(க.கிஷாந்தன்)

நாட்டில் ஆட்சியினை குறுக்கு வழியில் கைப்பற்ற முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் எந்த பகுதியிலிருந்து நடை பழக பாதயாத்திரை சென்றாலும் இன்னும் நான்கு வருடங்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின்  15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ்  28 தோட்டங்களைச் சேர்ந்த 472 குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள் இன்று நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணைக்கு இணைவாக முதல் கட்டமாக 2500 ரூபாய் இடைக்கால கொடுப்பனவை பெற்று வெற்றி கண்டுள்ளோம். 

 இடைக்கால கொடுப்பனவை பெறுவதை தடுக்க மாற்று கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் தோட்டம் தோட்டமாக சென்று தடுக்க நினைத்தாலும் இதனை ஏற்றுக்கொள்ளாது வழங்கப்பட்ட தொகையை அனைவரும் பெற்றுக்கொண்டுள்ளனர். 

அதேவேளை மாற்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் அநாகரீகமாக பேசி ராதா, திகா, மனோ மூவரும் ஒன்று சேர்ந்து நாமம் போட போகின்றார்கள் என்று சொல்லியுள்ளார். ஆனால் யார் நாமம் போடப்போகின்றார்கள் என்பது விரைவில் தெரியவரும்.

7 பேர்ச்சஸ் காணி தனி வீடு என்பது நல்லாட்சியில் நாம் பெற்ற உரிமை. இதை யாரும் கொச்சைப்படுத்த தேவையில்லை. மலையக மாற்றத்திற்கான சக்தியாக இவைகளை நாம் பெற்றுள்ளோம். 

ஆனால் 10 பேர்ச்சஸ் வேண்டும் என மக்களை தூண்டிவிடுபவர்கள் இதுவரை எதுவும் பெற்றுக்கொடுக்கவில்லை. 20 பேர்ச் வேண்டுமானாலும் பெற்றுக்கொடுக்க நான் தயார்.  

எது எவ்வாறாக இருந்தாலும் தொழிலாளர்கள் ஏமாந்து வந்த காலம் போய்விட்டது. அவர்கள் விழித்துக்கொண்டனர். இனிமேலும் ஏமாற்ற வருபவர்களை அவர்கள் விரட்டி அடிப்பார்கள். முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு, செலவு திட்ட காலத்தில் 50,000 வீடுகள் மலையகத்துக்கு தருவேன். தேயிலையை தோட்டங்களை அழிக்க விடமாட்டேன் என சொன்னார்.

ஆனால் இன்று இந்நிலை மாறியுள்ளது. இவ்வாறெல்லாம் சொன்ன அவர் மலையக மக்களால் புறக்கணிக்கப்பட்டு நடை பழக பாதயாத்திரை செல்கின்றார். குறுக்கு வழியில் செய்த ஊழல்களை மறைக்க ஆட்சியை கைப்பற்ற நினைக்கின்றார். ஆனால் எதிரவரும் 4 ஆண்டுகளுக்குள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்றார்

இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறன்ஸ், மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.