இந்தியா இல்லாத பிராந்திய ஒத்துழைப்பு பொருளாதார பங்காண்மை கூட்டமைப்பில் இலங்கையின் வாய்ப்புகள் என்ன?

Published By: J.G.Stephan

29 Nov, 2020 | 07:10 PM
image

மீரா ஸ்ரீனிவாசன்



‘பங்காண்மை கூட்டமைப்பில் உறுப்புரிமையை பெறுவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலனை செய்கிறதா என்பது தெளிவில்லை. அதேவேளை, கொழும்பு   நாளடைவில் பரிசீலனை செய்யக்கூடும்’

வளர்ந்துவரும் ஆசிய சந்தையை பயன்படுத்துவதில் தீவிர கவனத்தை செலுத்துகின்ற இலங்கையைப் பொறுத்தவரை, சீனா தலைமையிலான பிராந்திய ஒத்துழைப்பு பொருளாதார பங்காண்மைக் கூட்டமைப்பு உடன்படிக்கை ( China - led Regional Cooporation Economic Partnership - RCEP ) பிராந்தியத்தில் வாணிப உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு செம்மையான ஒரு அரங்காக இருக்கும் என்று தோன்றுகிறது.



ஆனால், இலங்கையின் தற்போதைய பொருளாதாரச் சவால்களையும் அந்த பங்காண்மைக் கூட்டமைப்பில் இணைந்துகொள்ளாதிருக்க இந்தியா எடுத்த தீர்மானத்தையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இலங்கைக்கான  பாதை சுலபமானதாக  இல்லை என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 உலகில் மிகவும் மும்முரமான கப்பல் போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றுக்கு அருகாக இந்து சமுத்திரத்தில் மூலோபாய அமைவிடத்தில் இருப்பதன் காரணத்தால், இலங்கையின் தனித்துவமான அனுகூலத்தை எவரும் மறுதலிக்கமாட்டார்கள். "சர்வதேச வாணிப செயன்முறைகளின் ஒரு மையமாக வருவதற்கு நாம் விமானநிலையங்களுடன் சேர்த்து அம்பாந்தோட்டை, கொழும்பு துறைமுகங்களை அபிவிருத்தி செய்யவேண்டும்" என்று பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில்  அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட்டைச்" சமர்ப்பித்து உரையாற்றியபோது கூறினார். 

140 கோடி டொலர்கள்  சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டவரும் கொழும்பு துறைமுக நகரத்தை சர்வதேச வாணிபம்  மற்றும் முதலீட்டுக்கான ஒரு மையமாக துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கே தனது அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கிறது என்றும் பிரதமர் அழுத்திக்கூறினார்.

"எமது அயல்நாடான இந்தியா அடுத்த தசாப்தத்தில் உலகில் பலம்பொருந்திய ஒரு பொருளாதாரமாக வளரும் என்று நான் நம்புகிறேன். ஏனைய பல ஆசிய நாடுகளுடன் சேர்ந்து சீனா உலகின் மிகவும் பலம்பொருந்திய ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக வந்துவிடும்" என்று  உயர்ந்த வளர்ச்சி கண்டுவரும் ஆசிய சந்தை பற்றி குறிப்பிட்டார்.

சில தினங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட பிராந்திய ஒத்துழைப்பு பொருளாதார பங்காண்மை கூட்டமைப்பு உடன்படிக்கை  குறித்து தனதுரையில் நேரடியாக குறிப்பிடாத ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய நிருவாகத்தின் வாணிப  நோக்கு, இலங்கை அதன் பொருளாதார மற்றும் வாணிப இராஜதந்திரத்தில் கூடுதலான அளவுக்கு கிழக்கு நோக்கித் திரும்ப வேண்டிய தேவை குறித்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழுத்தமான வேண்டுகோள் ஆகியவற்றை தனது தனது செய்தியாக மீளவும் வலியுறுத்திக் கூறினார்.

பங்காண்மை கூட்டமைப்பில் உறுப்புரிமை பெறுவது குறித்து பரிசீலனை செய்கிறதா இல்லையா என்பது தெளிவில்லை, ஆனால், கொழும்பு இது விடயத்தில் தீர்மானத்தை எடுப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றே தெரிகிறது. "உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியிலான தற்போதைய சூழ்நிலையில், தனிமைப்போக்கு  கொள்கையில் உறுதியாக நிற்கமுடியாது.நாடுகள் அவற்றின் அரசியல் வேறுபாடுகளை மறந்துவிட்டு ஒன்றிணைந்து செயற்படவேண்டியிருக்கிறது. வாணிப ஆதரவுக் கொள்கையுடைய இலங்கை பிராந்திய ஒத்துழைப்பு பொருளாதார பங்காண்மை கூட்டமைப்பு உட்பட சகல பல்தரப்பு ஏற்பாடுகள் எத்தகைய நன்மைகளைத் தரும் என்பதை அறிவதற்காக  அவற்றை ஆராய்ந்து பார்க்கும்" என்று பிராந்திய ஒத்துழைப்பு  இராஜாங்க அமைச்சர்  தாரக பாலசூரிய ' த இந்து ' வுக்கு கூறினார்.

  "ஆனால், பங்காண்மை கூட்டமைப்புக்கு இலங்கை சமிக்ஞையை காட்டுவதாக அல்லது அதில் இணைந்துகொள்வதற்காக அணுகுவதாக இருந்தால் கூட அங்கே ஒரு நீண்ட வரிசை இருக்கக்கூடும்" என்று கொழும்பைத் தளமாகக்கொண்ட கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரான பெயர்பெற்ற பொருளியல் நிபுணரான துஷ்னி வீரக்கோன் கூறினார்.

"ஆசியாவை  மையப்படுத்திய வாணிபம் மீதான இலங்கையின் அக்கறையை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், பிராந்திய ஒத்துழைப்ப பொருளாதார பங்காண்மை உடன்படிக்கை இயல்பான ஒரு தெரிவாக இருக்கும். ஆனால், அது அவ்வளவு சுலபமானதாக இருக்காது" என்று குறைந்த பட்சம் மூன்று பிரதான காரணிகளை சுட்டிக்காட்டி அவர் கூறினார்.

 முதலாவதாக, இலங்கையின் தற்போதைய வாணிபக்கொள்கை" தெளிவில்லாததாக  இருக்கிறது. இவ்வருட ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதை அடுத்து அரசாங்கம் அதன் அந்நிய செலாவணி கையிருப்பு வீணாகாமல் சேர்த்து வைத்திருப்பதற்காக கணிசமான இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்தது. அத்துடன்  சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கையும் உறுதியான ஒன்றாக இருந்ததில்லை.

உதாரணமாக, இந்தியாவுடனான உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை கவனிக்கப்படாத நிலையில் இருக்கின்ற அதேவேளை, சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை புதுப்பிப்பதில் கொழும்பு அக்கறை காட்டியிருக்கிறது.

"இந்திய- இலங்கை பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு  ஏற்கனவே நடைமுறைக்கு வந்திருந்தால், இந்தியாவும் பிராந்திய ஒத்துழைப்பு பொருளாதார பங்காண்மை கூட்டமைப்பில் உறுப்பு நாடாக இருந்திருந்தால் இலங்கைக்கு மிகவும் வசதியாக இருந்திருக்கும்" என்று துஷ்னி வீரக்கோன் குறிப்பிட்டார்.  

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்டிக்கையையும் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்கின்றது. மேலும், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தைகளாக விளங்குகின்ற அதேவேளை, இந்தியாவும் சீனாவும் இறக்குமதிகளுக்கான இரு மிகப்பெரிய மூல ஆதாரங்களாக இருந்துவருகின்றன.

அத்துடன் ஆசிய நாடுகள் இறக்குமதி, வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் அபிவிருத்திக்கான நிதிவழங்கல் ஆகியவற்றுக்கான மூல  ஆதாரங்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் கூறிய  வீரக்கோன் சிக்கலான வாணிப செயற்களத்தை கடந்துசெல்வதில் இலங்கை எதிர்நோக்கவேண்டியிருக்கின்ற சவால்களை சுட்டிக்காட்டினார்.

 
இலங்கைக்கான பாடங்கள்
ஒட்டுமொத்தமான பொருளாதார மூலோபாய கருத்துக்கோணத்தில் பார்க்கும்போது பிராந்திய ஒத்துழைப்பு பொருளாதார பங்காண்மை கூடடமைப்பு இலங்கைக்கு பல பாடங்களை தருகிறது என்று இலங்கையின் பகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான இந்திரஜித் குமாரசுவாமி கூறுகிறார்.

"கொழும்பு  ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் வாணிபத்தை விரிவாக்கம் செய்வதன் மூலமாக அதன் ஏற்றுமதி பொருட்களையும் அவற்றை ஏற்றுமதி செய்வதற்கான நாடுகளையும் (சந்தைகள்) பல்வகைமைப் படுத்துவதில் (விரிவாக்கம்) நாட்டம் காட்டுகிறது. சீனாவின்  மிகுந்த வருவாய் தருகின்ற சந்தைகளில் வியட்நாம், கம்போடியா மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளுடன் இலங்கை போட்டிபோடுவதை பிராந்திய ஒத்துழைப்பு பொருளாதார பங்காண்மை கூட்டமைப்பு மேலும் கஷ்டமாக்கும். 

தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்தின் (ஆசியான்) தனவந்த நாடுகளுடன் இலங்கை போட்டியிடுவது என்பதை நினைத்துப்பார்க்கவே முடியாது. ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய  நாடுகளுடன் இருதரப்பு உடன்படிக்கைகளை  பூர்த்திசெய்தால் இது விடயத்தில் இலங்கையின் நிலைவரம் மேம்படுவதற்கு வாய்ப்பு தோன்றலாம்" என்றும் குமாரசுவாமி கூறினார்.

  மேலும், நாளடைவில் இந்தியா பிராந்திய ஒத்துழைப்பு பொருளாதார பங்காண்மைக் கூட்டமைப்பில் ஒரு உறுப்பு நாடாக வந்தால்,  இருதரப்பு பதற்றங்களை தணிக்கக்கூடிய உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டிருக்கக்கூடிய சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பு ஒன்றிற்குள் சீன - இந்திய பொருளாதார உறவுகள் மேம்படக்கூடும் என்பது குமாரசுவாமியின் அபிப்பிராயமாக இருக்கிறது.

   நிகழ்வுப் போக்குகள் பற்றிய தனது பரந்தளவிலான பரந்த விளக்கப்பாட்டை பகிர்ந்துகொண்ட குமாரசுவாமி தொற்றுநோய்க்கு பிறகு உடனடியாகவே (உலகளாவிய விநியோக சங்கிலித்தொடர் சீர்குலைந்துபோன நிலையில்) உலகமயமாக்கம் குறித்து கடுமையான விமர்சனங்கள் கிளம்பியிருந்தன. பெருமளவு பொருளாதார சுதந்திரம் வேண்டுமென்ற வாதமும் முன்வைக்கப்பட்டது என்றும் சொன்னார்.

    "ஒரு மேலாதிக்க வல்லரசுடனான மட்டுமீறிய உலகமயாக்கல் யுகம் பெரும்பாலும் முடிவுக்கு வந்து அது கூடுதலான அளவுக்கு பல்துருவமயமாகிவிட்ட  உலகினால் பதிலீடு செய்யப்படுகிறது. அதேவேளை, பிராந்திய ஒத்துழைப்பு பொருளாதார பங்காண்மை கூட்டமைப்பு உலகம் உள்நோக்கிப் பார்க்கும் பொருளாதாரங்களைப் போன்று ஒரு புதிய காப்பரண் யுகத்துக்கு பின்வாங்கிச் செல்லவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது. 

உலகின் மிகவும் ஆற்றல் வாய்ந்த உப பிராந்தியத்தின் 15 நாடுகள் தங்களது பொருளாதாரங்களை பெருமளவுக்கு ஒன்றிணைப்பதன் ஊடாக வளர்ச்சியை ஊக்குவிக்கவும் வேலைவாய்ப்பை பெருக்கவும் உயர்ந்த வருவாய்களைப் பெறவும் ஒன்று சேர்த்திருக்கின்றன என்பது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும்.

(த இந்து)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49