(க.கிஷாந்தன்)

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 3 கிளாஸ்கோ தமிழ் வித்தியாலயத்திற்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இப்பாடசாலையில் 100 இற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தோட்ட புறங்களை சேர்ந்தவர்கள்.

இப் பாடசாலையில் மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்பதற்கு போதிய இடவசதி இல்லாத போதிலும் அதிபர், ஆசிரியர்களின் உணர்வின் பிரதிபலிப்பால் மாணவர்களின் கல்வி தரம் உயர்ந்து காணப்படுகின்றது.

ஏனைய பாடசாலைகளை ஒப்பிடுகையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இன்று ஏனைய பாடசாலைகளில் மாணவர்கள் புதிய தொழில் நுட்பத்துடன் கணனி அறிவுடன் கல்வி கற்றாலும் இப்பாடசாலை மாணவர்கள் மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்த நிலையில் கற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் மாணவர்கள் உள்ளனர்.

மலையக பகுதிகளில் பல பாடசாலைகளில் மின்சாரம் இல்லாமலும் சில பாடசாலைகளில் உரிய நேரத்தில் மின் கட்டணம் செலுத்தாத நிலையில் மின்சாரசபையினால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவர்களின் நலன் கருதி கல்வி அதிகாரிகள் இப்பாடசாலைகளுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.