றக்பி விளையாட்டை மேம்படுத்த கிரிஷ் நிறுவனம் கொடுத்ததாக கூறப்படும் 70 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தினார் எனும் குற்றச் சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று 9 சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பித்தது. இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிகளில் ஒருவரான பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர பிரேமசாந்த இந்த ஆதாரங்களை மன்றுக்கு வழக்கின் சான்றுகளாக சமர்ப்பித்தார்.

அத்துடன் இந்தியாவின் கிரிஷ் குழுமத்திடம் போலியான ஒப்புறுதிகளைக் காட்டி  40 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொண்டு புத்தளம் பகுதியில் காணியொன்ரை வாங்கிய சம்பவம் ஒன்று தொடர்பிலும் இது குறித்த விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளதாகவும் அதுதொடர்பில்  நால்வர்   சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.

 கிரிஷ் குழுமத்திடம் பணம் பெற்று அதனை தவறாக பயன்படுத்திய விவகாரம் தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெறும் விசாரணைகளின் நிலைமையை ஆராயும் விதமாக அது குறித்த வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது கடந்த ஜூலை 18 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மன்றில் ஆஜராகியிருந்ததுடன் அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் மன்றில் பிரசன்னமானார்.

 விசாரணையாளர்கள் தரப்பில் பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர பிரேமசாந்த மன்றில் ஆஜரானார். இந் நிலையில் நேற்று மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுர பிரேமசாந்த நீதிவானிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.

"இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் போது நாம், 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கால்ட்டன் சுபர் நெட்வேர்க் எனும் நிறுவனத்தின் கணக்கியல் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த  சுஜானி போகல்லாகமவிடம்  மேலதிக வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றோம்.

அந்த வாக்கு மூலத்தில் 2012 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் போட்டித் தொடர் தொடர்பிலான செலவு விபரங்களை நன்கு அறிந்தவர்கள் ரொனீ இபரஹீம் என்பவரும் ருக்ஷான் பெர்ணான்டோ என்பவருமே என அவர் தெரிவித்தார். அதன்படி மேற்குறிப்பிட்ட இருவருக்கும் விசாரணை தொடர்பில் ஆஜராகுமாறு நாம் அழைப்பு விடுத்துள்ளோம். எனினும் அவர்கள் இதுவரை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவில்லை.  ருக்ஷான் பெர்ணான்டோ மற்றும் சட்டத்தரணி ஒருவர் ஊடாக தான் கொழும்புக்கு வெளியே இருப்பதால் கொழும்புக்கு வந்ததும் விசாரணைக்கு வருவதாக அறிவித்துள்ளார்.

பிரதான சந்தேக நபரான நாமல் வழங்கிய வாக்கு மூலம் மற்றும் ஏனையோர் வழங்கிய வாக்கு மூலம் தொடர்பில் விசாரணைகள்  தொடர்கின்றன.

நீங்கள் வழங்கிய உத்தரவுக்கு அமைய இலங்கை வங்கி, செலான் வங்கி, பேன் ஏஷியா வங்கி ஆகியன குறித்த வங்கிக்கணக்கு விபரங்களை எமக்கு இன்னும் வழங்கவில்லை.

அதன்படி செலவுகள் குறித்த தகவல்களை  அறிந்துள்ள ரொனீ இப்ராஹீம் மற்றும் ருக்ஷான் பெர்ணான்டோ ஆகியோரிடம் வாக்கு மூலம் பெற நாம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் 2012, 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் றக்பி விளையாட்டு தொடர்பில் மைதானங்களை வேறுபடுத்திக்கொண்டமை தொடர்பிலான அறிக்கையையும் நாம் மன்றுக்கு முன்னிலைப்படுத்தவுள்ளோம்.

இதனைவிட இந்த விசாரணைகளின் இடை நடுவே கிரிஷ் குழுமத்துக்கு போலியான ஒப்புறுதிகளைக் காட்டி 40 மில்லியன் ரூபாவைப் பெற்றுக்கொன்டு புத்தளம் பகுதியில் காணி ஒன்றினை வழங்கிய விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதனால் அதில் சம்பந்தப்பட்ட நாலக கொடஹேவா, செவ்வந்தி பீரிஸ், அஷ்ரப் ரிஷாத் பதியுதீன், ரோஹித்த பெரேரா ஆகியோரை  இவ்வழக்கின் சந்தேக நபர்களாக நாம் பெயரிடுகின்றோம்.

இந்த வழக்கு கிரிஷ் குழுமத்துக்கு செய்யப்பட்ட மோசடிகளை ஆராயும் நிலையிலேயே இந்த விவகாரம் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டி ஏற்பட்டது.  போலியான ஒப்புறுதிகளை செய்வதற்காக 7 மில்லியன் ரூபாவை ஒருவர் பெற்றுள்ளார். மற்றுமொருவர்  போலியான ஒப்புறுதியை செய்ய உதவியுள்ளார். இதனை சட்டத்தரணியான ரோஹித்த பெரேராவே செய்துள்ளார். எனவே தான் அந் நால்வரையும் நாம் சந்தேக நபர்களாக பெயரிட்டுள்ளோம்.

இந் நிலையில் பிரதான சந்தேக நபரான நமலுக்கு எதிராக இன்று ( நேற்று)  நாம் 9 சாட்சியங்களை இந்த மன்றில் சமர்ப்பிக்கின்றோம். இதனைவிட நாலக கொடஹேவாவுக்கு எதிராக 6 சாட்சியங்கள் உட்பட மொத்தமாக 25 சாட்சியங்களை இந்த வழக்கு தொடர்பில்  இந்த மன்றில் சமர்ப்பிக்கின்றோம்.

இந்நிலையில் இது குறித்த விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. எனவே கடந்த 5 ஆம் திகதி விசாரணை அறிக்கையானது ஆலோசனைப் பெற்றுக்கொள்வதற்காக சட்ட மா அதிபரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த ஜூலை 11 ஆம் திகதி மன்றில் தாக்கல்  செய்த பீ அறிக்கையில் இருந்த சட்டப் பிரிவுகளுக்கு மேலதிகமாக தண்டனை  சட்டக் கோவையின் 400,403 ஆகிய அத்தியாயங்களையும் நாம் உள்ளீர்க்கின்றோம் என்றார்.

இதனையடுத்து பொலிஸாரும் சந்தேக நபர் தரப்பும் நீண்ட நாட்களை அவகாசமாக கோர, வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிவான் லங்கா ஜயரத்ன அறிவித்தார்.