பாராளுமன்ற சின்னத்தை பயன்படுத்தி பொய்யான செய்திகள் வெளியாகின்றது  - சஜித் பிரேமதாச

11 Dec, 2020 | 09:54 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்ற சின்னத்தை பயன்படுத்தி பொய்யான தகவல்களை ஊடகங்கள் பரப்புவது ஏற்றுகொள்ள முடியாத காரணியாகும், கோப் குழுவின் தகவல்களை திரிபு படுத்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள காரணத்தினால் பாராளுமன்ற ஊடக குழுவிற்கு எதிராக உடனடி விசாரணைகளை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் சபையில் சர்ச்சையை உருவாக்கினர்.

பொய்யான தகவல்களை பாராளுமன்ற செய்திப்பிரிவு பிரசுரிக்கின்றது என்றால் அதற்கு சபாநாயகரும் பாராளுமன்ற செயலாளரும் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார்.

கோப் குழு நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கூடிய வேளையில் முன்னைய ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட கூகுள் பலூன் விவகாரம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது, இதன்போது தோல்வியில் முடிந்த கூகுள் பலூன் திட்டத்திற்கு 8.2 மில்லியன் ரூபாய்கள் செலவழிக்கப்பட்டதாக பாராளுமன்ற ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளதாக பாராளுமன்ற சின்னத்தை பயன்படுத்தி பிரதான ஊடகம் சில செய்திகளை வெளியிட்டுள்ள நிலையில் நேற்று சபையில் இது குறித்த பாரிய சர்ச்சை ஒன்று வெடித்தது.

இது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கூறுகையில்," கோப் குழுவில் இது குறித்து தெளிவான அறிவிப்பொன்றை கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர், ஆனால் இலங்கை பாராளுமன்றம் என்ற டுவிட்டரில் முழுமையாக பொய்யான தகவலை வெளியிட்டுள்ளனர். இதனை பிரதான இரண்டு சிங்கள ஊடகங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல, கணக்காய்வு திணைக்களம் உண்மைகளை கூறியும் இலங்கை பாராளுமன்றம் என்ற டுவிட்டரில் பொய்யான செய்தியை வெளியிட்டு அதில் சரித ஹேரத்தை (டக்) இணைத்து செய்தியை வெளியிட்டுள்ளனர். எனவே இந்த தவறை செய்தவர்களை உடனடியாக விசாரிக்க வேண்டும். பாராளுமன்ற உத்தியோகபூர்வ டுவிட்டரை  யார் கையாள்வது என்பதை முதலில் வெளிப்படுத்த வேண்டும்" என்றார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச" இது முக்கியமான பிரச்சினையாகும், பாராளுமன்ற சின்னத்தில், பாராளுமன்ற ஊடகப்பிரிவு எவ்வாறு பொய்யான தகவல்களை வெளியிட முடியும், இதற்கு யார் பொறுப்பு" என்றார். இதற்கு பதில் தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன " இந்த பிரச்சினை குறித்து காரணிகளை வெளிப்படுத்த வேண்டும். கோப் குழுவின் தலைவர் தற்போது சபையில் உள்ளார், அவரிடம் இது குறித்து கேளுங்கள் என்றார். இதற்கு பதில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் " நான் கேட்பது இந்த ஊடகப்பிரிவின் செய்திகளுக்கு யார் பொறுப்பு கூறுவது? இதுவும் சர்வதேச சதியா? பாராளுமன்ற சின்னத்தை பயன்படுத்தி வெளியிடும் செய்திக்கு யார் பொறுப்பு? என தொடர்ச்சியாக கேள்வி எழுப்பினார்.

செயலாளர் நாயகத்திடம் இது குறித்து கேட்டறிந்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன " இந்த செய்திகளை வெளியிடுவது பாராளுமன்ற ஊடக பிரிவின் தலைவரின் அனுமதியுடன் செய்திப்பிரிவு இந்த செய்திகளை வெளியிடும்"என்றார். இதற்கு பதில் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் " பாராளுமன்றத்தின் சின்னத்துடன் ஒரு செய்தி வெளியிடப்படுகின்றது என்றால் அது குறித்து முதலில் சபாநாயகர் தெரிந்துகொள்ள வேண்டும், பாராளுமன்ற செயலாளரும் அதனை தெரிந்துகொள்ள வேண்டும். எனவே இது மிகவும் மோசமான செயற்பாடு, எனவே இது குறித்து சுயாதீன விசாரணையை நடத்தியாக வேண்டும், இன்று சபை முடிய முன்னர் இந்த தவறை செய்தவர்கள் யார் என்பதை சபைக்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய கோப் குழு தலைவர் சரித ஹேரத் " கோப் குழுவின் சகல கலந்துரையாடலும் பாராளுமன்ற ஊடகத்தில் வெளியிடப்படும்,கோப் குழு அங்கீகரித்த அனைத்தையும் ஊடகங்கள் பிரசுரிக்கும். அதனை ஊடகங்கள் தமக்கு ஏற்றால் போல் எடுத்துக்கொள்வார்கள். இந்த விவகாரத்தில் நீண்ட கலந்துடையாடல் ஒன்று கோப் குழுவில் இடம்பெற்றது, இதில் உண்மையான பெறுமதி குறித்து இன்னமும் தீர்மானமும் எடுக்கவில்லை, ஆனால் நீங்கள் கூறுவதில் நியாயம் உள்ளதென்றால் அதனை நாம் ஏற்றுகொள்ள வேண்டும், ஆனால் ஊடகங்கள் தமக்கு தேவையான செய்திகளை தெரிவுசெய்வதில் நாம் ஒன்றுமே செய்ய முடியாது" என்றார்.

இந்த விடயம் குறித்து தொடர்ச்சியாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சரித ஹேரத் எம்.பியுடன் வாக்குவாதப்பட்டுக்கொண்டே இருந்தனர். ஒரு சில ஊடகங்கள் எம்மை இலக்கு வைத்து தனிப்பட்ட கோவங்களை தீர்த்துக்கொள்கின்றனர், அதற்காக பொய்யான செய்திகளை அரச சின்னத்துடன் வெளிப்படுத்தி எம்மை அவமதிக்கும் வேளையில் செய்கின்றனர். இதற்கு உடனடியாக விசாரணை அவசியம் என எதிர்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக்கொண்டிருந்தனர். ஆளும் தரப்பினரும் இதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து குறித்த ஊடகங்களை நியாயப்படுத்தி பேசினர். இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஆளும் கட்சி பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ " இந்த விடயத்தில் சுயாதீனமான விசாரணை ஒன்று வேண்டும் என்றால் அதனை நடத்தலாம், ஆனால் பாராளுமன்ற விசேட குழுக்களுக்கு ஊடகங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை முன்னைய ஆட்சியாளர்களே கொண்டுவந்தனர், அப்போதே நாம் இதனை வேண்டாம் என வலியுறுத்தியும், எமக்கு எதிராக செய்திகளை கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காக  இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்தீர்கள், இப்போது அதுவே உண்மைகளுக்கு எதிராக திரும்பியவுடன் நியாயம் கேட்கின்றீர்கள். இப்போது எழுந்துள்ள சர்ச்சைக்கு நடவடிக்கை எடுக்க முடியும், விசாரணை நடத்துங்கள் ஆனால் ஊடகங்களை விமர்சிக்க வேண்டாம். ஊடகங்கள் தமக்கு தேவையான செய்திகளையே பிரசுரிப்பார்கள், அதுதான் ஊடக சுதந்திரம்" என்றார்.

எனினும் எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக சபையில் தமது எதிப்பை வெளிப்படுத்தியதுடன் பாராளுமன்ற சின்னங்களை பயன்படுத்தி அரசியல் செய்யும் ஆளும் கட்சியின் செயற்பாடுகளை நடத்த வேண்டாம். உடனடியாக இதற்கான நியாயமான விசாரணைகளை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மீண்டும் வலியுறுத்தினார், இதற்கான விசாரணைகளை நடத்த முடியும் என சபாநாயகரும்  வாக்குறுதியளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04