திணிக்கப்படும் பௌத்த மேலாதிக்கவாதம்

Published By: J.G.Stephan

12 Jan, 2021 | 04:46 PM
image

 -சஹாப்தீன் -

“இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிக்கப்படாமை மிகப்பாரதூரமான விடயமாகும்”

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டாயிற்று. இலங்கையை ஆட்சி செய்த காலணித்துவ ஆட்சியாளர்கள் காலம் முதல் தற்போது வரைக்கும் அந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம் அரசியல், மதத் தலைவர்கள் மிகவும் புத்திசாதுரியமாகவும், அறிவுபூர்வமாகவும் கையாண்டு வெற்றி கொண்டு வந்துள்ளார்கள். 

பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அவர்களின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட பொறாமையினாலேயே ஏற்பட்டுள்ளன. அத்தோடு பள்ளிவாசல்களும் இடையிடையே தாக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. 

இத்தகையதொரு நிலை வீரியமடைந்து முஸ்லிம்களின் பொருளாதாரம், அரசியல், மதவிழுமியங்களையும் கேள்விக்குட்படுத்தியதோடு மட்டுமல்லாது, கொரோனா வைரஸ் தொற்றினால் மரணிக்கின்றவர்களை அடக்கம் செய்வதற்குரிய உரிமையைக் கூட மறுக்கும் நிலை உருவாகியுள்ளது. 

அரசாங்கத்தின் இந்த மறுப்பினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் முஸ்லிம்களாவார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டமிட்ட ஒடுக்குதல் நடவடிக்கைகளுக்குரிய கருத்துக்களை விதைத்தவர்களில் சம்பிக்க ரணவக்க பிரதானமானவராவார். அவரினால் நவீன முறைப்படுத்தப்பட்ட முஸ்லிம் விரோத நடவடிக்கைகளினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவர்களது சகோதரர்களும் தான் பயன்களை அனுபவிக்கின்றார்கள். 

பௌத்த மேலாதிக்கம்
இலங்கையில் பௌத்த மேலாதிக்கக் கொள்கை இலங்கை சுதந்திரம் பெற்று தோற்றுவிக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தின் காலத்திலிருந்து தீவிரமடைந்து வந்து கொண்டிருக்கின்றன. பௌத்த மேலாதிக்கவாதிகள் இலங்கையைத் தனியே பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமென்றும் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூட அங்கிகரிக்க முடியாதென்றும் உறுதியான கொள்கையை தற்போது வரையில் பின்பற்றுகின்றார்கள். 

1990ஆம் ஆண்டு வரை முஸ்லிம்களின் அரசியல் நடவடிக்கைகள் பெருந்தேசியவாதக் கட்சிகளுடன் தான் இருந்தன. இதனால், முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சியை அழிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்கக் கூடாதென்று சிங்களவர்களிடையே பிரச்சாரம் செய்தார்கள். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை தாக்கினார்கள். அதேசமயத்தில் முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதிகள் முழுமையாக பெருந்தேசியவாதக் கட்சிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தார்கள்.

1989ஆம் ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட இனமுறுகல் நிலை முஸ்லிம்களுக்கு தனியான அரசியல் கட்சி அவசியமென்றதொரு நிலையை தோற்றுவித்தது. அதன்படி முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்றது. இக்கட்சி குறுகிய காலத்தில் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாகவும், ஆட்சியாளர்களை தீர்மானிக்கின்ற கட்சியாகவும் வளர்ச்சியடைந்தது. 

இத்தகையதொரு அரசியல் மாற்றத்தை பௌத்த மேலாதிக்கவாதிகள் விரும்பவில்லை. ஆயினும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்க படைகளுக்கும் இடையே போர் நடைபெற்றதால், முஸ்லிம்களை நேரடியாக எதிர்ப்பதற்குரிய வலுவான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை. 

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததன் பின்னர், முஸ்லிம்களின் அரசியல், பொருளாதார, கல்வி வளர்ச்சியால் பொறுத்துக்கொள்ள முடியாத மனவேக்காட்டுடன் இருந்த பௌத்த மேலாதிக்கவாதிகளும், அத்தகைய தேரர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பகிரங்கமாகவே மேற்கொள்ள ஆரம்பித்தனர். அதனை தற்போதும் திட்டமிட்டபடி முன்னெடுத்தே வருகின்றார்கள். 

முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனையை பௌத்த சிங்களவர்களிடம் அநகாரிக தர்மபால விதைத்தார். அவரின் சிந்தனைகளில் ஈக்கப்பட்டவர் தான் சம்பிக்க ரணவக்க. அவர் 1980ஆம் ஆண்டுகளில் ஜே.வி.பியின் ஆர்ப்பாட்டங்களின் மூலமாக அரசியலில் பிரவேசம் செய்திருந்தார். 

பௌத்த கடும்போக்குவாத சிஹல உறுமய தோன்ற அமைப்புக்களுடனும், இனவாத தேரர்களுடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த சம்பிக்க ரணவக்கவின் வழிகாட்டுதலில் ஜாதிக ஹெல உறுமய எனும் கட்சி 2004இல் உருவாக்கப்பட்டது. இக்கட்சி முழுக்க பௌத்த இனவாத சிந்தனையைக் கொண்டதாகும்.  ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளராக சம்பிக்க ரணவக்க செயற்பட்டார். அண்மையில் இக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

இக்கட்சியின் தோற்றத்திற்கு முன்னர் சம்பிக்க ரணவக்க 1915ஆம் ஆண்டு அநகாரிக தர்மபால முன் வைத்த பௌத்த மேலாதிக்க முஸ்லிம் விரோத சிந்தனையை நவீன காலத்திற்குரிய பொருள்புரட்டுதலுடன் 2003ஆம் ஆண்டு அல் - ஹைதா அல் - ஜிஹாத் எனும் நூலை வெளியிட்டார். 2013ஆம் ஆண்டு மேலும் பல விடயங்களை உள்ளடக்கி நூலை மீண்டும் வெளியிட்டார். இந்நூலில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நூல் சிங்கள மக்களிடையே முஸ்லிம்கள் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியது. 

சம்பிக்க ரணவக்க தனது  சொந்த அரசியல் தேவைக்காகவே இந்நூலை எழுதினார். இந்த நாட்டை எதிர்காலத்தில் தான் ஆள வேண்டுமென்பதே அவரது நோக்கமாகும். அதனால், பௌத்த கடும்போக்கு இனவாதிகளிடம் காணப்பட்ட பௌத்த மேலாதிக்கச் சிந்தனைக்கு தமது நூலின் மூலமாக எழுச்சியூட்டினார். 

முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது பௌத்த இனவாதிகளும், தேரர்களும் செயற்பட்டுக் கொண்டிருப்பதற்கு சம்பிக்க ரணவக்கவின் நூலில் உள்ள கருத்துக்களே அடிப்படையில் காரணமாகின்றன. இனவாதத்தை அடிப்படையகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூலில் உள்ள பல கருத்துக்கள் அறிவார்ந்ததாகயில்லை. முஸ்லிம்களின் மீது போலியான குற்றச்சாட்டுக்களே புனையப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளன.

உதாரணமாக கூறுவதாயின், அந்நூலில் 2090 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்கள் தான் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு முஸ்லிம்களின் மீது பௌத்தர்கள் விரோதம் கொள்ளும் வகையில் அந்நூலில் பல விடயங்களை உள்ளடக்கியுள்ளார். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண்டது போல் தப்பி வந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும் கல்பிட்டியிலும் உள்ள சிங்களவர்களது சொத்து, செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள் என்றும் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

சம்பிக்க ரணவக்க முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி, 2020ஆம் ஆண்டு இலங்கையை தூய பௌத்த நாடாக மாற்ற வேண்டுமென்று திட்டமிட்டார். தனது இந்த திட்டத்தை வெற்றியாக்குவதற்காக பௌத்த இனவாத சிந்தனைகளைக் கொண்டவர்களுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டார். இலங்கை தூய பௌத்த நாடாக்கப்பட்டதும், அதன் ஆட்சிப் பொறுப்பை தான் கைப்பற்ற வேண்டுமென்றும் ஒரு அரசியல் திட்டத்தினை போட்டு வைத்திருந்தார். 

அதன் அடிப்படையில் தான் தற்போது  பௌத்த இனவாதத் தேரர்களும், இனவாதிகளும் முஸ்லிம்களுக்கு நெருக்குவாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள் என்றால், 

எதிர்விளைவு
இவ்வாறு பெரும் அரசியல் கனவுகளுடன் சம்பிக்க ரணவக்க முன்னெடுத்த செயற்பாடுகளின், பயன்களைப் பெற்றுக் கொள்ள அவரினால் முடியவில்லை. சம்பிக்க ரணவக்கவின் அரசியல் நகர்வுகளை மஹிந்த ராஜபக்ஷ மிகவும் சரியாக எடைபோட்டுக் கொண்டார். அவரின் கொள்கையினால் மஹிந்த ராஜபக்ஷ பயனடைந்தாலும், சம்பிக்கவின் அரசியல் நகர்வு தமது வாரிசு அரசியலுக்கு எதிராக நிச்சயம் அமைந்துவிடும் எனக் கருதி அவரை ஒதுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

அது மட்டுமன்றி சம்பிக்கவினால் சிங்கள மக்களிடையே வளர்க்கப்பட்ட பௌத்த மேலாதிக்கச் சிந்தனையை ராஜபக்ஷ சகோதரர்கள் தமது அரசியலுக்காக  அறுவடை செய்து கொண்டார்கள். சம்பிக்கவை புறமொது அவருடைய எழுச்சியூட்டலுக்குள் சிக்கியிருந்த பௌத்த மேலாதிக்கவாதிகளை ராஜபக்ஷ சகோதரர்கள் முறையாக அரவணைத்துக் கொண்டார்கள். 

தமது அரசியல் செயற்பாடுகளில் அவர்களின் ஆலோசனைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். பௌத்த மேலாதிக்க சிந்தனைகளின் மூலமாக சிறுபான்மையினரின் ஆதரவின்றி தேர்தலில் வெற்றி கொள்வதற்குரிய திட்டங்களை வகுத்தார்கள். போர் வெற்றியை தமது திட்;டத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.

2009ஆம் ஆண்டு போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினர், அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ  ஆகியோர் தமது அரசியல் ‘நாயகர்களாக’ சிங்கள மக்களினால் பார்க்கப்பட்டார்கள். 

யுத்த வெற்றியை அரசாங்கம் பெரு விழாவாக நடத்தியது. இதனால், சம்பிக்க ரணவக்கவின் மீது நம்பிக்கை வைத்திருந்து பௌத்த மேலாதிக்கவாதிகள் அவரிடமிருந்து தூரமாகி ராஜபக்ஷ சகோதரர்களுடன் நெருக்கமானார்கள். குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷவின் மீது அதிக நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். 

ஆதலால், சம்பிக்க ரணவக்க போட்ட பாதையில் அவரால் பயணிக்க முடியவில்லை. சம்பிக்க ரணவக்க தனது திட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். ஆயினும், அவர் பௌத்த மேலாதிக்கச் சிந்தனையிலிருந்து விடுபடவில்லை. அவர் இப்போது புதிய அமைப்பொன்றை உருவாக்கி செயற்பட ஆரம்பித்திருப்பதாக தகல்கள் வெளியாகின்றன. 

2003ஆம் ஆண்டு சம்பிக்க ரணவக்கவின் நூலில் உள்ள கருத்துக்களினால் அச்சமடைந்து இருந்த பௌத்த மேலாதிக்கவாதிகள் 2009ஆம் ஆண்டு போர் வெற்றியின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துக்களை முன் வைத்ததோடு, ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டார்கள். ஹலால் உணவு பிரச்சினை, பள்ளிவாசல்களும், மத்ரஸாக்களும் அடிப்படைவாத்தையும், பயங்கரவாதத்தையும் போதிப்பதாகச் சொன்னார்கள். முஸ்லிம் ஹோட்டல்களில் கொத்து ரொட்டிகளில் கருத்தடை மாத்திரை சேர்க்கப்படுவதாகச் சொன்னார்கள். பெண்கள் அணியும் உள்ளாடையில் முஸ்லிம் வர்த்தகர்கள் கருத்தடை மருந்துகளை தடவியுள்ளதாகவும் பரப்புரை செய்தார்கள். 

வைத்தியர் ஷாபி சிங்கள தாய்மார்களுக்கு அவர்களின் அனுமதியின்றி கருத்தடை அறுவை சிகிச்சையை செய்தாகவும் குற்றம் சாட்டினார்கள். முஸ்லிம் பெண்கள் பர்தா, ஹபாயா, ஹிஜாப் போன்ற ஆடைகளை அணிவதற்கு தடை போட வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். இறைச்சிகாக மாடு அறுப்பதை தடை செய்ய வேண்டுமென்றார்கள். பள்ளிவாசல்களை தாக்கினார்கள். முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகளைத் தாக்கினார்கள். 

இவர்கள் தங்களின் தாக்குதல்களின் மூலமாக முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பது மட்டுமன்றி முஸ்லிம் சமூகத்தின் கட்டமைப்பையும், அரசியல் பலத்தையும் சிதைப்பதனையும் நோக்கமாகக் கொண்டார்கள். இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக முஸ்லிம்களை அடக்கி வைப்பதோடு, சிங்கள,பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதே அவர்களின் திட்டமாகும். 

முஸ்லிம்களின் மீதான குற்றச்சாட்டுக்களில் எந்தவொரு ஆதாரமும் இருக்கவில்லை. ஆயினும், சஹ்ரானின் தாக்குதலை தமது குற்றச்சாட்டுக்களுக்குரிய ஆதாரமாக முன் வைத்தார்கள். இத்தாக்குதல் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இற்றைவரையில் முன் வைக்கப்படுகின்றன. அதன் பின்னணி பற்றிய விசாரணைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மறுபக்கத்தில் கொரோனா தொற்றினால் மரணிக்கின்றவர்களை உலக நாடுகளில் அடக்கம் செய்ய முடியும். ஆனால், இலங்கையில் அதற்கு தடை போடப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் உலக நாடுகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை கூட இலங்கையில் மறுக்கப்பட்டுள்ளது. 

அடக்கம் செய்யலாமென்று உலக சுகாதார அமைப்பும், இலங்கையைச் சேர்ந்த மருத்துவத்துறை பேராசிரியர்களும் பரிந்துரைத்த போதிலும், அடக்கம் செய்யும் தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலகவில்லை. முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்கக் கூடாதென்று பௌத்த கடும்போக்கு இனவாதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இவ்விடயத்தில் கூட அரசாங்கமும், பௌத்த மேலாதிக்கவாதிகளும், இனவாதிகளும் விஞ்ஞான அறிவுக்கும், உலக சுகாதார அமைப்பினதும், நாடுகளினதும் அங்கிகாரத்திற்கும் இடங்கொடுக்காது, தாங்கள் சொன்னதுதான் சரியென்று வாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குதல்களில் இது பாரதூரமானதாகும்.

கையறு நிலை
முஸ்லிம்களின் மீது பௌத்த மேலாதிக்கவாதிகளும், ஆட்சியாளர்களும் கெடுபிடிகளை தொடுத்துக் கொண்டாலும், முஸ்லிம் கட்சிகளின் மீதும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் மீதும் முஸ்லிம்கள் ஓரளவு நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், முஸ்லிம் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம் விரோத சக்திகள் நிறைந்துள்ள குட்டையிலேயே முஸ்லிம்களின் உரிமைகளை தேடிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் முஸ்லிம் கட்சிகளின் மீதும், பாராளுமன்ற உறுப்பினர்களின் மீதும் முற்றாக நம்பிக்கை இழந்து “இறiவா எங்களை காப்பாற்று” என்ற கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பெருந் தேசியவாதக் கட்சிகள் எல்லாவற்றிலும் பௌத்த மேலாதிக்கச் சிந்தனைகள் நிறைந்து காணப்படுகின்றன. பௌத்த மேலாதிக்கத்தை வலியுறுத்தினால் தான் ஆட்சியை தக்கவைக்கவும், கைப்பற்றவும் முடியுமென்பதில் அவை அளவு கடந்த நம்பிக்கை கொண்டுள்ளன. பௌத்த மேலாதிக்க கொள்கை தான் ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் என்பதனை அண்மைக் கால ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களும் நிரூபித்துள்ளன. இது இன்னும் எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பதில் சந்தேகங்கள் இருந்தாலும், சிங்கள, பௌத்த மேலாதிக்க போக்கு ஆட்சியை பிடிப்பதற்கு இலகுவழியென்று அறிந்துள்ளனர்.

பௌத்த மேலாதிக்கவாதிகளும், இனவாதிகளும் நிறைந்துள்ள பேரினவாதக் கட்சிகளுடன் தான் முஸ்லிம் கட்சிகள் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. பௌத்த மேலாதிக்கப் போக்காளர்களைக் கொண்டுள்ள பேரினவாதக் கட்சிகள் முஸ்லிம்களின் உரிமைகளுக்கும், நிம்மதியான வாழ்வுக்கும் தேர்தல் காலங்களில் உத்தரவாதம் அளித்தாலும், தேர்தலின் பின்னர் பௌத்த மேலாதிக்கத்தை நிலை நாட்டவே நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. 

முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கும் முஸ்லிம்கள் காரணமாக இருந்தார்கள். ஆயினும், அந்த ஆட்சியில் கூட முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. 

2015ஆம் ஆண்டுக்குப் பின்னரே முஸ்லிம்களின் மீது அதிக தாக்குதல்கள் நடைபெற்றன. குற்றச்சாட்டுக்களும் அதிகரித்தன. முஸ்லிம் பெண்கள் கலாசார ஆடை அணிவதால் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்தார்கள். 

ஆகவே, ஆட்சி மாறினாலும், ஆட்சி மாற்றத்திற்கு முஸ்லிம்கள் காரணமாக இருந்தாலும் ஆட்சியாளர்கள் பௌத்த மேலாதிக்கவாதிகளையும், இனவாத தேரர்களையும் மீறிச் செயற்பட முடியாததொரு அரசியல்(மாய)வலை இலங்கையில் பின்னப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் சிக்கிக் கொண்டுள்ளார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கு முடியாதவர்களாகவும் உள்ளார்கள். இந்தச்சவாலை வெற்றிகொள்வதற்கு அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரையில் காத்திருக்க வேண்டியவர்களாக உள்ளனர் முஸ்லிம்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22