குருணாகல் ,மாவத்தகம நொட்டிங்ஹில் தமிழ் வித்தியாலயத்தில் எழுந்துள்ள பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென வடமேல் மாகாண தமிழ் மொழிப்பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி பாரூக உடையார் தெரிவித்துள்ளார்.

குருணாகல் ,மாவத்தகம நொட்டிங்ஹில் தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் சீரில்லாத செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை, வடமேல் மாகாண தமிழ் மொழிப்பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி பாரூக உடையார் அங்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இங்கு பிரச்சினை ஏற்பட முக்கிய காரணமாக இருந்த ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளார் .

இதற்கான உத்தரவை உடன் வழங்கியுள்ளேன். மேலும் பாடசாலைப்  பணத்தில் தவறான முறையில் ஒலிபெருக்கி கொள்வனவு ,இரு ஆசிரியைகளுக்கு வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றம்,இலவச புகையிரத ஆணைச்சீட்டு வழங்கப்படாமை, தொடர்பாக வலயக் கல்விப் பணிமனை  விசாரணை  செய்யும்.

மேலும் இங்கு இலங்கை அதிபர் சேவைத் தரமுடைய புதிய அதிபர் ஒருவர் நியமனம் செய்யப்படவுள்ளார் .

இதேவேளை,  இப் பாடசாலையில் நிலவும் முறைகேடுகள் தொடர்பாக குருணாகல் மாவட்ட  ஐ.தே .க. பாராளுமன்ற உறுப்பினர் ஜே .சி . அலவத்துவல, வடமேல் மாகாண சபையின் ஸ்ரீல.சு.க. உறுப்பினர் அசோக பிரேமதாஸ , கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷணன் , கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்,வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியாகுமார ராஜபக்ஷ ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் எஸ்.மகேந்திரன் தெரிவித்தார்.