நம்முடைய இனம் நிறைய வித்தியாசமான துறைகளை தேர்ந்தெடுத்து எல்ல துறைகளிலும் சிகரங்களை அடைய வேண்டும் என்பதே எனது ஆசையென டென்மார்க்கின் துணைவிமானியான இலங்கையின் தமிழ்ப்பெண் அர்ச்சனா செல்லத்துரை வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இலங்கை யாழ்ப்பாணம் வல்லையைச் சேர்ந்த அர்ச்சனா செல்லத்துரை, டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியாக கடமையாற்றி வருகின்றார்.

டென்மார்க்கில் ஆசிரியர் பயிற்சி முடித்து டேனிஸ் மொழி ஆசிரியையாக இருந்த இவர் , விமானியாக படிப்பதற்காக அமெரிக்கா சென்று மியாமியில் டீன் இன்ரநாஷனல் விமானிகள் கற்பித்தல் கல்லூரியில் படித்து சித்தியடைந்துள்ளார்.

இந்நிலையில் அவர் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்,

விமானியாக வேண்டும் என்ற பயணம் இன்றோ நேற்றோ தொடங்கியதல்ல. நான் யார்? என்னால் என்ன முடியும்? இந்த சமுதாயத்திற்கு என்ன செய்யவேண்டும்  அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு நான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

நான் விமானி படிப்பை முடித்து விட்டு எனது பேஸ்புக்கில் ஒரு பதிவொன்றை இட்டேன். நான் கொஞ்ம் கூட எதிர்பார்க்கவில்லை தமிழ் மக்களிடம் இருந்து இவ்வளவு அன்பும் ஆதரவும் எனக்கு கிடைக்குமென.

ஆனால் இந்த அன்பும் ஆதரவும் எனக்குமட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். அதேவேளை, பெண்களுக்கு மட்டுமல்ல நம்முடைய இனம் நிறைய வித்தியாசமான துறைகளை தேர்ந்தெடுத்து எல்ல துறைகளிலும் சிகரங்களை தொட வேண்டும் என்பதே எனது ஆசை என தெரிவித்துள்ளார்.