சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் அஞ்சுவதாலேயே போர்க் குற்றவாளிகள் என்பதை உறுதிப்படுத்துகிறது - விக்கினேஸ்வரன்

Published By: Digital Desk 3

10 Dec, 2020 | 11:56 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்றும் படையினர் மக்களை பாதுகாத்தார்கள் என்றும் அரசாங்கம் கூறுவது  உண்மையானால் ஏன் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அரசாங்கம் தயங்குகின்றது?அரசாங்கம் கூறுவது  உண்மையானால் சர்வதேச விசாரணை மூலம் உண்மைகள் நிரூபிக்கப்பட்டு இராணுவம் மீதான விமர்சனங்கள் களையப்படவேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

நாட்டின் இறைமையின் பின்னால் ஒளிந்து நின்றுகொண்டு எமது மக்களின் இறைமையை இல்லாமல் செய்யலாம் என்று கனவு காணாதீர்கள் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்ககிழமை 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் நீதி, தொழில் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாட்டில் சகல மக்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமாகும். குறிப்பாக எமது மக்களுக்கான நீதி அவசியமானதாக உள்ளது, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி  எமக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. அதேபோல் நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கான நியாயத்தையும் நீதியையும் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானதாகும்.

இந்த விடயத்தில் நீதி அமைச்சர் கவனம் செலுத்தியாக வேண்டும். அதேபோலவே முஸ்லிம்கள் தமது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான நீதியை எதிர்பார்க்கிறார்கள். ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட கிறிஸ்தவ மக்களின் உறவினர்களும் தமக்கான நீதியை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

இந்த நாட்டில் நீங்கள் எமது நிலங்கள், எமது பாரம்பரிய வாழ்வு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை இல்லாமல் செய்வதில் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எம்மை சக மனிதர்களாக அன்றி தோற்கடிக்கப்பட்ட மக்களாகவே இந்த தீவில் தொடர்ந்து நடத்துகிறீர்கள். நாங்கள் எவரும் தோற்கடிக்கப்படவில்லை. எமது இதயங்களில் இன்னமும் நாம் சுதந்திரத்துக்கான தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கிறோம்.

அண்மைக்காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்ட எவரேனும் தண்டிக்கப்பட்டுள்ளனரா?  ஆகக்குறைந்தது இந்த விடயங்களில் பொறுப்புக்கூறலுக்காவது முயற்சித்துள்ளனரா?  தொடர்ந்துவந்த அரசாங்கங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை அமுல்படுத்தி இருக்கிறோமா?  தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் எமக்கு எது நல்லது என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள்.  சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இதுதான் நிலைமை.

இந்த நாட்டில் பக்கச்சார்பான நீதியேகாணப்படுகின்றது.  சிங்கள பௌத்த மக்களின் நல்வாழ்வுக்காக 'நீதி' தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. இங்கு ஒரு புதுமையான அரசியல் கலாசாரம் வளர்க்கப்படுகின்றது. எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவர்  கூடுதலான குற்றங்களையும் துன்பங்களையும் செய்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவருக்கு  வெகுமதிகளும் பதவி உயர்வுகளும் கொடுக்கப்படுகின்றன. இதன் தாக்கத்தை இந்த சபையிலும் உணர முடிகின்றது. அதனால் தான் படித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் முஸ்லிம் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சமுகம் பற்றியும் அரசாங்கம் பற்றியும் உண்மைகளை பேசும்போது  கூச்சல் போட்டு குழப்புகிறார்கள்.  

சிங்கள பௌத்த தொல்பொருள் எச்சங்களை பாதுகாப்பது என்ற போர்வையில்  எமது சமூகத்தின் நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் அவசர அவசரமாக விசேட ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கில் ஆணைக்குழுக்களை அமைக்கும் வேளையில் இந்த  ஆணைக்குழுக்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் ஆணையாளர்களாகவே இருக்க வேண்டும்.  தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து சிங்கள மக்களுக்கு கொடுக்கவா நினைக்கின்றீர்கள்? இதுவா இந்த ஆணைக்குழுக்களின் நோக்கம் ?  3000 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் இணக்கம் மற்றும் இசைவு இன்றி எந்த ஒரு செயற்பாடும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படக்கூடாது.  

சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது அவர்களின் இறைமைக்கு எதிராகவோ எமது இளையோர்கள் ஆயுதம் ஏந்தவில்லை.  தமது பகுதிகளின் இறைமைக்கு ஆபத்து ஏற்பட்டதாலேயே அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். அவர்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் பயங்கரவாதிகளாக அழைக்கப்பட்டு 20 க்கும் அதிகமான நாடுகளின் உதவியுடன் கொடூரமாக அழிக்கப்பட்டார்கள். ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். நாட்டின் இறைமையை விட மக்களின் இறைமையே மேலானது. இன்றைய சர்வதேச உறவில் அப்படித்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தான் சர்வதேச சட்டங்களும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுவருகின்றன. நாட்டின் இறைமையின் பின்னால் ஒளிந்து நின்றுகொண்டு எமது மக்களின் இறைமையை இல்லாமல் செய்யலாம் என்று கனவு காணாதீர்கள். ஒரு நாட்டின் மனித உரிமைகள் மோசமாக மீறப்படும்போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அந்த நாட்டின் இறைமையை உதாசீனம் செய்யலாம் என்பதே இன்றைய உலக நடப்பு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.  

இறுதிப் போரில் மனிதக் கேடயங்களாக அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாகவும், அந்த மக்களை நீங்கள் மீட்டதாகவும், எந்த ஒரு போர்க்குற்றத்தையும் படையினர் செய்யவில்லை என்றும்  கூறுகிறீர்கள். இது உண்மையானால், இதை நீங்கள் கூறவேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தான் கூறவேண்டும். ஆனால், இறுதி யுத்தத்தில் நீங்கள் காப்பாற்றியதாக கூறும் மக்கள் நீங்கள் தமது உறவுகளை கொலை செய்ததாக அல்லவா கூறுகிறார்கள்.

நீங்கள் அந்த மக்களை உண்மையாக மீட்டு அவர்களுக்கு வாழ்வு அளித்திருந்தால்,  2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின்வந்த சகல தேர்தல்களிலும் உங்களையல்லவா அவர்கள் ஆதரித்திருந்திருப்பார்கள்? ஆனால், தங்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக நீங்கள் கூறும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று நீங்கள் இன்றும் கூறும்  தமிழ் தேசிய கூட்டமைப்பை அல்லவா மக்கள் தேர்தல்களில் பல தடவைகள் வெல்ல வைத்துள்ளார்கள் ? எவ்வாறு 2013 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற வட மாகாண சபை தேத்தலில் வட மாகாணத்தின் ஆகக்கூடுதல் சாதனை வாக்குகளாக 133,000 வாக்குகளை மக்கள் எனக்கு அளித்தனர்? விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்றும் படையினர் மக்களை பாதுகாத்தார்கள் என்றும் நீங்கள் சொல்வது உண்மையானால் ஏன் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு தயங்குகிறீர்கள்? நீங்கள் சொல்வது உண்மையானால் சர்வதேச விசாரணை மூலம் அது நிரூபிக்கப்பட்டு உங்கள் மீதான விமர்சனங்கள் களையப்படவேண்டும். நீங்கள் அப்போது உங்கள் சர்வதேச அரங்கில் உங்கள் தலையை நிமிர்த்திக்கொண்டு வலம்வரமுடியும்.

சர்வதேச விசாரணையை முகம்கொடுக்க நீங்கள் அஞ்சுகிறீர்கள். நீங்கள் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவதும் சீனாவின் பின்னால் ஓடுவதும் உங்கள் படையினர் போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையை இழைத்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றது. அடுத்தவருடம் மார்ச் மாதம் நாம் ஐ. நா மனித உரிமைகள் சபையை எதிர்கொள்கின்றோம். சர்வதேச சமுகத்தின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மார்ச் மாத நடுப்பகுதி தொலைவில் இல்லை என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தப்புவதற்கு சிறிய சந்தர்ப்பமே உள்ளது.

இந்நிலையில் அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருகின்றது. இந்த நாட்டின் எல்லா சமூகங்களும் சமத்துவம், ஒற்றுமை, சுதந்திரம், ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் வாழும் வகையில் ஒரு சமஷ்டி அல்லது அரை சமஷ்டி அல்லது  கூட்டு சமஷ்டி அரசியல் அமைப்பை தயாரித்து நிறைவேற்றுங்கள்.  உங்கள் அரசாங்கம் மட்டுமே இதை செய்ய முடியும். பெரும்பான்மை சமூகத்துடன் சமத்துவம் மற்றும் சக வாழ்வுடன் வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்களும் கூட வாழும்வகையில்  உண்மையான அதிகார பகிர்வை ராஜபக்ஷ குடும்பம் உறுதிசெய்யட்டும்.   நீங்கள் தவறினால், யுத்தம் நடைபெற்றபோது பேச்சுவார்தைகளுக்காக நாடுகளின் தலை நகரங்களுக்கு ஏறி இறங்கியதுபோல மீண்டும் ஏறி இறங்குவீர்கள் என்றார்.          

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19