ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது பிள்ளைகளுக்கான பிள்ளைச் செலவுகளைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரின் சடலம் சந்திவெளி பொது மயானத்திற்கருகில்  இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி பிரதான வீதியைச் சேர்ந்த சின்னையா குணரத்தினம் (55 வயது) என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலையடுத்து இச்சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். 

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், பல வருடங்களாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்துவந்துள்ளார். இதனையடுத்து இவரின் மனைவி இவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்த போதிலும் தனது பிள்ளைகளுக்கு செலவுக்கான பணத்தினை செலுத்த முடியாத நிலையில் மறியலில் இருந்து விட்டு வந்தபோது மீண்டும் இவருக்கான வழக்கு தொடரப்பட்டதையடுத்து இவர் நஞ்சருந்தி தற்கொலை செய்த கொண்டதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சடலத்திற்கருகில் போத்தல் ஒன்றும் கிளாஸ் ஒன்றும் காணப்பட்டுள்ளது. சடலம் காணப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட ஏறாவூர் திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸிர் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் சடலத்தில் எவ்வித காயங்களும் காணப்படவில்லை என்றும் கூறினார்.

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்குவருகைதந்து தடயங்களை பரிசோதனை செய்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி கிராமிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இவரின் மரணம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு சடலம் குடம்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை ஏறாவூர்ப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.