம் வழியாக லண்டனுக்குச் சென்ற நிலையில், அங்கிருந்து நாடு கடத்தப்பட்டிருந்தார். ஆக, முன்னாள் விடுதலைப் புலிகள் என்பதால் கருணாவையோ, பிள்ளையானையோ இந்தியா ஓரம்கட்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை.

தேவைப்படும் போது அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள இந்தியா தயங்காது. இந்திய துணைத் தூதுவரின் சந்திப்பு பட்டியல்களில் இவர்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான மனோகணேசன், திகாம்பரம் உள்ளிட்டோரும் அடங்கியிருந்தனர்.

இந்தச் சந்திப்புகளில், இந்திய துணைத் தூதுவர், 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும். மாகாண சபைகளின் ஊடாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை, நடைமுறைப்படுத்துவதை இந்தியத் தூதுவர், அரசாங்கத்துடனான சந்திப்புகளில் வலியுறுத்துவதுதான் பொருத்தம். ஆனால், அவர் அதனை பிள்ளையான், கருணா, ஹக்கீம், மனோ, திகாம்பரம் ஆகிய சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களிடம் வலியுறுத்தியிருப்பதற்குப் பின்னால் இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் ஒன்று இருப்பதாகவே தெரிகிறது.

கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்ற நிலையில், இந்தியா 13 ஆவது திருத்தம் மற்றும் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பான விவகாரங்களில் அழுத்தமான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

கடந்த வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில், கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவமான, நீதியான, அமைதியான முறையில் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் சொந்த நலன்களுக்கே நல்லது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

13 ஆவது திருத்தம் உள்ளிட்ட அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு குறித்து, இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கும் இது பொருந்தும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இது, கிழக்கு முனைய விவகாரத்தில் எழுந்துள்ள சிக்கலை, இந்தியா இன்னொரு வகையில் அழுத்தங்களாக கொடுக்க முனைகிறதா என்ற சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.

இந்திய துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப் கடந்தவாரம் சந்தித்த கருணா, பிள்ளையான், ஹக்கீம், மனோ, திகாம்பரம் ஆகிய அனைவருமே, 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைமுறைமைகளை வலுவாக ஆதரிப்பவர்கள்.

அவர்களை மேலும் பலப்படுத்துவது அல்லது அதனை நோக்கி இன்னமும் தூண்டச் செய்வது இந்தியாவினது நோக்கமாக இருக்கலாம். அதேவேளை, அவர்களில் பிள்ளையான், கருணா போன்றவர்கள், ராஜபக்ஷ முகாமில் இருப்பவர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

இராஜதந்திர சந்திப்புகள் எப்போதும் ஒரே கோணத்தில் இருப்பவையாகவோ, ஒரே நிலைப்பாட்டைக் கொண்டவர்களுடனானதாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

சில சந்தர்ப்பங்களில் எதிர்நிலைப்பாடுகளை உடையவர்களும் கூட அவ்வாறான சந்திப்பு வளையங்களுக்குள் கொண்டு வரப்படுவார்கள்.

கிழக்கு முனைய விவகாரத்தில், தமிழர் தரப்பில் இருந்தவர்கள் இந்தியாவின் நிலைப்பாட்டையே ஆதரித்திருந்தார்கள். எப்போதும், இந்தியாவைச் சந்தேக கண்ணுடன் பார்க்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கூட, இந்தியாவுக்கே கிழக்கு முனையம் வழங்கப்படவேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால், முன்னுரிமைப் பங்களானாக இருக்கும் என்று இந்தியா எதிர்பார்த்த இலங்கை அரசு அவ்வாறு செயற்பட்டிருக்கவில்லை. இவ்வாறான பின்னணியில், மீண்டும் தமிழர்களின் நலன்களை முன்னிறுத்தி, இந்தியா காய்களை நகர்த்தும் முடிவுகளை எடுக்க நிர்ப்பந்திக்கப்படக்கூடும் என்றே தெரிகிறது. அதற்கான முன்னேற்பாடாகக்கூட, இந்திய துணைத் தூதுவர்களின் சந்திப்புகள் அமைந்திருக்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54