தீராத குழப்பமும் மறக்கப்பட்ட மரணமும்

Published By: J.G.Stephan

14 Dec, 2020 | 02:57 PM
image

“அரசியல்வாதிகளுக்காக வக்காளத்து வாங்கும், சரத் வீரசேகர, குண்டுச் சத்தத்தை கூட கேட்காதவர் என்று சாடியிருக்கிறார் சரத் பொன்சேகா; அரசியல் தலைமைத்துவம் தான், போரை வெற்றி கொள்ள உதவியது என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர”

 “ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ போரை வெல்வதற்குத் தேவையானதைச் செய்வதற்கான சுதந்திரத்தை, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு கொடுத்திருந்தார். பாதுகாப்புச் செயலராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ அதற்குத் தேவையான ஆளணி, ஆயுத வளங்களை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தார். ஆனாலும், தற்போது வரையில் போரை வென்று கொடுத்தது யார் என்ற உரிமை கோரல் நடந்து கொண்டிருக்கிறது”

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து 12 ஆண்டுகள் ஆகப்போகின்ற நிலையிலும் கூட, போரை வெற்றிகொண்டது யார் என்ற குழப்பம், தென்னிலங்கை அரசியலில் தீரவில்லை.

உறுதியான அரசியல் தலைமையினால் தான், போர் வெற்றி கொள்ளப்பட்டதாக, அமைச்சர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய கருத்தை வன்மையாக மறுத்திருக்கிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய  ராஜபக்ஷவினதும் அரசியல் தலைமைத்துவம் தான், போரை வெற்றி கொள்ள உதவியது என்று, அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டிருந்தமை, ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்.

கொழும்பில் குளிரூட்டிய அறைகளுக்குள் இருந்தவர்கள் போரை வெற்றி கொள்ளவில்லை, களத்தில் போரிட்ட படையினருக்குத் தான் அந்த பெருமை சென்றடைய வேண்டும் என்பது சரத் பொன்சேகாவின் வாதம். இந்த இரண்டு தரப்புகளுக்கும் நடுவே போர் வெற்றி தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ போரை வெல்வதற்குத் தேவையானதைச் செய்வதற்கான சுதந்திரத்தை, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு கொடுத்திருந்தார். 

பாதுகாப்புச் செயலராக இருந்த கோட்டாபய  ராஜபக்ஷ அதற்குத் தேவையான ஆளணி, ஆயுத வளங்களை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தார். ஆனாலும், போர் முடிவுக்கு வந்த பின்னர், போரை வென்று கொடுத்தது யார் என்ற உரிமை கோரல் நடந்து கொண்டிருக்கிறது.

போரை திட்டமிட்டு வழிநடத்திய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும், போருக்கான அரசியல் தலைமைத்துவத்தைக் கொடுத்த  ராஜபக்ஷவினருக்கும் இடையில் தொடங்கிய முரண்பாடுகள் இதற்கு முக்கியமான காரணம்.

2010 ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா களமிறங்கியதால், அந்த முரண்பாடு இன்னும் முற்றியது. அதன் தொடர்ச்சியாக, சரத் பொன்சேகா சிறைக் கம்பிகளை எண்ணும் நிலையும் ஏற்பட்டது.

போரை வென்றது  ராஜபக்ஷவினர் தான் என்பதை அதிகாரபூர்வமாக நிலைப்படுத்துவதற்குத் தேவையான கள வேலைகள் செய்து முடிக்கப்பட்டிருந்ததால் தான், சரத் பொன்சேகா வெளியே வந்த பின்னரும் கூட, போரை வென்ற பெருமை, படையினருக்குத் தான் சேர வேண்டும் என்று அவர் இப்போதும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

போர் தொடர்பான உத்திகளில் யாரும் தலையீடு செய்யவில்லை என்றும், அந்த விடயத்தில் தானே முற்றுமுழுதாக முடிவுகளை எடுத்ததாகவும் சரத் பொன்சேகா சில மாதங்களுக்கு முன்னர் கூட, குறிப்பிட்டிருந்தார்.

கிளிநொச்சியைக் கைப்பற்றியவுடன், புதுக்குடியிருப்பை நோக்கி படையினரை நகர்த்துவதற்கு தானே முடிவெடுத்தேன் என்றும், அதனை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.

போர் தொடர்பான தனது முடிவுகளில், அரசியல் தலையீடுகள் இருக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும், சரத் வீரசேகரவின் சீண்டலைத் தொடர்ந்து சரத் பொன்சேகா ஒரு குற்றச்சாட்டை ராஜபக்ஷவினர் மீது முன்வைத்திருக்கிறார்.

“போர் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தபோது, 2009 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம், பெப்ரவரி முதலாம் திகதிகளில் ஒரு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தனது எதிர்ப்பை மீறியே அரசாங்கம் அந்த போர் நிறுத்தத்தை அறிவித்தது.

அதனைப் பயன்படுத்தி, புலிகள் நடத்திய கடும் தாக்குதலில், படையினர் நான்கு கிலோ மீற்றர் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் 300 படையினரை இழக்கும் நிலை ஏற்பட்டது” என்றும் சரத் பொன்சேகா கூறியிருந்தார். அரசியல்வாதிகளின் முடிவினால் தான் அந்த நிலை ஏற்பட்டது, அவர்களுக்காக வக்காளத்து வாங்கும், சரத் வீரசேகர, குண்டுச் சத்தத்தை கூட கேட்காதவர் என்றும் சாடியிருக்கிறார் சரத் பொன்சேகா.

2009 பெப்ரவரி முதலாம் திகதி அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் புதுக்குடியிருப்பு முன்னரங்க நிலைகளின் மீது நடத்திய வலிந்த தாக்குதலையே, சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். அந்த தாக்குதல் விடுதலைப் புலிகளுக்கு ஆரம்ப வெற்றியைக் கொடுத்திருந்தாலும், பின்னர் பின்வாங்கிச் செல்ல நேரிட்டது.

அந்த தாக்குதலை முறியடிப்பதில், முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர், தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன. அவர் அப்போது 53 ஆவது பிரிவின் தளபதியாக இருந்தவர், அவரது பிரிவைச் சேர்ந்த படையினர் தான், தாக்குதலுக்குள்ளாகியிருந்தனர்.

அவர் கொழும்பில் விடுமுறையில் இருந்த போது, தான் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் உத்தரவை அடுத்து, உடனடியாக ஒட்டுசுட்டானுக்குச் சென்று, தனது பிரிவைச் ஒழுக்கமைத்து, அந்த தாக்குதலை முறியடித்திருந்தார் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன.

அப்போது ஒரு சந்தர்ப்பத்தில், மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும், மேஜர் ஜெனரல் ஜகத் டயஸும் இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிக்குள் சென்று மாட்டிக் கொண்டிருந்தனர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற அவர்கள் இராணுவ கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிக்குள் நுழைந்து விட்டனர்.

அவர்களை பின் தொடர்ந்து சென்ற படையினர் சிலர் ஓடிச் சென்று தகவலைக் கூறி அவர்களைப் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்திருந்தனர். சற்று தொலைவுக்குச் சென்றிருந்தால், புதுக்குடியிருப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சிக்கியிருந்திருப்பார்கள்.

அந்த தாக்குதலை முறியடிப்பதில் முக்கிய பங்காற்றிய ஒரு இராணுவ அதிகாரி கடந்த 8ஆம் திகதி கொழும்பு இராணுவ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மேஜர் ஜெனரல் சுபஷான வெலிக்கலவே என்ற அதிகாரி. மன்னாரில் உள்ள 54ஆவது பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தவர்.

சிங்க ரெஜிமென்டை சேர்ந்த இவர், இறுதிக்கட்டப் போர் தொடங்கி, முடியும் வரை லெப்டினன்ட் கேணல் தர அதிகாரியாக, பற்றாலியன் கட்டளை அதிகாரியாக செயற்பட்டவர். 

பின்னர், 68-2 பிரிகேட் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். புதுக்குடியிருப்பு தாக்குதலை அடுத்து, 53 ஆவது பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவிடம், 68 ஆவது பிரிவின் இரண்டு பிரிகேட்களையும், 53 ஆவது பிரிவுனுடன் இணைத்துக் கொள்வதற்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அனுமதி அளித்திருந்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, லெப்.கேணல் லிலந்த கமகே மற்றும் லெப்.கேணல் சுபஷான வெலிக்கல ஆகியோரை தனது படைப்பிரிவுடன் இணைத்துக் கொண்டார்.

இந்த இரண்டு படைப்பிரிவுகளும், 2009 மே 17ஆம் திகதி இரவு  நந்திக்கடலை ஊடறுத்து  விடுதலைப் புலிகள் நடத்திய இறுதி வலிந்த தாக்குதலை எதிர்கொண்டிருந்தன. அந்த தாக்குதலை முறியடிப்பதில் லெப்.கேணல் வெலிக்கலவின் பிரிகேட் முக்கிய பங்காற்றியது.

அதுமாத்திரமன்றி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இறுதிச் சண்டைகளையும் இந்த இரண்டு படைப்பிரிவுகளும் தான் நடத்தியிருந்தன.

மேஜர் ஜெனரல் சுபஷான வெலிக்கல போரில் அதிகபட்ச பங்களிப்பை வழங்கிய ஒருவர். போரில் நடந்த மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்று யஸ்மின் சூகாவின், உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டத்தினால், அறிக்கையிடப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் பட்டியலில், மேஜர் ஜெனரல் சுபஷான வெலிக்கலவின் பெயரும் உள்ளது.

கடந்த 10ஆம் திகதி இவரது இறுதிச்சடங்கு பண்டாரகவில் இடம்பெற்றது. இருந்தாலும், இவரது மரணம் குறித்து நாட்டின் இராணுவ மற்றும் அரசாங்க மட்டத்தில் அதிகம் பேசப்படவில்லை அல்லது முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மேஜர் ஜெனரல் வெலிக்கல சிங்க ரெஜிமென்டைச்  சேர்ந்தவர் என்பது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

சிங்க ரெஜிமென்ட் தான், சரத் பொன்சேகாவின் தாய்ப் படைப்பிரிவு. ஆனால், கஜபாக்கள் தான் போரை வென்று கொடுத்தவர்கள் என்ற ஒரு மாயை இராணுவத்துக்குள்ளேயும் சிங்கள மக்கள் மத்தியிலும் ஊட்டப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலர் மேல் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா போன்றவர்கள் மட்டுமன்றி தற்போதைய அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கின்ற ஓய்வுபெற்ற அதிகாரிகளும் கூட, கஜபா படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் தான்.

இராணுவத்துக்குள் இந்த வேறுபாடு அல்லது போட்டித்தன்மை இப்போதல்ல, முன்னரும் இருந்தது. 2009 ஏப்ரல் மாதம், அனந்தபுரம் சமரில், பிரிகேடியர் தீபனைக் கொன்று அவரது சடலத்தை, தான்  கைப்பற்றி வைத்திருந்த போது, தொலைக்காட்சி ஒன்றில் இன்னொரு படைப்பிரிவு தீபனின் சடலத்தை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டது என்று கமல் குணரத்ன நந்திக்கடலுக்கான பாதை நூலில் அதிருப்தியுடன் எழுதியிருந்தார்.

அதன் தொடர்ச்சி இப்போதும் நீடிக்கிறதா என்ற கேள்வியைத் தான், எழுப்ப வைக்கிறது, மேஜர் ஜெனரல் வெலிக்கலவின் மரணத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாத விவகாரம். 

-சுபத்ரா-

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04