அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களுக்கு, 

Published By: J.G.Stephan

13 Dec, 2020 | 02:44 PM
image

உங்களுக்கு கடிதம் எழுதவேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போதுதான் அதற்கு மிகவும் பொருத்தமான தருணம் வந்திருக்கிறது.



 திரைப்படமொன்றில் (அதன் பெயர் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது) வாடகைக்கார் வைத்திருக்கும் என்னத்தே கன்னையாவிடம் வடிவேலு ' கார்வருமா? " என்று கேட்க ' வரும்...ஆனா....வராது' என்று சொல்லிவிட்டு வடிவேலுவை ஏற்றிக்கொண்டு முன்னால் வந்த லாரியொன்றுடன் மோதி கார் சின்னாபின்னமாகுவதாக ஒரு காட்சி வருகிறது. சின்னாபி்ன்னமானதை விடுவோம்.....மற்றும்படி  உங்கள் அரசியல் பிரவேசம் கன்னையா காரைச் செலுத்துவதற்கு முன்னதாக 'வரும்...ஆனா...வராது என்பது போன்று இருக்கிறது.

நீங்கள் இப்போதெல்லாம் எம்.ஜி.ஆரைப் போற்றிப்பேசுகிறீர்கள். தமிழத் திரையுலகில் இருந்து அரசியலில் பிரவேசித்தவர்களில் மகத்தான வெற்றியைப் பெற்றவர் இதுவரையில் அவரேயாவார்.அவர்கூட சுமார் அரைநூற்றாண்டுக்கு முன்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு  தனது புதிய கட்சியை உடனடியாகவே ஆரம்பித்தார். ஆனால், நீங்களோ 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் ' என்றும் ' வருவேன்...சரியான நேரத்தில வருவேன் ' என்றும் சினிமாவில் சொன்னதைப் போன்று இன்னமும்  முழுமையாக அரசியலுக்குள் வந்தபாடாக இல்லை. தமிழக மக்கள் உங்கள் அரசியல் பிரவேசத்துக்காக ஏக்கத்துடன் காத்திருப்பதாக நீங்கள் உண்மையில் நம்பியிருந்தால் இப்படியெல்லாம் செய்திருக்கமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

1996 ஆம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தலின்போது மூப்பனாரின் தூண்டுதலின் பேரில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு ஆதரவாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக நீங்கள் கூறிய கருத்துக்கள் அவரி்ன் தோல்விக்கு பங்களிப்புச் செய்த முக்கிய காரணிகளில் ஒன்று என்று பரவலாக பேசப்பட்டது. அதை நீங்கள் அன்று நம்பிவிட்டீர்கள். ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று கூடக் கூறினார்கள்.

ஆனால், கலைஞர் கருணாநிதி பெரிய அரசியல் மதியூகி. மற்றவர்கள் என்றால் உங்களை மடியில் தூக்கிவைத்துச் சீராட்டியிருப்பார்கள். ஆனால், அவர் வைக்கவேண்டிய தூரத்திலேயே வைத்திருந்தார். தி.மு.க.வுக்கும் அண்ணா தி.மு.க.வுக்கும் எதிரான கட்சிகளே உங்கள் மீது கண்வைத்துக் கொண்டிருந்தன. 1996 ஆம் ஆண்டில் இருந்தே உங்கள் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பகள் இருந்து வந்தன.

ஆனால், 2001சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் வெற்றிபெற்று முதலமைச்சராகிய பிறகு தமிழக அரசியல் வானில் அவர் மாபெரும் செல்வாக்குடைய தலைவியாக பிரகாசிக்கத்தொடங்கியதும் நீங்கள் அரசியல் பிரவேச யோசனையை அனேகமாக கைவிட்டிருந்தீர்கள். ஒருபுறத்தில் கலைஞர் மறுபுறத்தில் ஜெயலலிதா என்று பிரமாண்டமான இரு அரசியல் ஆளுமைகளுக்கு இடையில் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது என்பது உங்களுக்கு தெரியும்.

கலைஞரும் ஜெயலலிதாவும் இல்லாத தமிழக அரசியல் அரங்கில் மாபெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு இருக்கும் என்று நம்பி மூன்று வருடங்களுக்கு முன்னர் உங்கள் 'ரஜினி மக்கள் மன்ற' உறுப்பினர்களை சென்னையில் கூட்டி(2017டிசம்பர்) அரசியலில் நிச்சயம் பிரவேசிக்கப்போவதாக பகிரங்கமாக முதன்முதலில் பிரகடனம் செய்தீர்கள். புதிய கட்சி 2021 சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக அமைக்கப்பட்டு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகவும் அறிவித்தீர்கள். உங்கள் ரசிகர்களும் ' தலைவர் ' இன்றைக்கோ நாளைக்கோ கட்சி தொடங்கிவிடுவார் என்றும் தங்களுக்கு கட்சியை வளர்த்து தேர்தலுக்கு முகங்கொடுக்க தயாராகவேண்டிய பெரும் பணி காத்துக்கிடக்கிறது என்றும் சுறுசுறுப்படைந்தார்கள்.

ஆனால், உங்கள் ரசிகர்களின் சுறுசுறுப்புக்கும் எதிர்பார்ப்புக்கும் ஈடுகொடுக்கக்கூடிய முறையில் உங்கள் நகர்வுகள் இருக்கவில்லை. ரஜினி ரசிகர் மன்ற முக்கியஸ்தர்களை அழைத்து 'போருக்கு தயாராக வேண்டும் ' என்று சொன்னீர்கள். பிறகு உங்கள் எல்லோருக்கும் குடும்பங்கள் இருக்கி்ன்றன. அவற்றை பொறுப்புடன் கவனிக்கவேண்டிய  கடமை உங்களுக்கு இருக்கிறது 'என்று ஒரு தடவை கூறினீர்கள். ரசிகர்களுக்கு ஒரே குழப்பமாகப்போய்விட்டது. தலைவர் என்ன போருக்கு தயாராக சொல்கிறாரா? குடும்பங்களை கவனிக்கச் சொல்கிறாரா? என்று தலையைப் பிய்த்துக்கொண்டார்கள்.

இப்போது மீண்டும் அரசியல் கட்சியை ஜனவரியில் ஆரம்பிக்கப்போவதாக  கடந்த வாரம் அறிவித்திருக்கிறீர்கள். கடந்த மூன்று வருடங்களாக நீங்கள் செய்த டுவிட்டர் பதிவுகளும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நீங்கள் அளித்த சுருக்கமான பதில்களும் உங்களது கொள்கைகள் மற்றும் செயற்திட்டங்கள் பற்றிய ஒரு தெளிவான எண்ணத்தை எவருக்கும் கொடுக்கவில்லை. அதனால், அடுத்தமாதம் புதிய கட்சியை ஆரம்பிக்கப்போவதாக நீங்கள் அறிவித்திருப்பதையும் கூட முழுமையான நம்பிக்கையுடன் நோக்குவது கஷ்டமானதாக இருக்கிறது. ஆனால், குறுகிய கால அவகாசத்திற்குள் செய்யப்பட்ட அறிவிப்பு 'தொடங்கினாலும் தொடங்கிவிடுவார்' என்ற ஒரு மருட்சியைக் கொடுக்கின்றது.

கலைஞரினதும் ஜெயலலிதாவினதும் மரணங்கள் ஏற்படுத்திய அரசியல் இடைவெளியில் தனக்கு ஒரு இடமிருக்கிறது என்று நம்பி அரசியலில் பிரவேசித்து மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியையும் ஆரம்பித்த கமல்ஹாசனின் அரசியல் செயற்பாடுகளை அவரது டுவிட்டர் சமூக வலைத்தள பதிவுகளில் மாத்திரமே காணக்கூடியதாக இருக்கிறது. அவரது கட்சி லோக்சபா தேர்தலில் ஒரு தடவை போட்டியிட்டது. அவர் அரசியலை இணையவெளியில் முன்னெடுத்துக்கொண்டு மறுபுறத்தில் ' பிக்பாஸ்' நடத்திக்கொண்டிருக்கிார்.

எல்லோரும் எம்.ஜி.ஆர்.அல்ல, கட்சியை ஆரம்பித்ததும்  ஆட்சியைப் பிடிப்பதற்கு.

கமலின் அரசியலின் சோர்வு உங்களை அதைரியப்படுத்தும் என்று பலரும் எதிர்பார்த்தனர். அத்தகையவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஐந்து மாதங்களுக்குள் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் நிலையில், எப்போது கட்சியை ஆரம்பிப்பது, எப்போது தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது, எப்போது பிரசாரப்பணிகளை ஒழுங்குபடுத்துவது? உங்கள் கொள்கை, செயற்திட்டங்கள் என்னவென்றே புரியாமல் இருக்கும் நிலையில், அவற்றை மக்களிடம் எப்போது எடுத்துச் செல்வது? சினிமா கவர்ச்சியை பெருமளவில் வாக்குகளாக மாற்றும் காலம் பெரும்பாலும் போய்விட்டது என்று நம்புகிறேன்.

கமலும் நீங்களும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தால் அதன் முடிவுகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்று கருதுகிறவர்களும்  இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் கமலின் மூத்த சகோதரர் சாருஹாசன் தமிழக தொலைக்காட்சி சேவையொன்றுக்கு அளித்த நேர்காணலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கமலின் அரசியல்  பற்றி அண்ணன் பேசும்போது நம்பிக்கை உணர்வுடன் அவர் எந்தக் கருத்தையும் கூறவில்லை. மாறாக ரஜனியும் கமலும் சேர்ந்தாலும் 10-15 சதவீத வாக்குகளைக்கூட பெறுவது பெரும் கஷ்டம் என்றே கூறினார். அவரது கணிப்பீடு பற்றி நீங்கள் என்ன நினைத்திருப்பீர்களோ?

ஜனவரியில் கட்சியை  ஆரம்பிக்கபபோகும் அறிவிப்பக்குப் பிறகு எம்.ஜி.ஆரைப் பற்றியும் அவரது மாணவர்களுக்கான இலவச மதிய போசன சத்துணவுத் திட்டம் பற்றியும் நீங்கள் புகழ்ந்து பேசியிருக்கிறீர்கள். அவரைப் பற்றி புகழ்ந்துரைப்பதன் முலமாக அவரது ஆதரவாளர்களை கவர விரும்புகிறீர்கள் என்று பலரும் நினைக்கிறீர்கள். அத்துடன் எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றியைப் போன்று உங்களால் சாதிக்கமுடியாது என்றும் பத்திரிகைகள் எழுதுகின்றன. எம்.ஜி.ஆர். அரசியலிலும் சினிமாவிலும் ஏககாலத்தில இருந்தவர். தி.மு.க.வுக்கு அவரும் அவருக்கு தி.மு.க.வும் பக்கபலமாக விளங்கியது தான் உண்மை. எம்.ஜி.ஆர். தனது பரந்தளவு ரசிகர் மன்றங்களை பிறகு மாநிலம் பூராவும் தனது கட்சியின் கிளைகளாக மாற்றியதைப் போன்று நீங்களும் உங்களது ரஜினி மக்கள் மன்றங்களை மாற்றும் திட்டத்தை கொண்டிருக்கிறீர்கள்.

எம்ஜி.ஆர். சினிமாவில் நடித்துக்கொண்டே தி.மு.கவில். அரசியல் பணிகளையும் தீவிரமாக முன்னெடுத்த காரணத்தால் அவரின் ரசிகர் மன்றங்கள் தி.மு.க.அரசியலில் ஊறியவையாக இருந்தன. ரஜினி மன்றங்கள் உங்கள் மீதான சினிமா கவர்ச்சியின் காரணமாக மாத்திரமே வளர்ந்தவை. அவற்றை ஒரு ஐந்து மாதங்களுக்குள் தேர்தலுக்கு முகங்கொடு்க்கக்கூடிய  வலிமையான அரசியல் சக்தியாக மாற்றுவது சுலபமான வேலை அல்ல.

உங்கள் கொள்கைகளைப் பொறுத்தவரை, இதுவரையில் நீங்கள்  தெளிவாகப் பேசவில்லை என்பது ஒரு முக்கியமான குற்றச்சாட்டு அல்லது ஒரு குறைபாடு.

ஆன்மீக அரசியலே உங்கள் கொள்கை என்று ஒரு கட்டத்தில் பேசினீர்கள். அது என்னவென்று எவருக்குமே தெளிவில்லாத நிலையில், அண்மைய உங்களது டுவிட்டர் பதிவில் புதிய கட்சியின் வழிகாட்டல் கோட்பாடாக மதசார்பின்மையே விளங்கும் என்று கூறியிரு்கிறீர்கள். ஆனால், பெரும்பாலும் உங்களது அரசியல்போக்கு பாரதிய ஜனதா கட்சிக்கு அனுசரணையானதாக அல்லது அந்த கட்சியை விரோதித்துக்கொள்ளாததாகவே இருக்குமென்று தமிழகத்தில் எழுந்துள்ள விமர்சனங்களை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

இரு பிரதான திராவிட இயக்க கட்சிகளுக்கும் எதிராக வலிமையான மூன்றாவது அரசியல் அணியொன்றை உருவாக்குவதற்கு 1977 க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட  முயற்சிகள் எல்லாமே தோல்விகண்ட நிலையில், உங்களது அரசியல் போக்கு எவ்வாறானதாக இருந்தாலும், உங்கள் பிரவேசம் மாநிலத்தில் நம்பகமான மூன்றாவது சக்தியை  தோறறுவிப்பதற்கான சாத்தியப்பாடு இருப்பதாக தமிழகத்தில் சில சக்திகள் நம்புகி்ன்றன.'த இந்து' கடந்தவாரம் இது குறித்து எழுதிய ஆசிரிய தலையங்கத்தை வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

எது எவ்வாறிருந்தாலும், எந்தவிதமான அரசியல் பணிகளைசெய்த பின்புலத்தையும் கொண்டிராத நீங்கள் ஸ்டாலினையும் அண்ணா தி.மு.க.வின் எடப்பாடியையும் பன்னீரையும் பெரிய அரசியல் ஆளுமைகள் இல்லை என்று நினைத்து உங்கள் சினிமா கவர்ச்சியை மட்டுமே மூலதனமாகக்கொண்டு அரசியலில் குதிக்கிறீர்கள். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திற்குள் எதிர்நோக்கிய முதல் சட்டசபை தேர்தலிலேயே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதென்பது எம்.ஜி.ஆரோடு  போய்விட்டது. இதை மனதிற்கொண்டு செயற்படுங்கள். சரியான நேரத்தில் வருவேன் என்று வேண்டுமானால் சினிமாவில் சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால், நடைமுறையில் சரியான  நேரம் உங்களை கடந்துபோய்விட சொற்பகாலமே இருக்கிறது.


உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இப்படிக்கு
ஊர்சுற்றி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48