வெளிப்படும் ஜெனிவா பூதம்

Published By: Digital Desk 3

25 Jan, 2021 | 08:11 PM
image

-சத்ரியன்

  • ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பதில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும், அதனைப் பிரமாண்டமான ஒன்றாகவே சிங்கள மக்கள் மத்தியில் காண்பித்து அரசாங்கம் அரசியல் செய்யும்
  • தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கோரிக்கையை அடுத்து ஜெனிவா கூட்டத்தொடரை அரசாங்கமும் சரிஇ இராஜதந்திர மட்டங்களும் சரி மிகப்பெரிய பூதமாக வெளிப்படுத்த தொடங்கியிருக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் நெருங்க நெருங்க, இலங்கை விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் ஒன்றை முன்வைப்பதற்கு, அனுசரணை நாடுகள் தயாராகி வருகின்றன.

புதிய தீர்மானம், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விட, கடினமான ஒன்றாக இருப்பது தவிர்க்க முடியாததாக மாறியுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் அதற்கு இணை அனுசரணை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இது எதிர்பார்க்கப்படாத விடயம் அல்ல, ஏனென்றால், இலங்கை அரசாங்கம், 30/1 தீர்மானம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு வழங்கிய இணை அனுசரணையில் இருந்து ஏற்கனவே விலகி விட்டது.

இவ்வாறான நிலையில், புதிய தீர்மானம் அதனை விடக் கடினமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசாங்கம் அதற்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்ப்பது தான் முட்டாள்தனம்.

ஆனாலும், ஜெனிவாவில் உருவாகி வரும் சூழலை அரசாங்கம் எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை ஆரம்பித்திருக்கிறது.

ஜெனிவாவில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அதனை தமது நட்பு நாடுகளுடன் இணைந்து முறியடிக்கத் தயாராகி வருவதாகவும், முன்னர் கூறிவந்த அரசாங்கம் இப்போது மெல்ல மெல்ல அழுத்தங்களைச் சந்திக்க ஆரம்பித்திருக்கிறது.

அதனை விட, அரசாங்கத் தரப்பு மற்றும் அதனுடன் நெருங்கிய தரப்புகள் இந்தக் கூட்டத்தொடர் குறித்து எச்சரிக்கை செய்யவும் ஆரம்பித்திருக்கின்றன.

குறிப்பாக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழ்க் கட்சிகள், சிவில் அமைப்புகளின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம், அரசாங்கத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்தக் கடிதத்தில், இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும், சர்வதேச பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இந்த விவகாரம், ஜெனிவாவில் இருந்து நியூயோர்க்கிற்கு மாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அதைவிட, சிரியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்கள், ஆதாரங்களைத் திரட்டி, ஆவணப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது போன்று, பக்கச்சார்பற்ற சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி, இலங்கையில் இடம்பெற்ற மீறல்களை ஆவணப்படுத்த வேண்டும் என்றும், இலங்கையைக் கண்காணிப்பதற்காக பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், கோரப்பட்டுள்ளது.

அதாவது, பல கட்டப் பொறிமுறைகளை உருவாக்குவதற்காக யோசனைகளையும், கோரிக்கைகளையும் இந்த பொது ஆவணத்தில் தமிழர் தரப்பு ஒன்றுபட்டு வலியுறுத்தியிருக்கிறது.

இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா என்பது நிச்சயமற்றாக இருந்தாலும், முன்னரை விட கடினமான தீர்மானம் ஒன்றுக்கு அவர்கள் செல்வது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாதது.

இவ்வாறான நிலையில் கொழும்பில் பதற்றம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

ஜெனிவா களம் இம்முறை சவாலானது என்பதை வெளிவிவகாரச் செயலாளர் ரியர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறார்.

அதுபோலவே, கலாநிதி தயான் ஜயதிலகவும், இப்போதைய சூழல் அரசாங்கத்துக்கு கடினமானதாகவே இருக்கும் என்பதைக் கோடி காட்டியிருக்கிறார்.

போர் நடந்த காலத்தில் வெளிவிவகார அமைச்சராக இருந்த- ரோஹித போகொல்லாகமவும், இம்முறை இலங்கைக்கு ஜெனிவா பெரும் சவாலாக இருக்கப் போகிறது என்று கூறியிருக்கிறார்.

இவையெல்லாம், இம்முறை ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக, இலங்கையின் இராஜதந்திர மட்டங்களில் ஏற்படத் தொடங்கியிருக்கும் நடுக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

குறிப்பாக ரோஹித போகொல்லாகம, தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து, சமர்ப்பித்துள்ள ஆவணம் குறித்து முன்னெச்சரிக்கை செய்திருக்கிறார்.

தமிழ்க் கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கைகளை இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் தாமதமின்றி ஆராய வேண்டும் என்றும், அவர் கோரியிருப்பது கவனிக்கத்தக்கது.

அதாவது, ஜெனிவா கூட்டத்தொடரை அரசாங்கமும் சரி, இராஜதந்திர மட்டங்களும் சரி மிகப்பெரிய பூதமாக வெளிப்படுத்த தொடங்கியிருக்கின்றன.

இது கடந்த காலங்களிலும், காணப்பட்ட சூழ்நிலை தான்.

ஒரு கட்டத்தில் ஜெனிவா களத்தை, “தூசி தான் தட்டி விடுவோம்” என்று காண்பித்தவர்கள் இப்போது, அதனை மிகப்பெரிய விம்பமாக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளதற்குப் பின்னால் உள்ள அரசியல் முக்கியமானது.

கொரோனா நெருக்கடி, பொருளாதார நெருக்கடிகள், மக்கள் மீது அதிகரித்து வரும் சுமைகள், இராணுவ ஆதிக்கம் அதிகரித்து வருவதால் ஏற்பட்டு வரும் அழுத்தங்கள் என, அரசாங்கம் பலமுனைச் சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது.

இந்த அழுத்தங்கள், நெருக்கடிகள் எதிலிருந்தும் இப்போதைக்கு விடுபட முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், மக்களை பாதுகாப்பாக நிலையில் இருப்பதான உணர்வுக்குள் வைத்திருக்க முயன்ற அரசாங்கம், இப்போது எச்சரிக்கை நிலைக்கு கொண்டு செல்ல ஆரம்பித்திருக்கிறது.

இவ்வாறு உணர்ச்சியூட்டும் நிலைக்கு கொண்டு செல்வதே அரசாங்கத்துக்குப் பாதுகாப்பானது. 

அந்த வழிமுறையைத் தான் அரசாங்கமும் இப்போது கையில் எடுத்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிகிறது.

சிங்கள மக்கள் மத்தியில் ஜெனிவாவை பெரியதொரு அச்சுறுத்தலாக- பூதமாக காட்டிக் கொள்வதன் மூலம், இந்த நெருக்கடியை வைத்து அரசியல் செய்வது அரசாங்கத்துக்கு இலகுவானது.

அடுத்து வரும் மாதங்களில் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய நிலையில் இருப்பதால், அதற்கான பிரசாரத்துக்கும் இந்த விவகாரம் உதவியாக இருக்கும்.

அதைவிட, ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பதில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும், அதனைப் பிரமாண்டமான ஒன்றாக காட்டுவதும் அரசாங்கத்துக்கு முக்கியமானது.

ஜெனிவாவில் தமக்கு தோல்வி ஏற்பட்டால், சர்வதேசத்தின் மிகப்பெரிய சதியாக - இலங்கையின் இறைமை சுதந்திரத்தின் மீதான தலையீடாக அரசாங்கம் வெளிப்படுத்த முனையும்.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டுவதை விட, இதனை இலங்கையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாக காண்பிப்பதே அரசாங்கத்துக்கு கூடுதல் அனுகூலம் தரும்.

அதேவேளை, ஜெனிவாவில் இலங்கைக்கு வெற்றி கிட்டினால், அதனை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றிக்குப் பின்னர், கிடைத்துள்ள வெற்றியாக- அதுவும் சர்வதேச வெற்றியாக காண்பித்து, சிங்கள மக்களின் கண்களை கட்டிப்போட முடியும்.

ஆக எது நடந்தாலும், சிங்கள மக்களை தேசிவாத பிரசாரங்களால், மயக்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது.

சர்வதேச அழுத்தங்களை சமாளிக்கும் நகர்வுகளைத் தாண்டி, இலங்கை அரசாங்கம் இதனை அரசியலாக்குவதில் தான் கூடுதல் அக்கறை செலுத்துகிறது.

ஏனென்றால், உள்நாட்டில் சரிந்து வரும் செல்வாக்கைத் தூக்கி நிமிர்த்துவது இது முக்கியமானது.

சிங்கள பௌத்த தேசியவாத ஆதரவுப் புலத்தில் ஏற்படும் சரிவில் இருந்து மீள்வது, அரசாங்கத்துக்கு முக்கியம் என்பதால், வரும் நாட்களில் ஜெனிவா களம் பற்றிய பிரமாண்ட பூதம் வெளிப்படுத்தப்படுவது அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கப் போகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22