எம்.ஜி.ஆர் அவதாரமெடுக்க துடிக்கும் ரஜினி கமல்...!

Published By: J.G.Stephan

27 Dec, 2020 | 06:14 PM
image

-குடந்தையான்-

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல், இதுவரை இல்லாதவொரு வித்தியாசமான சூழலில் அரங்கேறப்போகிறது. முதன் முறையாக, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என்ற, தமிழகத்தின் இரண்டு மாபெரும் கட்சிகளின் அரசியல் அடையாளங்களாகத் திகழ்ந்த அனுபவங்கள் நிறைந்த, முத்தமிழ் வித்தகர் கலைஞர் கருணாநிதி மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா இருவரும் இல்லாத முதலாவது தேர்தல் களமாக இது அமையவிருக்கிறது.

அதுமட்டுமன்றி, இந்தத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., ‘நாம் தமிழர்’ சீமான், சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா, அ.ம.மு.க.வின் டி.டி.வி.தினகரன், இவர்களுடன் ரஜினி, கமல் ஆகியோரும் தத்தமது கட்சிகள் சார்பில் களம் காணவுள்ளனர். எனவே, அனைத்து பிரதான கட்சிகளின் வாக்கு வங்கிகளும் கணிசமான வாக்குச்சரிவை எதிர்நோக்கும் கட்டாயச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

‘அண்ணன் எப்போது போவான், திண்ணை எப்போது காலியாகும்?’ என்று காத்திருந்ததுபோல், இரண்டு கட்சிகளிலும் வெற்றிடங்கள் தோன்றியதையடுத்து தமிழ்த் திரையுலகின் இரு உச்ச நட்சத்திரங்களான ரஜினியும் கமலும் அரசியல் களத்தில் குதித்திருக்கின்றனர். 

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிலும் அடுத்த தலைமுறைத் தலைவர்களை அதிரடியாகத் தோற்கடிப்பதன் மூலம்தான் தமது அரசியல் இருப்பை உறுதி செய்ய முடியும் என்று இரண்டு நட்சத்திரங்களும் எதிர்பார்க்கின்றன. ரஜினி பாணியில் சொல்வதானால், ‘இப்போ இல்லேன்னா எப்போதும் இல்லை’ என்பதே அவர்களின் நிலைப்பாடாகின்றது. 

இதில் கமல் சற்றே முன்பே அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்து விட்டார். ஆனால் ரஜனி இறுதிக் கட்டத்தில் தான் களத்திற்கே வந்திருக்கின்றார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரைப் போலவே கமலும் ரஜனினும் திரையுலகத்தை அரசியலுக்கான பின்னணியாகக் கொண்டிருப்பதும் சுவாரசியமானதொரு ஒற்றுமை. ஆனால், ரஜினி, கமல் இருவரும் மாபெரும் கலைஞனும் மதியுட்ப அரசியல்வாதியுமான எம்.ஜி.ஆரின் ‘சாயத்தினை’ தமக்குப் பூசிக்கொள்ள நினைப்பது தான் கொஞ்சம் பிசிறு தட்டுகிறது.

தனது மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மதுரையிலிருந்து தனது பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார் கமல்! தனது கட்சியின் பெயரை முதன்முதலில் கமல் அறிவித்ததும் இதே மதுரையில் தான். மேற்புறம் திறந்த வாகனத்தில், தனது இடுப்பளவு தோற்றத்தை வெளிக்காட்டியபடியே மதுரை வீதிகளில் அவரது பிரசாரம் தொடர்ந்து கொண்டு வருகிறது. அப்படியே தென்தமிழக மாவட்டங்களைச் சுற்றிவிட்டு சென்னை திரும்பும் திட்டத்தில் இருக்கிறார் கமல்.

மதுரையில் தனது முதல் பிரசாரத்தின்போது, மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலை நகராக்கும் எம்.ஜி.ஆரின் திட்டத்தைத் தூசு தட்டியிருக்கும் கமல், ‘எம்.ஜி.ஆரின் நீட்சியான நான் அவரது கனவை நிறைவேற்றுவேன்’ என்று குறிப்பிட்டார். 

இது, மதுரை மக்களின் மனங்களை வெல்வதற்கான ஒரு உத்தியாக எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைத் தனக்குப் பொருத்திக்கொண்டு, அதன்மூலம் தனது கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சியாகவும் கொள்ளலாம். ஏனென்றால் இங்கு ஒருபொழுதில் தான் எம்.ஜி.ஆரின் மடியில் இருந்தவன் என்றும் கூறுகின்றார் அல்லவா?

மறுபுறம் ரஜினி, கமலுக்கு முன்பே அரசியல், கட்சி என்று தண்டோரா தட்டி வந்தவர் இவர் சுமார் இருபதுக்கும் அதிகமான வருடங்களுக்குப் பின்னரே ‘துணிந்து’ ஒரு கட்சியை உருவாக்கி இந்தத் தேர்தலில் போட்டியிட விருக்கிறார். இன்னும் கட்சியின் பெயரைக்கூடத் தெரிவிக்காத ரஜினி, எதிர்வரும் 27ஆம் திகதி சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு தனது பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ளதாகத் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார். 

பிரசாரம் இன்னும் ஆரம்பிக்காத நிலையில்கூட, கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் தான் வெற்றி பெற்றால், எம்.ஜி.ஆரின் ஆட்சியைத் தருவதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அவர் வழியிலேயே செல்லவுள்ளதாகவும் உறுதிபடக் கூறுகின்றார்.

தனது தனிக்கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று மார்பு தட்டிக்கொண்டிருக்கும் ரஜினி, பிரசாரப் பயணம் நெருங்க நெருங்க, எம்.ஜி.ஆரைத் துணைக்கு அரவணைத்துக் கொண்டிருப்பது, ‘அரசியலின் ஆழம்’ அவருக்குத் தெரிந்து விட்டதைத் தான் உணர்த்துகிறது. அதன் இன்னொரு வெளிப்பாடுதான் பா.ஜ.க. ஆதரவுப் போக்கு.

எப்படியாவது தமிழகத்தில் திராவிடக் கட்சிகளைச் சிதறடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் பா.ஜ.க., ரஜினியைத் தம் பக்கம் வளைத்து விட்டிருப்பதை, மத்திய அரசு குறித்த ரஜினியின் அண்மைக்கால ‘அடக்கிவாசிப்பு’ அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது.

இதற்கிடையில், ரஜினியுடன் இணைந்து ஓரணியில் போட்டியிடவும் தான் தயாராக இருப்பதாக கமல் குறிப்பிட்டிருக்கிறார். இது சாத்தியமா? ரஜினி, தமிழக முதலமைச்சர் நாற்காலியைக் குறிவைத்து தேர்தலில் போட்டியிடுகிறார். கமலும் அதற்காகத் தான் களத்தில் இருக்கின்றார். 

என்றாலும் தனது திரைப்படங்களைப் போலவே ஒரே தேர்தலில் முதல்வராக வேண்டும் என்ற பேராசை ரஜினியிடம் இருக்கிறது. இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள, பா.ஜ.க.வின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள ரஜினி விரும்புகிறார். 

ஆனால், பகுத்தறிவாளரான கமல், தீவிர இந்துத்துவ ஆதரவுக் கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர ஒருபோதும் விரும்பமாட்டார். அதுமட்டுமன்றி மதத்தினை முன்னிலைப்படுத்தவும் இடமளிக்க மாட்டார். எனவே, கமலும் ரஜினியும் ஓரணியில் இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அரிதிலும் அரிதாகவே இருக்கிறது.

மேலும் எந்த விடயத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை கமலின் கூடப் பிறந்த குணம். வெள்ளித்திரையின் சர்வதேச அங்கீகாரமாக விளங்கும் ஒஸ்கார் விருதைப் பெறும் முதல் தமிழனாக, தானே இருக்க வேண்டும் என்ற வேணவா அவரிடம் இருந்தது. 

ஆனால், ஒரே படத்தில் இரண்டு ஒஸ்கார்களை இசைப்புயல் பெற்ற பிறகு, ஒஸ்கார் விருதுகள் குறித்த எந்தவொரு ஈடுபாட்டையும் கமல் வெளிப்படுத்தவில்லை. அப்படியே அமைதியாகிவிட்டார். 

அதுபோலவே, ரஜினி,  கமல் இருவரும் ஒன்றாக இணைத்து தேர்தலில் களம் கண்டால் கூட, அவர்கள் அணியாக வெற்றி பெறும் பட்சத்தில் முதலமைச்சர் பதவி, நாற்காலி என்று வரும்போது அது இருவரது சுயரூபத்தையும் வெளிப்படுத்திவிடும் ஆபத்தை நிறைவே கொண்டுள்ளது. ஆகவே அத்தகையதொரு நிலைமை உருவாகுவதை பொதுவெளியில் இருவரும் விரும்ப மாட்டார்கள். எனவே ரஜினி, கமல் அரசியல் கூட்டணி என்பது காணல் நீராகத்தான் இருக்கும்.

ரஜினி, கமல் இருக்கட்டும். அவர்களது வெற்றியை, அவர்களது ஆட்சியை மக்கள் விரும்புகிறார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. காரணம், கள நிலைமகள் அவ்வாறு தான் உள்ளன. 

பதாதைகளுக்கு பாலபிஷேகம் செய்யும் இரசிகக் கண்மணிகள், ரஜினியும் கமலும் அரசியலுக்கு வரவேண்டும், ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. அவ்வாறானதொரு நிலைமை பெரும்பான்மை மக்களால் விரும்பப்படுவதாகச் சித்திரிக்கப்பட்டாலும் யதார்த்தம் என்னவோ அதற்கு நேர்மாறாகத்தான் இருக்கிறது.

குறிப்பாக, ரஜினியிடம், தனது அரசியல் பிரவேசம் குறித்து தெளிவானதொரு உறுதிப்பாடு இல்லை. இன்னுமே ‘அவசரப்பட்டு விட்டோமோ’ என்ற தடுமாற்றம் ரஜினியிடம் வெளிப்படையாகவே தெரிகிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றாலன்றி, தொடர்ந்து அவர் அரசியலில் இருக்கப்போவதில்லை. 

எனவே, அரசியல் நெடும்பயணத்துக்குத் தயாராக இல்லாத ரஜினியை, தமிழக வாக்காளர்கள் தமது தெரிவாக்கிக்கொள்ள மாட்டார்கள். ஒரு திரைப்படத்தையே அதன் கதை, திரைக்கதை, வசனம், இசை, காட்சி சேர்ப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என்று அக்கக்காகக் கழற்றிப் பார்த்து, அவை திருப்தி தந்தால் மட்டுமே திரையரங்குக்குப் போய் படம் பார்க்கும் கலாசாரம் தமிழகத்தில் எப்போதோ துளிர்விட்டுவிட்டது. 

மேலும் திரையுலகம் வேறு, நிஜ வாழ்க்கை வேறு என்பதையும் தமிழக மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தமது திரையுலக பிம்பத்துக்கு இருக்கும் வரவேற்பை மட்டுமே நம்பி அரசியலில் குதித்திருக்கும் ரஜினி-கமல் ஆகியோருக்கு நிறைவே உள்ள ‘அதீத நம்பிக்கை’ தான் முதலீடாக உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13