புதிய பொருளாதாரக் கொள்கை - சாத்தியமா?

Published By: J.G.Stephan

11 Jan, 2021 | 05:59 PM
image

- என்.கண்ணன் -

“நடுநிலையான நாடாக, அணிசேரா கொள்கையை கடைப்பிடிக்கும் நாடாகவே, இதுவரை இலங்கை தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாலும், நடைமுறையில் அவ்வாறான கொள்கையை பின்பற்றவுமில்லை, அதற்கான சூழலும் இல்லை”

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடத்துக்குப் பின்னர், புதிய வெளிவிவகாரக் கொள்கையை வகுக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்துக்கான பார்வை என்ற தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு அமைய, 20 அம்ச வெளிவிவகாரக் கொள்கையை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவின் மேற்பார்வையில், இந்த நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. நடுநிலையான- அணிசேராக் கொள்கையை முன்னிலைப்படுத்தியே, இந்த புதிய வெளிவிவகாரக் கொள்கை வகுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, சர்வதேச அளவில் பலம்வாய்ந்த நாடுகளுடன் முரண்படதாத வகையில், வெளிவிவகாரக் கொள்கையை வகுப்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரிகிறது.

தற்போதைய நிலையில் அரசாங்கம் மிகவும் சிக்கலானதொரு சூழலுக்கு முகம் கொடுத்திருக்கிறது.

இலங்கை அரசுடன் கொள்கை ரீதியாக இணங்கிப் போகும் நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.  சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தான், இலங்கையினால் சுமுகமானதும், மிக நெருக்கமானதுமான உறவுகளை முன்னெடுக்க முடிகிறது.

அண்டை நாடான இந்தியாவைக் கூட, இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையினால் திருப்திப்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது. நடுநிலையான நாடாக, அணிசேரா கொள்கையை கடைப்பிடிக்கும் நாடாகவே, இதுவரை இலங்கை தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாலும், நடைமுறையில் அவ்வாறான கொள்கையை பின்பற்றவுமில்லை, அதற்கான சூழலும் இல்லை.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தியப் பெருங்கடலின் முக்கியமானதொரு இடத்தில் இருப்பதால், சர்வதேச சக்திகளின் கவனத்தை எப்போதும் ஈர்க்கின்ற நிலையில் இருக்கிறது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் என்று பல நாடுகளின் கவனம் எப்போதும் இலங்கை மீது இருந்து கொண்டேயிருக்கிறது. இவ்வாறான சூழலில், எதிரும் புதிருமாக உள்ள நாடுகளைக் கையாளும் விடயத்தில் நடுநிலை அல்லது அணிசேரா கொள்கையை கடைப்பிடிப்பது என்பது சிக்கலானதாகவே மாறியிருக்கிறது. அணிசேரா நாடுகளின் அமைப்பு உருவாக்கப்பட்ட போது, அதில் இணைந்து கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. 

ஆனால் அந்தக் கொள்கையை இலங்கை கடந்த காலங்களின் முறையாக பின்பற்றியதா என்ற நியாயமான சந்தேகங்கள் உள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா தலைமையில் நேட்டோ நாடுகளின் அமைப்பும், சோவியத் ஒன்றியத்தின் தலைமையில் வோர்சோ நாடுகளின் அமைப்பும் தோற்றம் பெற்றன.

இந்த இரண்டு நாடுகளின் அணிகளுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கிய போது தான், இந்த இரண்டு அணிகளுக்குள்ளேயும் சிக்கிக் கொள்ள விரும்பாத – இரண்டிலும் இருந்து தப்பிக் கொள்ள விரும்பும் நாடுகள் இணைந்தே, அணிசேரா அமைப்பை உருவாக்கியிருந்தன. இந்தியா, எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து உருவாக்கிய இந்த அமைப்பு இப்பாது செயலிழக்கும் கட்டத்தை எட்டி விட்டது.

ஏனென்றால், இப்போது அமெரிக்கா தலைமையிலான அணி, ரஷ்யா தலைமையிலான அணி என்ற பனிப்போர் இல்லை. உள்ளுக்குள் பல அணிகளாக பிளவுபட்டிருந்தாலும், வெளிப்படையாக உலக வல்லரசுகள், பொருளாதார ரீதியாக இணைந்து செயற்படவே முனைகின்றன. அமெரிக்கா, ர ஷ்யா, சீனா போன்ற போட்டி நாடுகள் பல, பொருளாதார அமைப்புகளில் ஒன்றாக இணைந்து செயற்படுகின்றன.  முன்னணி போட்டி நாடுகளே இணைந்து செயற்படும் நிலையில், அணிசேரா நாடுகள் என்று விலகியிருப்பது, முன்னணி நாடுகளில் இருந்து விலகி நிற்கும் சூழலை ஏற்படுத்தும் என்றே, பல நாடுகளும் கருதுகின்றன.

இதனால் இப்போது அணிசேரா இயக்கத்தின் மீதான கவனமும், கவர்ச்சியும் குறைந்து விட்டது. ஆனால், இலங்கை மாத்திரம் இதனை விட்டு விடத் தயாராக இல்லை. அஅணிசேரா கொள்கை என்பதை வைத்துக் கொண்டு, சர்வதேச சக்திகளின் அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொள்ளாமல், தப்பிக்கப் பார்க்கிறது. அதிலும் கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், அதிகரித்துள்ள சீன செல்வாக்கை நியாயப்படுத்துவதற்கு வழியின்றியே, அணிசேரா கொள்கையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.

சீனாவுடனான நெருக்கத்தைக் கைவிடாமல், ஏனைய நாடுகளையும் அண்ட விடாமல் தடுப்பதற்கே அணிசேரா கொள்கையை அரசாங்கம் கையில் எடுத்திருக்கிறது. சர்வதேச சக்திகளின் அதிகாரப் போட்டிக்குள் சிக்கிக் கொள்வது ஆபத்து என்பதால், அதிலிருந்து விலகியிருக்க முனைந்தாலும், சீனாவிடம் இருந்தும் அதேயளவுக்கு விலகியிருக்கக் கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை.இப்போதைய நிலையில், நிபந்தனையின்றி இலங்கைக்கு உதவிகளை வழங்கக் கூடிய நாடாக சீனாவே இருப்பதால், அதனிடம் இருந்து விலகியிருக்க கொழும்பு  விரும்பவில்லை.

சீனாவை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று அமெரிக்கா போன்ற நாடுகள் எதிர்பார்க்கின்ற நிலையும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் கொழும்பு வந்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ வெளிப்படையாகவே அதற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதற்கு பகிரங்கமாகவே இலங்கை அரசாங்கமும் மறுப்பை வெளியிட்டது.

அதற்குப் பின்னர், இப்போது இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்குவதற்கு, சீனாவிடம் இருந்து இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா நிபந்தனைகளை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது. இலங்கை என்ன தான் நடுநிலை நாடு, அணிசேரா கொள்கை என்று கூறினாலும், வெளியுலகம் அதனை ஏற்கவில்லை என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். இவ்வாறான நிலையை நீடிக்க விடமுடியாத சிக்கலும் இலங்கைக்கு இருக்கிறது. ஏனென்றால் வெளிவிவகாரக் கொள்கையும், பொருளாதாரக் கொள்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய பொருளாதாரக் கொள்கைகள் தான், வெளிவிவகாரக் கொள்கையாக மாற்றம் பெற்றன. முதலாளித்துவ பொருளாதார நாடுகள் நேட்டோவாகவும், சோசலிசத்துவ பொருளாதார நாடுகள் வோர்சோ நாடுகளாகவும் மாறின எனவே, இலங்கை கடைப்பிடிக்கப் போகும் பொருளாதாரக் கொள்கை தான், எதிர்காலத்தில் அதன் வெளிவிவகாரக் கொள்கையாக பார்க்கப்படும்.

 இப்போதைய இலங்கை, மூடிய பொருளாதாரத்தைக் கொண்ட இடதுசாரிப் போக்குடைய நாடாகவே மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு ஆண்டாக வெளிநாட்டு நாணய வெளியேற்றத்துக்கு, தடைவிதிக்கப்பட்டுள்ளது, இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பகிரங்கமாகவே எதிர்க்கத் தொடங்கியிருக்கிருக்கின்றன. வர்த்தகம் என்பது ஒருவழிப் பாதை அல்ல என்று ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் அண்மையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிடம் கூறியிருந்தனர்.

ஆனாலும், அரசாங்கம் வெளிவிவகாரக் கொள்கையிலோ பொருளாதாரக் கொள்கையிலோ விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் மூலம் நாணயக் கையிருப்பை தக்கவைத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறது. சீனாவுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்திக் கொண்டு, ஏனைய  நாடுகளுடனான உறவுகள், வர்த்தகத்தை ஒரு வழிப்பாதையாக முன்னெடுக்க முனைவது நடுநிலையான வெளியுறவுக் கொள்கை அல்ல.

ஆனாலும், இலங்கை அரசு தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதில் உறுதியாகவே இருக்கிறது. இவ்வாறான நிலையில் இருந்து கொண்டு, புதிய  வெளிவிவகாரக் கொள்கை வகுப்பு சாத்தியப்படாது.  இப்போதிருக்கும் கொள்கையை மீளாய்வு செய்யாமல், அதனைப் பூசி மெழுகுவதை புதிய வெளிவிவகாரக் கொள்கை என்று குறிப்பிட முடியாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04