துருப்புக்களை குறைக்கவுள்ள அமெரிக்கா : ஆப்கானிஸ்தானில் அடுத்தது என்ன ?

04 Dec, 2020 | 10:12 AM
image

புதிய ஜனாதிபதி பதவியேற்கவிருக்கும் தினமான 2021 ஜனவரி 20 அளவில் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள  அதன்  துருப்புக்களில் 2,500 படையினரை அமெரிக்கா  குறைப்புச்செய்யவிருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

அமெரிக்க ஆக்கிரமிப்பை அடுத்து 2001 ஆம் ஆண்டில் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டு  அதற்கு பிறகு வெளிநாட்டுத் துருப்புக்களையும் காபூலில் உள்ள அரசாங்கத்தையும் எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் தலிபான்கள் தற்போது நாட்டின் அரைவாசிக்கும் அதிகமான பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் முழு நாட்டையும் கைப்பற்ற சண்டையிட்டக்கொண்டிருக்கிறார்கள்.

தலிபான்களுக்கு அரசியல் அலுவலகம் ஒன்று இருக்கின்ற கட்டார் நாட்டின் தலைநகர் டோஹாவில் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இவ்வருடம் பெப்ரவரியில் அமெரிக்கா தலிபான்களுடன் உடன்படிக்கையொன்றை எட்டியது.அந்த உடன்படிக்கையின் பிரகாரம் அல் - கயெடா  மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற நாடுகடந்த ஜிஹாதி அமைப்புக்கள் ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்த அனுமதிக்கப்போவதில்லை எனற தலிபான்களின் உறுதிமொழிக்கு அமெரிக்கா 14 மாதங்களில் அதன் சகல துருப்புக்களையும் ஆப்கானிஸ்தானில் இருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளும்.

ஆப்கான் அரசாங்கத்துடன் நேரடிப்பேச்சுக்களை ஆரம்பிப்பதாகவும் தலிபான்கள் உறுதியளித்தார்கள்.சுமார் 5,000 தலிபான் கைதிகளை ஆப்கான் அரசாங்கம் விடுதலை செய்ததையடுத்து செப்டம்பரில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின.இந்த கைதிகள் விடுதலையை அமெரிக்கா அதன் உடன்படிக்கையின் ஒரு  அங்கமாக உறுதியளித்திருந்தது.

தலிபான் - அமெரிக்க  உடன்படிக்கையையும் ஆப்கான் சமாதான செய்முறைகளுக்கான ஐக்கிய நாடுகள் அங்கீகாரத்தையும் டோஹாவில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் உள்டடக்குவதற்கு இரு தரப்புகளும் இணங்கிக்கொண்டதாக  நவம்பர் 24 ஆப்கானின் ரோலோ செய்தி தொலைக்காட்சி சேவை அறிவித்தது. இதை ஒரு  பெரிய முன்னேற்றமாக நிபுணர்கள் நோக்குகிறார்கள் ஏனென்றால், ஆப்கான் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவுடனான உடன்படிக்கையை உள்ளடக்குவதற்கு தலிபான்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்புக்காட்டி வந்தனர்.

ஆனால், பேச்சுவார்த்தைகளை நடத்துகின்ற அதேவேளை, தலிபான்கள் தாக்குதல்களையும் நடத்திவந்தனர். அமெரிக்காவுடனான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட  பெப்ரவரியில் இருந்து தலிபான்கள் நாடளாவிய ரீதியில் 13,000 க்கும் அதிகமான தாக்குதல்களை நடத்தியிருப்பதாக ஆப்கானின் உள்ளக மதிப்பீடுகளை மேற்கோள்காட்டி ' வோல் ஸ்றீற் ஜேர்னலின் செய்தியொன்று தெரிவித்தது.

நிச்சயமற்ற நிலை

" ஆப்கான் சமாதான செயன்முறைகளைப் பொறுத்தவரை, இது ஒரு நிச்சயமற்றநிலை தருணம்.பல மாதகால தாமதம், தலிபான்கள் மீண்டும் ஆரம்பித்த வன்முறைகள், சமாதான செயன்முறைகளில் மெதுவான முன்னேற்றத்தையே காணக்கூடியதாக இருக்கின்ற போதிலும் அமெரிக்க ஜனாதிபதி ( டொனால்ட் ட்ரம்ப்) படைக்குறைப்பை தொடர்ந்து செய்வது எல்லாம் சேர்ந்து ஆப்கானியர்களுக்கும் அவதானிகளுக்கும் கவைலையை தருகி்ன்றன" என்று புரூசெல்ஸை தளமாகக்கொண்ட சர்வதேச நெருக்கடிக் குழவின் சிரேஷ்ட ஆப்கான் ஆய்வாளர் அன்ட்ரூ வாற்கின்ஸ் கூறினார். 

அவரின் மதிப்பீட்டை பிரதிபலிக்கும் வகையில் ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் ரூச்சி குமார் " அமெரிக்காவுடனான உடன்படிக்கையை என்றென்றைக்கும்  தொடரந்து கடைப்பிடிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதை தலிபான்கள் பெருவாரியான அறிகுறிகள் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் அல் - கயெடாவுக்கு ஆதரவளித்து  இன்னமும் தலிபான்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன " என்று கூறினார்.

தலிபான்களுக்கும் அல் - கயெடாவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் தொடருகின்றன என்று கடந்த  ஜூன் மாதத்தில் ஐக்கிய நாடுகள் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிரு்தது.

" தலிபான்கள் பெரிய மாகாணங்களையும் மாகாண தலைநகரங்களையும் கூட  இலக்குவைக்கிறார்கள்.பேச்சுவார்த்தையில் தங்கள் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாக்கொண்டு தலிபான்கள் செயற்டுகிார்கள் என்று நான் உணருகிறேன்.இராணுவரீதியாக தங்களை அவர்கள் முனைப்புறுத்துகிறார்கள் " என்று  காபூலில் இருந்து ரூச்சி குமார் ' த  இந்து 'வுக்கு தெரிவித்தார்.

சுமார் 6 ஆயிரம் குடிமக்கள் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 45 சதவீதமானவர்களை தலிபான்களே கொலைசெய்தார்கள் என்று ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் பணியகம் அக்டோபரில்  அறிக்கையொன்றில் கூறியது.டோஹாவில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமான பின்னரும் கூட வன்முறை தணிய மறுக்கிறது என்றும் அந்த பணியகம் தெரிவித்தது.

கடந்த செப்டெம்பர் முற்பகுதியில் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக ஆப்கான் துணை ஜனாதிபதி அம்ருல்லா சாலியின் வாகன அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.சிறு காயங்களுடன் சாலி தப்பிவிட்டார்.தலிபான்கள் தொடர்பில் அவர் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.

முன்னேறுவதாக உணரும் தலிபான்கள்

அமெரிக்கப் படைகளை குறைப்பதற்கு டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு தாங்கள் முன்னேறிக்கொண்டிருப்பதாக தலிபான்களுக்கு இருக்கும் உணர்வை மேலும் வலுப்படுத்துவதாக இருப்பது கவலை தருகிறது.

பெப்ரவரியில் இருந்து சுமார் 7 ஆயிரம்  துருப்புக்களை அமெரிக்கா ஏற்கனவே வாபஸ் பெற்றுவிட்டது. காண்டாகாரில் உள்ள பெரிய தளத்தையும்  வொஷிங்டன் அகற்றும்.

தற்போது அமெரிக்கப்படைகளும் நேசநாடுகளின் படைகளும் முன்னரங்க மோதல்களில் ஈடுபடுவதில்லை. அவர்கள் ஆப்கான் துருப்புக்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள். ஆனால், பெரியளவில் சனத்தொகை உள்ள பகுதிகளை கைப்பற்றுவதற்கு தலிபான்கள் திரும்பத்திரும்ப மேற்கொண்ட முயற்சிகளை எதிர்த்து தோற்கடித்ததில் ஆப்கான் படைகளுக்கு அமெரிக்க விமானப்படையின் உதவி மிகவும் முக்கியமான பங்கை வகித்தது. அண்மைக்காலங்களில், நாட்டின் வடக்கில் குண்டுஸையும் தெற்கில் ஹெல்மாண்டையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தலிபான்கள் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள்.ஆனால், ஆப்கான் விசேட படைகள் அமெரிக்க  ஜெட் விமானங்களின் உதவியுடன் அவற்றை தோற்கடித்திருக்கி்ன்றன.

" இத்தயைதொரு இடர்மிக்க நிலையில் அமெரிக்கா விலகுவது ஆப்கான் படைகளுக்கு அவசியமான உதவிககளை குறிப்பாக விமானப்படையின் உதவியை இல்லாமல்செய்வது மாத்திரமமல்ல, அவர்களின் மனத்தைரியத்தையும் பாதிக்கிறது.கடுமையான நெருக்குதலின் கீழ் இருக்கும் ஆப்கான் படைவீரர்களுடன் பேசிப்பார்த்ததில் அவர்கள் அமெரிக்காவினதும் நேச நாடுகளினதும் ஆதரவு இல்லாமல்  சண்டையிடும் சாத்தியம் குறித்து அவர்கள் அஞ்சுகிறார்கள்"என்று ரூச்சி குமார் கூறுகிறார்.

பைடனின் கொள்கை

ஆனால், ஆப்கான் அரசாங்கம் அதற்காக சண்டையிடக்கூடிய ஆயிரக்கணக்கான படையினரைக் கொண்டிருப்பதுடன் நகரப்பகுகளில் மக்களின் ஆதரவையும் கொண்டிருக்கும் நிலையில் முற்றுமுழுவதுமாக நம்பிக்கை இழக்கவேண்டியதில்லை.அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன் ஆப்கான் தொடர்பில் கடைப்பிடிக்கக்கூடிய கொள்கையிலும் சமாதான செயன்முறைகளின் விளைவுகளிலும் பல விடயங்கள் தங்கியிருக்கின்றன.2025 ஆம் ஆண்டில் முடிவடையும் தனது முதலாவது பதவிக்காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து சகல அமெரிக்கத் துருப்புக்களையும் தனது நிருவாகம் வாபஸ் பெற்றுவிடும் என்று பைடன் கூறியிருக்கிறார்.நேட்டோவும் இன்னும் 4 வருடங்களுக்கே ஆப்கான் துருப்புகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

சவால்களுக்கு மத்தியிலும் இரு தரப்புகளும் ( தலிபான்களும் அரசாங்கப்பிரதிநிதிகளும் ) இன்னமும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டுவருவதும் முன்கூட்டியே முன்னேற்றத்தை தோன்றுவதும் நல்ல செய்தியாகும் என்று பேச்சுவார்த்தைகளில்  அமெரிக்க -- தலிபான் உடன்பாடு உட்பட பூர்வாங்க இணக்கப்பாடு குறித்து வாற்கின்ஸ் கூறினார்.

" பதவிக்கு வரவிருக்கும் அமெரிக்க நிருவாகம் மேலும் இராணுவக்குறைப்பை செய்யும் எந்த திட்டத்தையும் முன்னெடுக்கப்போவதில்லை என்று உறுதியளித்திருக்கிறது. நிச்சயமற்ற நிலைக்கு மத்தியிலும், சமாதான செயன்முறைகளை வேறுபட்ட முறையில் மாற்றியமைப்பதற்கும் ஊத்வேகத்தைக் கொடுப்பதற்கும் இது முக்கியமான ஒரு தருணமாகும்".

ஸ்ரான்லி ஜொனி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13