‘கலைஞர் தி.மு.க’ உருவாகுமா?

Published By: J.G.Stephan

04 Jan, 2021 | 05:20 PM
image

- குடந்தையான் -

தமிழக அரசியல், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டபேரவை பொது தேர்தலை மையப்படுத்தி பரபரப்பாக நகர்ந்துகொண்டிருக்கிறது.

வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சி வெற்றி பெறும் என ஊடகங்களின் மூலமாக பொதுமக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கும் ‘உளவியல் ரீதியிலான உத்தியை, அ.தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சியாக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று தீவிர எண்ணத்துடன் பணியாற்றி வரும் பா.ஜ.க., உடைக்கும் வகையில் சில அரசியல் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறன.

அதில் ஒன்றுதான் நடிகர் ரஜினிகாந்தை புதிய அரசியல் கட்சியை தொடங்க வைப்பது. ஆனால் உடல்நிலையைக் காரணம் காட்டி ரஜினிகாந்த் அரசியலுக்கே முழுக்குப் போட்டுவிட்டார். மற்றொன்று தி.மு.க.வின் அதிருப்தியாளராக இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் ‘கலைஞர் தி.மு.க’ என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சி தொடங்க வைப்பது.

இது தொடர்பாக பா.ஜ.க. கட்சியின் மேலிட பார்வையாளர்களில் சிலர், அழகிரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அவரும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த திட்டத்தின் படி மு.க.அழகிரி ஜனவரி 3ஆம் திகதியன்று மதுரையில் பிரம்மாண்ட ஆதரவாளர்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்கிறார். தமிழகம் முழுவதிலிருந்தும் ஸ்டாலின் தலைமைக்கு எதிராக அதிருப்தியிலிருக்கும் நிர்வாகிகளை அணுகி ஆதரவு திரட்டி வருகிறார்.

 இந்த கூட்டத்தில் அவர் ‘கலைஞர் தி.மு.க.’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவது குறித்தும், மத்தியிலுள்ள பா.ஜ.க.வின் ஆதரவு நிலைப்பாடு குறித்தும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் விவாதிக்க இருக்கிறார். அவருடைய இந்த திட்டம் வெற்றிபெற்றால், அது தி.மு.க.வின் நிரந்தர வாக்கு வங்கியில் பலவீனத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதனை நன்கு உணர்ந்திருக்கும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வினர், இது தொடர்பாக அழகிரியின் நடவடிக்கையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்கள். அதே தருணத்தில் அழகிரியின் நடவடிக்கையை பொறுத்து அவருடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் ஸ்டாலின் தரப்பு தயாராக இருக்கிறது என்ற செய்தியையும் கசிய விட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தி.மு.க.விற்குள் உதயநிதி முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதை இரசிக்காத கனிமொழி, அழகிரியின் நடவடிக்கைக்கு தன்னுடைய மறைமுகமான ஆதரவை வழங்கி வருகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அதிலும் குறிப்பாக காணொளி தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக சாதாரண பொதுமக்கள் கூட ஜனநாயகத்தை அவதானிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் தலைவர்களின் பட்டியலில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இருக்கிறார்.  இவருக்கு அடுத்தபடியாக தன்னுடைய உடல் நலக் குறைபாட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க இயலாத நடிகர் ரஜினிகாந்த் இந்த காணொளி தொழில்நுட்பத்தை சரியான தருணத்தில் பயன்படுத்தவிருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு தேர்தலின் போது அவரின் ‘வாய்ஸ்’ வாக்காளர்களிடையே சரியானதொரு மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அதேபோன்றதொரு காணொளியை அவர் தேர்தலுக்கு முன் வெளியிடக்கூடும் என அவரின் அரசியல் வழிகாட்டியான ஆடிட்டர் குருமூர்த்தியும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் அரசியலிலிருந்து விலகியிருக்கும் ரஜினிகாந்த், வெளியிட்ட, மூன்று பக்க அறிக்கையில், ‘தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ, அதை நான் செய்வேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகவே ரஜினி தேர்தலுக்கு முன் அறிக்கைகளை வெளியிடுவார் என்றும், காணொளியை வெளியிட்டு, தன்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை தெரியப்படுத்துவார்? என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஏற்படுத்தாதா? என்பதை காலம் தான் பதிலளிக்கும்

மேலும் ரஜினியின் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றமுடிவால் அ.தி.மு.க. தலைமை தான் உண்மையில் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. ஏனெனில் அவர் கட்சியைத் தொடங்கியவுடன் அக்கட்சியில் இணைய முன்னாள் மேயர்கள், முன்னாள் சட்டமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தயாராகயிருந்தனர்.

தற்போது அந்த நிலை ஏற்படாது என்பதால், அவர்களின் ஆதரவு அ.தி.மு.க.விற்கு முழுமையாக கிடைக்கும் என்பதாலும் சந்தோஷமாகயிருக்கிறது. அதேபோல் ரஜினியின் திடீர் முடிவு, தி.மு.க.விற்கு, பா.ஜ.க. ஏற்படுத்திய இரண்டு மாய தடைகளில் ஒன்று உடைந்திருக்கிறது என்பதால் மகிழ்ச்சியடைந்திருக்கிறது.

இந்நிலையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.விற்கு அதன் கூட்டணிக் கட்சிகளில் மிகவும் குறைவான வாக்கு வங்கியை வைத்திருக்கும் பா.ஜ.க. தொடர்ந்து நெருக்கடியை கொடுத்து வருகிறது. அக்கட்சியின் மாநில தலைவர்கள், “அடுத்து வரவிருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி. அந்த கூட்டணி அமைச்சரவையில் பா.ஜ.க. இடம்பெறும். முதல்வரை பா.ஜ.க. தான் தீர்மானிக்கும் என்று பேசி வருகிறார்கள்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்தின் போது, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி, ‘தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தான்  ஆட்சி  அமையும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது, எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர், இதனை கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று” சற்று உரத்த குரலில் வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ.க., “தங்களுடைய கருணை பார்வையினால் தான் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீடிக்கிறார். அவர் முதல்வராக இல்லாமல் இந்த தேர்தலை எதிர்கொள்வது கடினம். நாங்கள் நினைத்தால் சசிகலாவை சரியான கோணத்தில் பயன்படுத்தி, அ.தி.மு.க.வில் மீண்டும் பிளவினை ஏற்படுத்தி, தேர்தலில் அக்கட்சியை எளிதாக வீழ்த்தி விடுவோம். இந்த யதார்த்தத்தை எங்களுக்கு எதிராக பேசும் அ.தி.மு.க.வினர் உணரவில்லை” என்று பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதனை ஓரளவு உணர்ந்து தான் முதல்வர் எடப்பாடியார், பல விடயங்களில் மத்திய அரசுக்கு வளைந்து கொடுத்து கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

‘அம்மா மினி கிளினிக்’ ,‘2500 ரூபா உடன் பொங்கல் பரிசு’, அதனை அ.தி.மு.க.வின் நிர்வாகிகள் மூலம் வழங்க செய்வது, ‘ஒரே ஆண்டில் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியது’ என பல்வேறு சாதனைகளை செய்திருக்கும் அ.தி.மு.க., மக்களை துணிச்சலுடன் சந்தித்து வருகிறது.

ஆனால் தேர்தலில் வெற்றிப் பெற்றால் மட்டுமே அரசியலில் எதிர்காலம் உண்டு என்ற விளிம்பு நிலை கட்டாய சூழலில் இருக்கும் அ.தி.மு.கவு.ம், முதல்வர் எடப்பாடியாரும், கட்சியை கணிசமாக வெற்றி பெறவைக்க என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிவிற்கு வந்துவிட்டதைத்தான் காணமுடிகிறது.

சட்டபேரவைத் தேர்தலுக்கான நடைமுறையில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தி.மு.க.வையும், அதன் கூட்டணி கட்சிகளையும் பலவீனப்படுத்தினால் மட்டுமே தங்களின் வெற்றி சாத்தியமாகும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்திருப்பதால் அதனை முன்னிறுத்தி தான் தங்களின் அரசியல் நகர்வை மேற்கொண்டு வருகிறது.

‘கலைஞர் தி.மு.க.’ என்ற பெயரில் மு.க.அழகிரி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கக்கூடும். அதற்கு அவரின் நண்பரான ரஜினிகாந்த் ஆதரவளிக்கக்கூடும். அவருடைய இரசிகர்களும், ஆதரவாளர்களும் எதிர்பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இத்தகைய அரசியல் நிகழ்வு ஏற்படுமா? அல்லது வேறு ஏதேனும் மாற்றம் ஏற்படுமா? என்பதையும், ரஜினிகாந்த் அறிவித்த ‘ஆட்சி மாற்றம் மற்றும் அரசியல் மாற்றம்’ எப்போது நடைபெறும் என்பதையும் காணணொளி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் தமிழக வாக்காளர்கள் அவதானித்துக் கொண்டேயிருக்கிறார்கள். தமிழகத்தில் அரங்கேறும் அரசியல் கூத்துகளுக்கு அவர்களின் எதிர்வினை என்ன?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13