ரஷ்யாவின் வெகுஜன ஆர்ப்பாட்டத்தில் நவல்னியின் மனைவி உட்பட மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் கைது

Published By: Vishnu

24 Jan, 2021 | 10:00 AM
image

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மிக முக்கிய அரசியல் எதிரியான எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் நாடு தழுவிய ரீதியான ஆர்ப்பாட்டங்களின் போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை சனிக்கிழமை ரஷ்ய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த தகவலை ரஷ்யாவின் அரசியல் தடுப்புக் காவல்களைக் கணக்கிடும் ஒரு குழு உறுதிப்படுத்தியுள்ளது.

மொஸ்கோவின் நகர மையத்தில் உள்ள புஷ்கின் சதுக்கத்திலும் அதைச் சுற்றியும் 15,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர், அங்கு பொலிசாருடன் மோதல்கள் வெடித்தன. இதன் விளைவாக தடியடி தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டனர். 

அது மாத்திரமன்றி பலர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பஸ்கள் மற்றும் தடுப்புக்காவல் லொறிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்களில் நவல்னியின் மனைவி யூலியாவும் உள்ளடங்குவார்.

பொலிசார் இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை சதுக்கத்திலிருந்து வெளியேற்றினர். ஆயிரக்கணக்கானோர் பின்னர் ஒரு கிலோமீட்டர் (அரை மைல்) தொலைவில் உள்ள ஒரு இடத்தில் மீண்டும் அணிதிரண்டனர்.

அவர்களில் பலர் கலைக்கப்படுவதற்கு முன்பாக காவல்துறையினர் மீது பனிப்பந்துகளை வீசினர்.

பின்னர் சிலர் நவல்னி சிறை வைக்கப்பட்டுள்ள சிறை அருகே போராட்டத்திற்கு சென்றனர். காவல்துறையினர் அங்கு தீர்மானிக்கப்படாத எண்ணிக்கையிலான கைதுகளை மேற்கொண்டனர்.

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதி ரஷ்யாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மொஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரது உடல்நிலை மிக மோசமாக இருந்ததுடன், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜேர்மன் முன்வந்தது. உடனே ரஷ்ய அரசின் அனுமதியுடன் நவல்னி ஒம்சக் நகரில் இருந்து ஜேர்மன் நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி உள்ளானதாக ஜேர்மன் வைத்தியர்கள் தெரிவித்தனர். 

தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார்.

தொடர் சிகிச்சையால் அலெக்ஸி நவல்னி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

ஆனாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து சில நாட்களுக்கு ஜேர்மனிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

தன்மீது நடத்தப்பட்ட கொடிய விஷ தாக்குதலுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும் புட்டின் மீதே குற்றம் சுமத்தின.

இதற்கிடையே, கொடிய விஷத்தால் தாக்குதலில் இருந்து மீண்ட நவல்னி தான் மீண்டும் ரஷ்யாவுக்கு செல்வதாக அறிவித்தார். அதன்படி, ஜேர்மனில் இருந்து விமானம் மூலம் கடந்த 18 ஆம் திகதி ரஷ்ய  தலைநகர் மொஸ்கோ வந்தடைந்த அவரை, விமான நிலையத்தில் ரஷ்ய ‍பொலிஸார் கைது செய்தனர்.

இந் நிலையிலேயே நவல்னியை விடுதலை செய்யக் கோரி தலைநகர் மொஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரது ஆயிர்க்கணக்கான ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52