மூன்று பிஸ்கட் பக்கட்டுகளுக்கான கடனைத் திருப்பிக் கொடுக்காத காரணத்தால், தலித் தம்பதிகளை வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

குழந்தைகளுக்காக சில தினங்களுக்கு முன்னர் 15 ரூபா பெறுமதியான மூன்று பிஸ்கட் பக்கட்டுகளை வாங்கிய தலித் தம்பதியினரை பணத்தை தராத காரணத்தால் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவம் மைன்புரி மாவட்டத்தில் நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

தலித் தம்பதிகள், காலையில் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது,  கடை உரிமையாளர் பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கான தொகையைத் திருப்பித்தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். மாலையில் தங்களுக்கு அன்றைய தினத்திற்கான பணம் கிடைத்ததும் அதைக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பணத்தை கேட்டு கூச்சலிட்ட கடை உரிமையாளர் கோபமடைந்து வீட்டினுள் இருந்த அரிவாளினை எடுத்தவந்து இருவரையும் வெட்டிக் கொலை செய்துள்ளார்.

குறித்த கடையின் உரிமையாளரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.