ஐந்து ஆண்டுகளுக்கு கூட்டணி அமைத்து ரணில்-மைத்திரி ஆகிய இருவராலும் நாட்டின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத்தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது. அதேபோல் பாதயாத்திரை சென்று மஹிந்தவால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும் முடியாது. பொதுமக்களை ஏமாற்றும் அரசியல் நாடக்கதை இரண்டு தரப்பினரும் முன்னெடுக்கின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். ரணில்- மைத்திரி கூட்டணியை விரட்டியடிக்கவும், மஹிந்த குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எனக்கு சந்தர்ப்பத்தை வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மற்றும் ஐக்கியதேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை நீட்டிப்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.