மீண்டும் சுமத்தப்படும் பழி

Published By: J.G.Stephan

20 Dec, 2020 | 04:38 PM
image

-கார்வண்ணன்.

 குடாநா ட்டில் மாவீரர் நாளை தடுப்பதற்கோ, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதற்கோ அந்த சோதனைச் சாவடிகளை இறுக்கி வைத்திருக்கும் அரச தரப்பு, ஏன் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை?

மினுவங்கொட- பேலியகொட கொத்தணிகளில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவத் தொடங்கிய போது, மக்கள் தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. பிரான்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் தான் இரண்டாவது அலை பரவத் தொடங்கியது.

அந்தப் பரவலுக்கு மூலகாரணம், உக்ரேனில் இருந்து வந்து தங்கியிருந்த விமானப் பணியாளர்கள் தான் என்று, முடிவுக்கு வரக் கூடியதாக உள்ளது என அண்மையில், இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னான்டோ புள்ளே பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

வெளிநாட்டவர்கள் மூலம் தொற்று பரவியதற்கு அரசதுறைகளின் கொரோனா கட்டுப்பாட்டு செயல்முறைகளின் பலவீனமே காரணமாக அமைந்திருந்தது.

அந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமலேயே, மக்களின் பொறுப்பீனத்தினால் தான், கொரோனா பரவியது என்று ஜனாதிபதி குற்றம்சாட்டியிருந்தார்.

அதே பொறுப்பீனத்துடன் தான் இப்போது, வடக்கு மக்களின் மீது, ஜனாதிபதியின் பிரதிநிதியான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ், மக்கள் பொறுப்பின்றி நடந்து கொள்வதால் தான், தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில், புரவிப் புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த கடும் மழையினால், கடுமையான வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மக்களின் பொறுப்பீனத்தினால் தான், வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

எதுநடந்தாலும், மக்களையே பொறுப்பாளியாக்குவது, அவர்களின் பொறுப்பீனத்தினால் தான் நடந்தது என்று குற்றம்சாட்டுவது, தற்போதைய  அரசாங்கத்தில் ஒருவித நோயாகவே மாறியிருக்கிறது. மருதனார்மடம் சந்தையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர், அரசாங்க கட்டமைப்புகள் செயற்பட்ட விதம் குறித்து, மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது.

தொற்றாளர் எண்ணிக்கை விபரங்கள் மறைக்கப்பட்டதாக பலரும் கருகிறார்கள். பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் தொடர்பாக, வெளியிடப்பட்ட தகவல்களிலும் சந்தேகங்கள் எழுப்புகின்றனர்.

மருதனார்மடம் சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர். சோதனைகளை முன்னெடுப்பதில் விரைவான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படவில்லை.

யாழ். போதனா மருத்துவமனை மற்றும் யாழ் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் தடையின்றி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அனுராதபுரத்துக்கு அனுப்பப்படும் மாதிரிகள் குறித்த அறிக்கை கிடைக்க 3 நாட்களுக்கு மேல் செல்கிறது.

அதைவிட, இரண்டாவது நாளில் 31 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய போதும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் அறிவிக்கப்பட்ட முடக்க நிலையை நீக்குவதற்காக, அவர்களுக்கு மீள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்தேகங்கள் உள்ளன.

அதற்கும் அப்பால், வலிகாமம் பிரதேசத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலும், அந்தப் பிரதேசங்களைத் தனிமைப்படுத்தி முடக்கும் நடவடிக்கைகளில் போதிய அக்கறை செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. உடனடியாக இரவோடு இரவாக உடுவில் பிரதேச செயலர் பிரிவு முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், அடுத்தநாள் அந்தத் தடை, யாரும் எதிர்பாராத வகையில் நீக்கப்பட்டது.

பரவலாக தொற்றாளர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை முடக்குவதால் பயனில்லை என்ற அடிப்படையிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறயிருந்தார் அரச அதிபர்.

முடக்க நிலை நீக்கப்பட்ட பின்னரே, மேலும் 26 பேருக்கு தொற்று இருக்கும் தகவல் வெளியிடப்பட்டது.

முடக்கநிலையை அறிவித்தால், குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்க வேண்டும். அதற்கு பெருமளவு செலவு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்யடே அவசர அவசரமாக முடக்க நிலை தளர்த்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இவ்வாறான பல்வேறு குழறுபடிகள் அரசதரப்பில் இருந்த போதும், வடக்கின் ஆளுநர் மக்களின் மீது பழியைப் போட்டிருக்கிறார்.

இந்தளவுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதாகவும், அவர்கள் அதிகளவில் சுகாதார நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதால் தான், தொற்று குறைவாக உள்ளதென்றும், கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி சில வாரங்களுக்கு முன்னரே பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

நாட்டின் பிற பகுதிகளை விட, யாழ்ப்பாணக் குடாநாடு அதிகளவு பாதுகாப்புடன் தான் இருந்து வந்தது. அதனால் தான் இராணுவத் தளபதி இவ்வாறு பாராட்டுக் கூறியிருந்தார்.

ஆளுநர் குற்றம்சாட்டிய பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த,  இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, யாழ்ப்பாண மக்கள் கட்டுப்பாடாக நடந்து கொள்வதாக மீண்டும் பாராட்டுத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறிருக்க, மருதனார்மடம் சந்தையில் கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்களின் மீது கண்மூடித்தனமான முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அபத்தமானது. இந்தளவுக்கும், மருதனார்மடம் சந்தையில் முதலில் கண்டறியப்பட்ட தொற்றாளர் தான், அந்த கொத்தணியின் முதல்நிலை தொற்றாளர் என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவோ, அல்லது அவருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்று இன்னமும் உறுதியாக கண்டறியப்படவோ இல்லை.

சந்தைகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளுக்கான பி.சி.ஆர். சோதனைகளை வேகப்படுத்த முடியாததால் தான், வடக்கில் உள்ள எல்லாச் சந்தைகளையும் மூடும் நிலையில் தான் அரசாங்கத் துறையின் வேகம் இருக்கிறது.

இவற்றுக்கு அப்பால் யாழ்ப்பாணத்துக்கு தொற்று வந்த வழி இன்னமும் கண்டறியப்படாத நிலையில், தெற்கில் இருந்து வந்த மக்கள் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தாமல் இருந்தனர் என்ற குற்றச்சாட்டை வடக்கு ஆளுநர் முன்வைத்திருக்கிறார்.

இவ்வாறான தவறுகள் நடக்கவில்லை என்று யாரும் கூற முடியாது. ஆனால், இவ்வாறான தவறுகளை தடுக்கின்ற வாய்ப்புகளும் வசதிகளும் அரசாங்கத்துக்கு இருப்பதை ஆளுநர் மறந்து விட்டார். யாழ்ப்பாண குடாநாடடுக்கு இரண்டே இரண்டு நுழைவாயில்கள் தான் உள்ளன. ஆனையிறவு ஒன்று, சங்குப்பிட்டி இன்னொன்று.

இவற்றில் சோதனைச் சாவடிகளை அமைத்து  உள்ளே வருபவர்களை பதிவு செய்து அனுப்பும் பொறிமுறையை உருவாக்கியிருக்க முடியும். மாவீரர் நாளை தடுப்பதற்கோ, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதற்கோ அந்த சோதனைச் சாவடிகளை இறுக்கி வைத்திருக்கும் அரச தரப்பு, ஏன் இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த நடவடிக்கையை எடுக்கவில்லை?

இவற்றைச் செய்யாமல் விட்டு, குடாநாட்டுக்கு வந்தவர்கள், பொறுப்பீனமாக நடந்து கொண்டனர், தகவல் தரவில்லை என்று குற்றம்சாட்டுவது முறையல்ல.

கொரோனா தொற்று ஒரு வருட நிறைவைக் கொண்டாடப் போகின்ற நிலையில் கூட, வடக்கில் அரசதுறை இதனை கட்டுப்படுத்துவதற்கு, முறையான ஒருங்கிணைப்பை செய்யாமல், பழியை மக்களின் மீது போட்டுத் தப்பிக் கொள்ள முனைகிறது.

இது, யார் தவறிழைத்தனர் என்று மல்லுக்கட்டும் நேரம் இல்லை - பொறுப்பானவர்கள் பொறுப்பை உணர்ந்து செயற்படும் நேரம் என்பதை மறந்து விடலாகாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04