முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட காலத்தில் உடலியல் ரீதியில் ஏதாவது கெடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது தொடர்பில் எமக்கு முறைபாடுகள் முன்வைக்கப்பட்டால் நாம் அவர்களுக்கு உடற்பரிசோதனை நடத்துவதற்கு தயாராகவிருக்கின்றோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளார் மாநட்டில் கலந்து கொண்டிருந்த அமைச்சரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அதாவது வடக்கில் இடம்பெறும் நல்லிணக்க பொறிமுறை குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட முன்னாள் போராளியொருவர் தமக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டபோது ஊசி போடப்பட்டதாகவும் இதனால் தான் தற்போது சக்தி இழந்து காணப்படுவதாகவும் கூறியிருந்தார். அத்துடன் முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச தரம்வாய்ந்த உடற்பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் காரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், 

இது தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டால் முன்னாள் போராளிகளுக்கு உடற்பரிசோதனை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் இது வரை எமக்கு அவ்வாறான எவ்விதமான அறிக்கையும் கிடைக்கப் பெறவில்லை. முறைப்பாடு வந்தால் நாம் பரிசோதனை செய்வோம். 

கேள்வி சர்வதேச மட்டத்திலான பரிசோதனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதியொருவர் கோரியுள்ளாரே ? 

பதில் இலங்கையில் சர்வதேச தரம்வாய்ந்த மருத்துவர்கள் இருப்பதாக சர்வதேசம் கூறியுள்ளது. எனவே இங்கு பரிசோதனை நடத்தலாம். ஆனால் கடந்த ஏழு வருடங்களாக இவர்கள் எங்கே இருந்தனர். ஏன் இதனை வெ ளியில் கூறவில்லை என்ற கேள்வி எழுகின்றது. தற்போதுதான் வெ ளியில் கூறுகின்றனர். அப்படியிருந்தும் நாங்கள் பரிசோதனை நடத்துவோம் என்றார். 

ஊசிபோட்டதாக கூறப்படும்  குற்றச்சாட்டை நிராகரிக்கின்றோம் : மிருகத்துக்குக்கூட விஷம் கொடுத்ததில்லை என்கிறார்  இராணுவ பேச்சாளர்  

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டபோது ஊசி போடப்பட்டதாகவும் இதனால்  தற்போது அவர்கள் சக்தி இழந்து காணப்படுவதாகவும் கூறப்படுவதை இராணுவம் முற்றாக நிராகரிக்கிறது. எமது இராணுவம் ஒரு மிருகத்திற்குக்கூட விஷத்தைக் கொடுத்ததில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகெடிய ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார். 

இந்த குற்றச்சாட்டை முழுமையாக இலங்கை இராணுவம் மறுக்கிறது. இலங்கையானது பௌத்தத்தை பிரதானமாகவும் ஏனைய மதங்களை முக்கியமானதாகவும் மதிக்கின்ற பின்பற்றுகின்ற ஒருநாடு. இந்நிலையில் நாங்கள் இது போன்ற ஒரு குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கின்றோம். மறுக்கின்றோம். 

எமது இராணுவம் எமது இராணுவம் ஒரு மிருகத்திற்குக்கூட விஷத்தைக் கொடுத்ததில்லை என்றார்.