உணவுக்குழாயும், இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் கார்டியாக் ஸ்பிங்க்டர் அல்லது எல் ஈ எஸ் எனப்படும் Lower Esophageal Sphincter உள்ளது. பொதுவாக உணவுக்குழாயின் இயக்கம் மேலிருந்து கீழாகத்தான் நடைபெறும். இது ஒரு ஒருவழிபாதையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எம்மில் பலர் செய்யும் தவறுகளால் இந்த நடைமுறையில் மாற்றம் நிகழ்கிறது. அதாவது முழுவதுமாக செரிக்கப்படாத உணவு மற்றும் உணவுத்துகள்கள், உணவுக்குழாயின் மேல்பகுதியை நோக்கி முன்னேற முயற்சிக்கிறது. சில தருணங்களில் மேலே ஏறிவிடுகிறது. 

அத்தகைய தருணங்களில் மேலே ஏறிய அரைக்குறையாக அரைக்கப்பட்ட உணவு அமிலக்கலப்புடன் கூடியது என்பதால் இதனை தாங்கும் சக்தி அப்பகுதிக்கு இல்லாததால் பாதிப்படைகிறது. அதாவது  உணவுக்குழாயின் உட்புறச்சுவரானது இந்த அமிலத்தை பொறுத்துக் கொள்ளும் அளவிற்கு உறுதியானது அல்ல. இதனால் அதன் மெல்லிய தசைச்சுவற்றின் உட்புறச்சுவர்கள் இருக்கும் உட்புற சளிப்படலம் இந்த அமிலத்தின் தன்மையை தாங்கிக் கொள்ள இயலாமல் பாதிப்படைகிறது இந்த பாதிப்பு தான் நெஞ்செரிக்கலாக உணரப்படுகிறது.

ஒருவருக்கு அடிக்கடி நெஞ்செரிக்கல் ஏற்படுமேயானால் உணவுக் குழாயின் கீழ்பகுதியான  அதாவது, L E S பகுதியில் உள்ள தசைச்சுவர்கள் வலுவிழந்து தளர்ந்த நிலையில் வீக்கம் ஏற்பட்டு முற்றுகிறது என்று தெரிந்துகொள்ளவேண்டும். இதனையே மருத்துவர்கள் ஹையாடல் ஹெர்னியா என்று குறிப்பிடுகிறார்கள். இதனை தொடக்கநிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளவேண்டும். அலட்சியப்படுத்தினால் புற்றுநோய் ஏற்படவும் கூடும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்

இதனை வரவிடாமல் தடுக்கவேண்டும் என்றால், உணவு பழக்கத்தையும் உணவு முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக் கொள்ளவேண்டும். குறிப்பாக வாழைப்பழம் மற்றும் அப்பிள் பழங்களையும்,   பீன்ஸ், காரட், புருக்கோலி போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். குறைந்த அளவு சிக்கன், மட்டன், மீன் உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்பு குறைந்த பால், சீஸ், கிறீம் வகைகளை சாப்பிடலாம். அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும் மலச்சிக்கல் நீங்கும். சிரமம் ஏற்படாது. குறைந்த கலோரி உள்ள இனிப்புகளையும் சில அரிதான தருணங்களில் எடுத்துக்கொள்ளலாம்.

டொக்டர் M.மணிமாறன் M.S.,

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்