தமிழ் பிரதேசங்களில், தமிழ் மொழியின் பயன்பாடு: அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ள முக்கிய விடயம்

Published By: J.G.Stephan

05 Jan, 2021 | 01:05 PM
image

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும். மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டும். தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் எழுதப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக  சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் திங்களன்று கலந்துரையாடப்பட்ட போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வீட்டுத் தோட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், பிரதேச மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் தயாரிக்கப்பட்டு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கு நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிலையில், சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் அச்சிடப்பட்டிருந்தமையினால் எழுதப்பட்டிருந்த விடயங்களை புரிந்து கொள்ள முடியாத இளைஞர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரிகளுக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

ஏற்கனவே, மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்கள் அனைத்திலும் தமிழ் மொழி முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்