மூன்றாவது முகமும் மாறாத குணமும்

Published By: J.G.Stephan

18 Jan, 2021 | 03:13 PM
image

-தேசியன் -

ஐக்கிய மக்கள் சக்தியின்  உறுப்பினர் ஹரீன் -பெர்ணான்டோவின் பாராளுமன்ற உரைக்கு, நிகழ்வொன்றில் பதிலளித்து உரையாற்றியிருந்த ஜனாதிபதி கோட்டாபயவின் இரண்டு முகங்கள் குறித்த செய்திகள் கடந்த வாரங்களில் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. 

பாதுகாப்பு செயலாளராக கடும் போக்குடன் செயற்பட்ட நிர்வாக அதிகாரி என்ற முகமும் தற்போது ஜனாதிபதி என்ற பொறுப்பான நிர்வாகியாகவும் அரசியல் பிரமுகராகவும் விளங்கும் தனது இரண்டு முகங்களை பற்றி மட்டுமே அன்று அவர் உரையாற்றியிருந்தார்.

அதை விட பௌத்த பிக்குகள் தன்னை கடும்போக்கு பாதுகாப்பு செயலாளராகவே பார்க்க விரும்புகின்றனர் என்று கூறியதன் மூலம் நாட்டின் அனைத்து பௌத்த சிங்கள மக்களையும் அரசியல்வாதிகளையும் வாய் மூட வைத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய. 

எனினும் பாதுகாப்பு செயலாளராக அவரை அவ்வாறு செயற்பட வைத்ததும் பின்னர் ஜனாதிபதியான பின்னரும் அவ்வாறு பேச வைத்ததும் இராணுவ அதிகாரி என்ற மூன்றாவது முகம் என்ற விடயத்தையும் இங்கு நோக்க வேண்டும். ஜனாதிபதி வேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டவுடனேயே நாடு சர்வாதிகாரத்துக்குள்ளும் இராணுவ ஆட்சிக்குள்ளும் அகப்பட்டுக்கொள்ளப் போகின்றது என எதிர்த்தரப்பினர் அனைவரும் கோ சமிட்டனர். 

ஆனால் பெரும்பான்மையான பௌத்த சிங்கள வாக்குகளால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானார். ஏனெனில் இந்நாட்டின் பௌத்த மேலாதிக்கவாத சிந்தனைகள் அவ்வாறு தான் இருக்கின்றன. சாதாரணமாக அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நினைக்கும் கிராமப்புற சிங்களவர்களும் மத்திய தர வர்க்க சிங்களவர்களும் கூட கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆர்வமாக வாக்களிக்கக் காரணம் அது தொடர்பான பிரசாரங்களை மறைமுகமாக மேற்கொண்டவர்கள் பௌத்த பிக்குகளே.

இந்த நாட்டின் பௌத்த உயர்பீடங்களின் மனங்களில் என்ன இருக்கின்றது என்பதை தனது உரையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ஜனாதிபதி. பேரினவாத சிந்தனைகளுடன் சிறுபான்மை மக்களை அடக்கி ஆளும் ஒரு இராணுவ சாயலான ஜனாதிபதியே தேவை என்ற விடயத்தில் பிக்குகள் உறுதியாக இருக்கின்றனர்.  

எத்தகைய உயர் பதவியிலிருந்தாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தாலும், சிங்கள மொழியில் சரளமாக பேசினாலும் கூட குறித்த நபர் பௌத்தர் அல்லாதவராக இருந்தால் அவர் இந்த நாட்டில் இரண்டாம் பட்ச குடிமகனாகத்தான் பார்க்கப்படுவார். சில நேரங்களில் ஹரீன் பெர்ணான்டோ ஒரு கிறிஸ்தவராக அல்லாது பௌத்தராக இருந்திருந்தால் ஜனாதிபதியின் பதில் அவ்வாறு இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

ஆனாலும் பாதுகாப்பு செயலாளராக தற்போதைய ஜனாதிபதி இருக்கும் போதே போர்க்குற்றச்சாட்டுகள் உட்பட பல விடயங்களில் விமர்சிக்கப்பட்டார். இரண்டு முகம் உள்ளது என அவர் குறிப்பிட்ட அந்த பாதுகாப்பு செயலாளர் என்ற முகத்துக்கு பின்னே என்னவெல்லாம் நடந்திருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பையும் தேடுதலையும் தற்போது அவர் ஆரம்பித்து விட்டிருக்கின்றாரா என்பது தெரியவில்லை. 

ஏனென்றால் பித்தளை சந்தியில் தன் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலிலிருந்து தப்பித்து பின்னர் எப்படி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தை முன்னெடுத்தேன் என அவர் அந்த உரையில் தெரிவித்திருந்தார்.  ஆகவே இவ்வாறு கதைப்பதை இந்த நாட்டின் சிறுபான்மை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வது தான் ஆச்சரியம். இனி என்னவெல்லாம் நடக்குமோ அதே போன்று எப்படியான உரைகளையெல்லாம் கேட்கப்போகின்றோமோ என்ற எதிர்ப்பார்ப்பு தான் அவர்களுக்கு அதிகரித்திருக்க வேண்டும். 

ஆனால் பொது நிகழ்வொன்றில் ஜனாதிபதி அவ்வாறு உரையாற்றியிருப்பது தான் இந்நாட்டின் ஜனநாயகத்தை விரும்பும் சிங்கள பௌத்தர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அச்சமாக உள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ ஒரு பிரதமரை விட அதிகாரம் படைத்தவராக இருந்ததை அனைவரும் அறிவர். அது யுத்த காலகட்டம் என்பதால் பெரும்பான்மை மக்களிடையேயும் பேரினவாத சிந்தனை கொண்டவர்களாலும் அது ஒரு விவகாரமாக இருக்கவில்லை. எதிர்த்தரப்பிலிருந்து மட்டும் அவ்வப்போது சில குரல்கள் கிளம்பின. 

ஒரு அரசாங்க நிர்வாக அதிகாரி எவ்வாறு இப்படி நடப்பது என்று பலர் புருவத்தை உயர்த்தினாலும் அந்நேரம் இடம்பெற்ற பல சம்பவங்கள் அவர்களை அச்சங்கொள்ள வைத்து வாய் மூடச்செய்தது.  அதில் பிரதானமானது வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள். எனினும் தற்போது  மீண்டும் அப்படியான சம்பவங்கள் ஆரம்பித்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதை தவிர்க்க முடியாதுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினராக ஹரீன் பெர்ணான்டோ ஒரு மக்கள் பிரதிநிதி. சாதாரண மக்களுக்கு இல்லாத பல வரப்பிரசாதங்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு உள்ளன. அதில் பாதுகாப்பும் பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. இப்போது தனது உயிருக்கு ஆபத்து என அவர் பொலிஸ் மா அதிபரின் உதவியை நாடி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லையா என தலைநகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் எதிர்த்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கருத்து வெளியிடும் சுதந்திரம்
ஆகவே இங்கு இரண்டு விடயங்களில்  ஜனாதிபதியின் அன்றைய உரை நோக்கப்படுகின்றது.   மக்கள் பிரதிநிதியாக எதிர்த்தரப்பிலிருக்கும் ஒருவர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதற்கு ஜனநாயக உரிமையில்லையா என்ற விடயம் முதலாவதாகும்.

கருத்து வெளியிடும் சுதந்திரம் இந்த அரசாங்கத்தில் முடக்கப்படுகின்றதா என்பது இரண்டாவது விடயம். மட்டுமன்றி உயரிய சபையில் மக்கள் பிரதிநிதி ஒருவர் அரசாங்கத்தை விமர்சித்து கருத்து  வெளியிடுவதற்கு அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் நாட்டின் சாதாரண பிரஜைக்குரிய சுதந்திரம் எவ்வாறு இருக்கும் என்பது அடுத்து எழும் கேள்வியாகும். ஏனென்றால் ஹரீன் பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்துக்கு அவருக்கு உரிய பதில் இன்னும் வழங்கப்படவில்லை.

இச்சந்தர்ப்பத்தில் தனது அணியின் உறுப்பினரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இருக்கின்றார். முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த சம்பவத்தை எதற்கு ஹரீனோடு ஒப்பிட வேண்டும் என்பது அவரது கேள்வியாக உள்ளது. 

தீவிரவாதம் அழிக்கப்படல் வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. அந்த தீவிரவாதத்தால் தான் நான் எனது தந்தையை இழந்தேன் என்று சஜித் கூறியிருக்கும் கருத்தானது பௌத்த சிங்கள மக்களை ஆற்றுப்படுத்தும் ஒரு இராஜதந்திரமாகும். 

தன்னோடு மோதினால் தமிழிழ விடுதலை புலிகளுக்கும் அதன் தலைவருக்கும் நடந்த கதி தான் ஏற்படும் என்ற சாயலில் ஜனாதிபதி பேசியியுள்ளதாகவே சில சிறுபான்மை எம்.பிக்கள் கருதுகின்றனர். 

ஆனால் தீவிரவாதத்துக்கு மதம் ,மொழி , இனம் என்ற விடயங்கள் தேவையில்லை என்பது போன்று இராணுவ குணாம்சங்களும் அப்படியானதே. நாட்டின்  இறைமைக்கு எந்த வடிவத்தில் அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்த்து நிற்பது இராணுவத்தின் பாணி. 

முன்னாள் இராணுவ அதிகாரியாக கடமையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அந்த குணாம்சங்களிலிருந்து விடுபட முடியாது. அவர் இராணுவ சீருடைக்கு ஓய்வு கொடுத்தாலும் உள்ளுக்குள் அந்த செயற்பாடுகள் கனன்று கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது. இது இவருக்கு மட்டுமன்றி இராணுவ அதிகாரியாக பணி புரிந்த அனைவருக்கும் இயல்பாகவே ஏற்படும் குணாம்சங்களாகும். 

ஆனால் இங்கு எழுந்திருக்கும் பிரச்சினைகள் அதுவல்ல. பாதுகாப்பு செயலாளர் என்ற பொறுப்பில் நந்தசேன கோட்டாபய என்ற முகத்தோடு அவர் செயற்பட்டது நாட்டின் தீவிரவாதத்துக்கு எதிராகவாகும். இப்போது நாட்டில் யுத்தம் இல்லை. 

வேறு வடிவங்களில் தீவிரவாத சம்பவங்கள் சிலவற்றுக்கு இலங்கை முகங்கொடுக்கும் அபாயம் உள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நாட்டு மக்களுக்கும் பாராளுமன்றுக்கும் அமைச்சரவைக்கும் தேவைப்படுவது என்னவோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ற முகமாகும். 

இயக்குனர் சங்கரின் அந்நியன் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு வந்து போவது போன்று பல முகங்களைக் கொண்டு ஒரு நாட்டை ஆள்வது சாத்தியமில்லை. அது ஒரு கட்டத்தில் தனக்கு வாக்களித்த 69 இலட்சம் பேரையும் ஆபத்தில் தள்ளும் விடயமாகக் கூட அமையலாம்.

கொரோனாவை அகற்றுவதற்கு நாட்டை  பொருளாதார ஸ்திரப்படுத்தல்களோடு சகஜ நிலைமைக்கு கொண்டு வருவதற்கும் அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதி என்ற முகமே இப்போது இலங்கைக்குத் தேவை.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54