அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியாமல் இருப்பது அரசாங்கத்தின் இயலாமை - கபீர் ஹாசிம்

Published By: Digital Desk 4

05 Dec, 2020 | 01:54 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

எமது அரசாங்கத்தில் விலை குறைக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பொருட்களின் விலை தற்போதைய அரசாங்கத்தினால் அதிகாரிக்கப்பட்டுள்ளது. அரிசி விலையைக் கூட குறைக்க முடியாத அரசாங்கமாக மாறியுள்ளது. அதனால் இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கம் என தெரிவிப்பதில் பிழை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில்  கைத்தொழில், வர்த்தக அமைச்சுகள் மற்றும்  இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது அரசாங்கத்தில் விலை குறைக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பொருட்களின் விலை தற்போதைய அரசாங்கத்தினால் அதிகாரிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு பொருட்களின் பெயர்களை குறிப்பிட்டு விலைகளை குறைப்பதாக அறிவித்த போதும் எந்தவொரு பொருளினதும் விலை குறைக்கப்படவில்லை. அரிசி விலையை குறைப்பதாக பல தடவைகள் தெரிவித்தனர். 

அதனைகுகூட செய்ய இயலாத அரசாங்கமாக இருக்கின்றது. அதனால் இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கம் என தெரிவிப்பதில் பிழை இல்லை.

நிலையான பொருளாதாரத்தை  கட்டியெழுப்ப வேண்டுமாயின் முறையான பொருளாதார திட்டம் இருக்க வேண்டும். ஆனால் ஒரு வருடத்தில் ஒன்றையும் காணவில்லை. இது தொடர்பாக இவர்களிடம் முறையான கொள்கைத் திட்டம் இல்லாமையினால், அவர்களினாலேயே நாட்டின் அபிவிருத்திக்கும், இறைமைக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் மேடைகளில் கூறிய திட்டங்களை இப்போது இவர்கள் முன்னெடுத்து செல்கின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியினால் அரச சொத்துக்களை விற்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால் இவர்கள் வந்ததுடன் காலிமுகத்திடலில் 3 ஏக்கர் நிலத்தை சிங்கப்பூர் கம்பனிக்கு விற்றார்கள். கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவுக்கு கொடுக்க முயற்சிக்கின்றனர்.

செளபாக்கிய கொள்கைத்திட்டத்தில் பணச் சலவைக்கு இடமில்லை என்று கூறிக்கொண்டு வரவு செலவுத் திட்டத்தில் வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தை தூய்மைப்படுத்த வரிச் சலுகை வழங்குவதாக கூறுகின்றனர். அதேபோன்று வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வருவதாக அரசாங்கத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரு வருடம் கடந்தும் இவர்களால் முதலீடுகளை கொண்டு வர முடியாது போயுள்ளது.

20ஆவது திருத்தத்தை கொண்டு வந்த பின்னர் ஜனநாயகத்தை உதைத்துத் தள்ளியுள்ளனர். இந்த நாட்டிற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். நாட்டின் ஜனநாயகம் இல்லாமல்போகும் போது முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள். கைத்தொழில் அமைச்சரான விமல் வீரவன்சவுக்கு வெள்ளைக் காரனை கண்டாலே காய்ச்சல் வந்துவிடும். அவரிடம் முதலீட்டாளர்கள் வருவார்களா? சிறைச்சாலை சம்பவத்தை சர்வதேச சூழ்ச்சியென்று கூறும் போது எப்படி அவர்கள் இங்கு வருவார்கள்.

அதேபோன்று கடந்த காலங்களில் நாங்கள் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை எதிர்த்து, அது தொடர்பாக மேடைகளில் முழங்கியவர்கள் இன்று அந்த திட்டங்களை தொடர்ந்து, தங்களுடையது என்று உரிமை கொண்டாட முயற்சிக்கின்றனர். அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றும் அந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வோம் என்று கூறிய போதும், ஒருவருடம் கடந்தும் அதனை இரத்துச் செய்யப் போவதில்லை என்று ஜனாதிபதியே உறுதிப்படுத்தியுள்ளார் எனறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்