அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டின் பின்னணி 

Published By: J.G.Stephan

29 Nov, 2020 | 07:11 PM
image

- குடந்தையான் -



தமிழக அரசியல் களம், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்ட பேரவை பொது தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் ஏறக்குறைய இறுதி செய்யப்பட்ட நிலையில், ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சிகள் இடம்பெறும் என்பது குறித்த விவாதம் எழுந்திருக்கின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளே எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பா.ஜ.க.வின் அரசியல் ‘சக்தி’யாக கருதப்படும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்மையில் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டார். 

இந்த விஜயத்தின் போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெறுவதை உறுதி செய்தார். இதனை அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, அரச விழாவில் உறுதிப்படுத்தினார். 

இதனை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் வழிமொழிந்து இருக்கிறார். இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தொடர்ந்து நீடிக்கும் என்பது உறுதிசெய்யப்படடிருக்கிறது.  அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தொடர்வதற்கு, அக்கட்சியிலுள்ள சிறுபான்மை இன நிர்வாகிகள் விரும்பவில்லை. 

அத்துடன் அ.தி.மு.க.வில் நடுநிலையாக இருக்கும் மூத்த நிர்வாகிகள் பலரும், அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியான பெண் நிர்வாகிகளில் சிலரும், அ.தி.மு.க. தனித்து நிற்பதையே விரும்புகிறார்கள். கூட்டணி சேர்வதால் இஸ்லாமியர்களின் வாக்குகள் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களின் வாக்குகளும் முழுமையாக கிடைக்காது என்றும் அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்.

அதேபோல் பா.ஜ.க. தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டில் ஓரிடத்திலும், 2001 ஆம் ஆண்டில் ஓரிடத்திலும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் இடம்பெற்றனர். அதன்பின்னர் தமிழகத்தில் 2006, 2011, 2016 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தல்களில் அக்கட்சி ஒரு ஆசனத்தினைக் கூட வெற்றிபெறவில்லை.

அத்துடன் மிகக் குறைந்த வாக்கு சதவீதத்தை மட்டுமே பெற்றது. 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும், அக்கட்சிக்கு கிடைத்த வாக்கு சதவீதத்தில் அ.தி.மு.கவின் பங்களிப்பு தான் அதிகம். எனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. கூடுதல் சுமையாகவே உள்ளது. 

2019 ஆம் ஆண்டில் வேலூர் மக்களவை தேர்தலின் போது அ.தி.மு.க., பா.ஜ.க.வை புறக்கணித்து தான் தேர்தல் பணியாற்றியது. இதன் காரணமாகவே கௌரவமான வாக்குகளை அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சியின் தலைவர் பெறக்கூடியதாக இருந்தது. 

மோடி அலை, வேல் யாத்திரை என பா.ஜ.க., தமிழக மண்ணில் அரசியலை செய்தாலும், குடியுரிமை திருத்த சட்டம், இந்திய மக்கள்தொகை பதிவு சட்ட திருத்தம் விடயத்தில் அக்கட்சி மீதிருக்கும் அச்ச உணர்வின் காரணமாக, அதற்கு வலிமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கும் தமிழக மண்ணில் பா.ஜ.க. வெல்வது கடினம். வழக்கம்போல் தென் தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் அக்கட்சி குறைந்த வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறக்கூடும்.

அத்துடன் இந்த முறை அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க., ‘நோட்டா’வை வெற்றி பெற்ற கட்சியாக திகழக் கூடும் என்றும், 2 சத வாக்குகளை பெறக்கூடும் என்றும் தேர்தல் களநிலைமையின் பிரகாரம் எதிர்வு கூறப்படுகின்றது.

அதே தருணத்தில் அரச விழா ஒன்றில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று முதல்வர் எடப்பாடியார் அவசரம் அவசரமாக அறிவித்ததன் பின்னணியில், ‘மிரட்டல் அரசியல்’ இருந்ததாக தாகவும் கூறப்படுகின்றது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை மீது பா.ஜ.க. அதிருப்தி அடைந்ததால் தமிழக அரசின் மீதும் முதல்வர் மீது உள்துறை அமைச்சரான அமித்ஷா கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.  

அத்துடன் அமித் ஷா சென்னை விஜயத்திற்கு முன் தமிழக ஆளுநர் புதுடில்லிக்கு விரைந்து சென்று, சில விவரங்களை ஆதாரத்துடன் அளித்ததாகவும் சொல்லப்படுகின்றது. சென்னையில் நட்சத்திர ஹொட்டேலில் தங்கியிருந்த அமித் ஷாவை, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சந்தித்து கூட்டணியை உறுதி செய்ததுடன், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.

பா.ஜ.க. மீதான அ.தி.மு.க. அமைச்சர்களின் கருத்துகளுக்கு அந்தத் துறை அமைச்சர்கள் தனியாக சந்தித்து விளக்கமளித்ததாகவும், உள்துறை அமைச்சர் ஒரு மாநிலத்திற்கு விஜயம் செய்யும் பொழுது முதல்வர் வரவேற்பது இதுவரை கடைபிடிக்கப்பட்ட மரபு அல்ல என்றும், சுட்டிக்காட்டப்படுகின்றது.

அடுத்தாண்டு ஜனவரி மாதம் பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையாகவிருக்கும் சசிகலா அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவார் என்பதாலும், அவர் தேர்தல் கூட்டணி குறித்து, அ.தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்தும் ஏதேனும் கருத்து கூறினால், அது அ.தி.மு.க.வின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்பதாலும் கூட்டணி குறித்த அவசரமான அறிவிப்பு வெளியானது என்று அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே அ.தி.மு.க.வை சேர்ந்த இஸ்லாமிய பிரதிநிதி ஒருவர் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவை சந்தித்து, ஹைதராபாத்தை சேர்ந்த அஸாதுதீன் ஓவைசி தலைமையிலான கட்சியை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியல் ரீதியாக காய் நகர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். 

ஏனெனில் அவர் தலைமையிலான இஸ்லாமிய கட்சி தமிழக தேர்தலில் போட்டியிட்டால், இஸ்லாமிய மக்களின் வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு செல்வதை தடுக்க இயலும் என்றும் எடுத்துரைத்திருக்கிறார். இதைக்கேட்டு குறித்துக் கொண்ட அமித்ஷாவுடன் வந்த அதிகாரி, இதுதொடர்பான அரசியல் காய் நகர்த்தலுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தெரியவருகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. நீடித்திருப்பது, அக்கட்சிக்கு பலமா? பலவீனமா? என்பதை சசிகலா விடுதலை மற்றும் அவரின் அரசியல் காய் நகர்த்தல், ஓவைசி தலைமையிலான இஸ்லாமிய கட்சி சட்டப் பேரவை தேர்தலில் பங்குபற்றுதல், ‘வேல் யாத்திரை’யின் மூலம் இந்துக்களின் வாக்குகளை அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணிக்கு ஒன்றிணைய வைத்தல் என மூன்று காரணிகளின் மூலம் தெரியவரும்.

இருப்பினும் முதல்வர் எடப்பாடி, கொரோனா பரவலை தமிழகத்தில் கட்டுப்படுத்தி இருப்பது, தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் புதிதாக மருத்துவ கல்லூரிகளை திறந்து மருத்துவர்களை உருவாக்க வித்திட்டிருப்பது, அரசாங்க பாடசாலையில் பயிலும் மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்ற 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டிருப்பது, கொரோனா காலகட்ட நிவாரண உதவிகளை வழங்கியிருப்பது, எதிர்வரும் டிசம்பர் 5 ஆம திகதியன்றுமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளன்று அவரது நினைவிடத்தை திறப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பது போன்ற பல கவர்ச்சியான திட்டங்களால் வெகுஜன மக்களை கவர்ந்து வருகிறார். 

அதனால் தன்னுடைய அரசியல் கணக்கு தவறாது என்ற நம்பிக்கையில், யாருடைய ஆலோசனையும் இல்லாமல் தங்களது கூட்டணியில் பா.ஜ.க.வை தொடர அனுமதித்திருக்கிறார்.  இது எதிர்பார்த்த பலனை தருமா? என்பதை காலம் தான் பதில் சொல்லும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04