இம்ரான் கான்: ஜெனிவா துருப்புச் சீட்டா?

Published By: Digital Desk 3

25 Jan, 2021 | 08:10 PM
image

கார்வண்ணன்

இலங்கை வரும்  இம்ரான் கானை வைத்து ஐ.நா.விடயத்தில் இந்தியாவை தன் பக்கத்துக்கு இழுப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால் அது ஆச்சரியமனதல்ல.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடருக்குத் தலைமை தாங்கப் போகிறவர் நஸ்ஹத் ஷமீம் கான் (Nazhat Shameem Khan) என்ற முன்னாள் நீதிபதி.

2014ஆம் ஆண்டில் இருந்து பிஜி தீவின் சார்பில், ஜெனிவாவுக்கான பிரதிநிதியாக பணியாற்றி வருபவர். 

2021ஆம் ஆண்டுக்கான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவராக, கடந்தவாரமே இவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நஸ்ஹத் ஷமீம் கான் பிஜியில் புகழ்பெற்ற  மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் இருந்தவர். 

பிஜி உயர்நீதிமன்றத்தில் முதலாவது பெண் நீதிபதியாகவும் பணியாற்றியவர்.

நஸ்ஹத் ஷமீம் கான் (Nazhat Shameem Khan)

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த, நவநீதம்பிள்ளைக்குப் பின்னர், ஜெனிவா கூட்டத்தொடரின், தலைமைத்துவ இருக்கையில், சேலையுடன் இவர் அமர்ந்திருக்கப் போகிறார்.

இவர் இந்தப் பதவிக்கு வந்திருப்பது, இலங்கை விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயமாக குறிப்பிட முடியாது.

ஆனால், மனித உரிமைகள்  தொடர்பான பின்னணியைக் கொண்ட நீதிபதியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக, இஸ்லாமியரான ஒருவர் இந்த இடத்திற்கு வந்திருப்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

இந்தக் கூட்டத் தொடர் எவ்வாறான சூழலில் நடக்கப் போகிறது என்று இன்னமும் உறுதியாகவில்லை. 

கொரோனா தொற்றினால், வழக்கமான அமர்வாக நடக்குமா அல்லது, மெய்நிகர் அமர்வாக இடம்பெறுமா என்ற கேள்வி உள்ளது.

எவ்வாறு நடந்தாலும் இலங்கை விவகாரம் முக்கியத்துவம் பெறப்போவது உறுதி. 

ஏனென்றால், ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடியப் போகிறது.

இதற்குப் பின்னர், புதிய தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

இவ்வாறான நிலையில், புதிய தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் கூறிவிட்டது.

அது பாரிய அரசியல் தோல்வியாக அமையும் என்று அரசாங்கம் கருகிறது.

வெளிவிவகாரச் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே அண்மையில் இதனை  உறுதிப்படுத்தியிருந்தார்.

அத்துடன், இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை எவ்வாறு பங்கேற்கவுள்ளது என்பது குறித்தும், இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

அதாவது கொழும்பில் இருந்து தனியான பிரதிநிதிகள் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்புவதா அல்லது அங்குள்ள தூதுவர் சந்திரபிரேமவை பங்கேற்க வைப்பதா, அல்லது மெய்நிகர் முறையில் பங்கேற்பதா என்று தீர்மானிக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சி.ஏ.சந்திரபிரேம

எவ்வாறாயினும், இந்தக் கூட்டத்தொடர் இலங்கையைப் பொறுத்தவரையில் சவாலான ஒன்று என்பதை எல்லாத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கின்றனர்.

ஜெனிவாவில் எந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும், சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உறுதி செய்துள்ளன என்று அமைச்சர் சரத் வீர்சேகர கூறியிருந்தார்.

இவ்வாறான நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள அடுத்த மாத இறுதிப் பகுதியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கொழும்பு பயணம் இடம்பெறவுள்ளமை, முக்கியமான கவனிக்கப்பட்ட வேண்டிய ஒன்று.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர், பெப்ரவரி 22 ஆம் திகதி தொடங்கவுள்ள நிலையில், இம்ரான் கான், அதற்கு மறுநாளான, பெப்ரவரி 23 ஆம் திகதி கொழும்புக்கு வரவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் இம்ரான் கான்

இந்தப் பயணம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக இருந்தாலும், புவிசார் அரசியலில் இதற்கென உள்ள முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

இந்தியாவும் பாகிஸ்தானும் பரம்பரை எதிரி நாடுகளாகவே இருந்து வருகின்றன.

இரண்டும் எப்போதும் ஏட்டிக்குப் போட்டியான நகர்வுகள், முடிவுகளையே எடுத்து வந்திருக்கின்றன.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில், இரண்டு நாடுகளுடனும் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகிறது.

விடுதலைப் புலிகளுடனான போரை எதிர்கொள்வதற்கு, இரண்டு நாடுகளினதும் ஆதரவைப் பெற்றிருந்தது இலங்கை அரசாங்கம்.

இந்த விடயத்தில் இரண்டு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொள்ளவில்லை.

ஆனால், போருக்குப் பிந்திய சூழலில், இரண்டு நாடுகளும் அவ்வாறான நிலையில் இருக்கவில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டபோது, அதனை பகிரங்கமாக நின்று தோற்கடிக்கப் பாடுபட்டது பாகிஸ்தான்.

தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட போது அதில் திருத்தங்களை முன்வைத்தும், வாக்கெடுப்புகளைக் கோரியும், இலங்கையை காப்பாற்ற கடுமையான முயற்சிகளை முன்னெடுத்திருந்தார் பாகிஸ்தான் பிரதிநிதி.

ஆனால், இந்தியா அவ்வாறாக நடந்து கொள்ளவில்லை.

ஆரம்பத்தில் இந்த விவகாரம் ஜெனிவாவுக்கு கொண்டு செல்லப்டுவதையே இந்தியா விரும்பவில்லை. 

ஆனாலும், புவிசார் அரசியல் நலன்கள், சீனத் தலையீடுகள், தமிழகத்தின் அரசியல் நெருக்கடிகளால் இந்தியா தலையை ஆட்டும் நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆரம்பத்தில் நடுநிலை என்று அடம்பிடித்த இந்தியா பின்னர், ஒரு கட்டத்தில் ஆதரிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டது.

அதேவேளை, இந்தியா பின்கதவு வழியாக, இன்னொரு காரியத்தையும் செய்யத் தவறவில்லை. ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதில் இந்தியா கவனமாக இருந்தது.

இதன் மூலம் இலங்கையைக் காப்பாற்றுவதற்கு இந்தியா மறைமுகமாக பங்காற்றியது.

ஆனால், பாகிஸ்தான் அவ்வாறின்றி, வெளிப்படையாகச் செயற்பட்டது.

இந்தப் பின்னணியில், இப்போது மீண்டும் ஜெனிவா நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இலங்கையின் மனித உரிமை மீறல்கள் விவகாரம்.

இந்தமுறை காத்திரமான தீர்மானம் ஒன்றை முன்வைக்க அனுசரணை நாடுகள் தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், இந்தியா எப்படிச் செயற்படப் போகிறது என்ற கேள்வி வலுவாக உள்ளது.

ஏனென்றால், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் முக்கியமாக உற்று நோக்கும்.

இந்தியா எதிர்க்குமானால், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மேற்குலக நாடுகள் கடினமான நிலையை எதிர்நோக்கும்.

அதனால், எப்படியாவது இந்தியாவையும் தங்களின் கோட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்துவதற்கு அனுசரணை நாடுகளும் அமெரிக்காவும் முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேவேளை, ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கொழும்பு வரவுள்ள விடயமானது, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவின் தீர்மானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று கவனிக்க வேண்டும்.

ஏனென்றால் இம்ரான் கான் இலங்கையில் கொடுக்கப் போகும் வாக்குறுதியை இந்தியா உன்னிப்பாக கவனிக்கும்.

இலங்கை, பாகிஸ்தானின் செல்வாக்கிற்கு உட்படுவது கடினமானது என்றாலும், இதற்கு முன்னர் ஜே.எவ் 17 போர் விமானக் கொள்வனவை தடுத்து நிறுத்தியது போன்ற செயல்முறைகளால், இலங்கை- பாகிஸ்தான் உறவுகளில் இந்தியா தனது மேலாதிக்கத்தை வெளிப்படுத்தியது.

என்றாலும், இலங்கையும் தற்போதைய சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை எடுக்கத் தயாராகவே இருக்கும் என்பதையும் இந்தியா கவனத்தில் கொள்ளும்.

நெருக்கடியானதொரு சூழலில், இம்ரான் கானை வைத்து இந்தியாவை தன் பக்கத்துக்கு இழுப்பதற்கு இலங்கை அரசாங்கம் முற்பட்டால் அது ஆச்சரியமல்ல.

தனக்கான ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இலங்கை அரசு தன்னால் இயன்ற உச்சக்கட்ட முயற்சிகளை எடுக்கும் என்பதில் சந்தேகம் கொள்ள முடியாது.

சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நட்பு நாடுகளை வைத்துக் கொண்டு, அவற்றுக்கு ஆதரவளிக்க கூடிய நாடுகளை மாத்திரமன்றி அவற்றுடன் முரண்படக் கூடிய நாடுகளையும் வளைத்துப் போடும் இராஜதந்திரத்தை இலங்கை கையாளுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13