அத்துமீறும் சீனக் கப்பல்கள்

Published By: J.G.Stephan

22 Nov, 2020 | 06:10 PM
image

-சுபத்ரா

* “இந்தியாவுக்கு மிக அண்மையாக- இலங்கை கடல் எல்லைக்குள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடமாடித் திரிந்த சீன கப்பல்களை, இலங்கை இந்திய கடற்படைகள் கண்டுபிடிக்க முடியாமல் இருந்திருக்கின்றமை பலவீனமே”

கடந்த மாதம் 28ஆம் திகதி கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒரு வாக்குறுதியைக் கொடுத்திருந்தார்.

இலங்கையின் கடல் அல்லது நிலப் பிரதேசத்தை, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு, எந்தவொரு தரப்பையும் இலங்கை அனுமதிக்காது என்பதே அந்தவாக்குறுதி.

அந்தச் சந்திப்புக்கு மறுநாள், இந்தியாவின் மூலோபாய வல்லுனர்கள் பலரும் பங்கேற்ற மெய்நிகர் கருத்தரங்கு ஒன்றில், வெளியுறவுச் செயலர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, இந்த வாக்குறுதி பற்றி தகவல் வெளியிட்டிருந்தார்.

இலங்கையின் கடல் அல்லது தரைப்பகுதியை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் இடமளிக்கமாட்டோம் என்று, இலங்கை அரசாங்கம் வாக்குறுதி கொடுப்பது இதுதான் முதல் முறையல்ல.

இவ்வாறான வாக்குறுதிகள், தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலராக இருந்த காலத்தில் இருந்தே, இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

ஆனாலும், இந்தியா அந்தவாக்குறுதிகளை நம்பவில்லை என்று, தற்போதைய ஜனாதிபதியே முன்னர் சில செவ்விகளில், வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வாக்குறுதியை திரும்பத் திரும்ப இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட நிலைமாறி, இப்போது அமெரிக்காவுக்கும் அந்த வாக்குறுதியைக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், சீனா தான். 

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள நெருக்கம் தான், இவ்வாறான வாக்குறுதி கெடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதற்கு காரணம்.

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு, இலங்கை தொடர்பாக சந்தேகம் எழுவதற்கும், அவ்வாறு சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று இந்த நாடுகளிடம் கெஞ்சுவதற்கும் இலங்கையின்சீனத் தொடர்புகள் தான் காரணம்.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவிடம், இலங்கை தரப்பில் இந்த வாக்குறுதி கொடுக்கப்பட்டது, இலங்கைக் கடற்பரப்பில், இரண்டு சீனக் கப்பல்கள் தரித்து நின்று கொண்டிருந்திருக்கின்றன.

ஆனால் அது இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ தெரிந்திருக்கவில்லை.

கடந்த 13ஆம் திகதியளவில் தான், இந்தக் கப்பல்களை இந்தியக் கடற்படை கண்டுபிடித்திருக்கிறது.

அதுவும், சீனக் கப்பல்கள் இந்திய கடல் எல்லையை நெருங்கிச் சென்றபோது தான், அவற்றின் நடமாட்டத்தை இந்திய கடற்படை கண்டுபிடித்து, ஆராயத் தொடங்கியது.

அதன் பின்னர் தான், இந்தக் கப்பல்கள் இரண்டும், ஒரு மாதத்துக்கு முன்னரே, இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டன என்ற அதிர்ச்சியான செய்தி, இந்திய கடற்படைக்கே தெரியவந்திருக்கிறது.

இங்கு மூன்று விடயங்கள் முக்கியமானவை.

முதலாவது, இலங்கையின் பொருளாதார கடல் எல்லைக்குள் நடமாடும் சீனக் கப்பல்கள் பற்றிய பெரும்பாலான தகவல்களை இலங்கைக் கடற்படையே அறிவதில்லை.

இரண்டாவது, இந்தியாவுக்கு மிக அண்மையாக- இலங்கை கடல் எல்லைக்குள் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடமாடித் திரிந்த சீன கப்பல்களை, இந்தியக் கடற்படையே கண்டுபிடிக்க முடியாமல் இருந்திருக்கிறது.

மூன்றாவது, இந்த இரண்டு தரப்புகளினதும் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியப் பெருங்கடலில் தனக்குத் தேவையானதை அடைவதில், சீனா மிகவும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் பொருளாதார கடல் எல்லைக்குள் நடமாடிய இந்த சீனக்கப்பல்கள், இந்திய கடல் எல்லை வரை, வந்து சென்றிருக்கின்றன.

இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம். இந்தக் கப்பல்கள், ஒன்றும் சாதாரணமானவையும் அல்ல. 

இவை ஆய்வுக் கப்பல்கள்(research ships) அல்லது பின்தொடரும் கப்பல்கள் (tracking ships).

இவை இந்தியப் பெருங்கடலில் தரவுகளைச் சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்தியக் கடற்படையின் தகவல்களின்படி,  இவை Yuan Wang-class வகையைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.

இந்த வகையிலான நான்கு கப்பல்கள் தற்போது சீனக் கடற்படையின் பயன்பாட்டில் உள்ளன. 

இவை நீர்மூழ்கிகளின் பயணங்களுக்குத் தேவையான, பாதைகள், கடலின்ஆழம், அதன்தன்மைகள் மற்றும் தட்பவெட்ப நிலை குறித்த தரவுகளை சேரிப்பவை.

அது மாத்திரமன்றி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு வழிகாட்டும் மையங்களாகவும் இவற்றில் சில கப்பல்கள் செயற்படுகின்றன.

இந்தவகையான ஒரு கப்பல் அவுஸ்ரேலியாவுக்கு மேற்கே இந்தியப் பெருங்கடலிலேயே தொடர்ச்சியாக நிலை கொண்டிருக்கிறது.

ஏனையவை மஞ்சள் கடல், நமீபியா கரையோரப் பகுதி, தென்மேற்கு பொலினேசியா கடல் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும், சீனா தன்னிடம் உள்ள கப்பல்களின் வகைகள், எண்ணிக்கைகள் பற்றி சரியான தகவல்களை வெளியிடுவதில்லை என்பதால், இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுருவியுள்ளதாக கூறப்படும், கப்பல்களின் வகைகள் குறித்த சரியான தகவல்கள் மாறுபடக் கூடும்.

எவ்வாறாயினும், சீனாவின் ஆய்வுக் கப்பல்கள்,  இலங்கைக்கு அருகே, இந்தியப் பெருங்கடலில் நடமாடுவது, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறுவது என்பன இது தான் முதல் முறையில்லை.

2007ஆம் ஆண்டில் இருந்தே, இந்தியப் பெருங்கடலில், சீனாவின் ஆய்வுக் கப்பல்கள் நுழையத் தொடங்கி விட்டன.

பலமுறை சீனாவின் ஆய்வுக் கப்பல்கள், வேவுக் கப்பல்கள், இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்திருக்கின்றன. 

மீன்பிடிக் கப்பல் என்ற போர்வையில், இந்திய கடற்பரப்பில் நுழைந்த சீனக்கப்பல்களை விரட்டிச் சென்ற போது, அவை கொழும்பு துறைமுகத்துக்குள் நுழைந்து விட்டதாகவும் முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய கடற்படை கூறியிருந்தது.

சில சந்தர்ப்பங்களில் வங்கக் கடலுக்குள் நுழைவதற்கும் சீனக் கப்பல்கள் முயன்றிருக்கின்றன.

அந்தமான் - நிகோபார் தீவுகள் அருகே நடமாடிய சீனக் கப்பல்கள் இந்திய கடற்படையினால் விரட்டப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

அவ்வாறான சம்பவங்களை ஒருபோதும், சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. 

அதேவேளை, சீனாவின் இந்த நகர்வுகளை மனதில் கொண்டு தான், நிகோபார் தீவுகளில், இந்தியா ஒரு பாரிய கடற்படைத்தளத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அத்துடன், தஞ்சாவூரில், இந்திய விமானப்படையிடம் உள்ள அதிநவீன விமானங்களான சுகோய் விமானங்களையும் நிறுத்தியிருக்கிறது. 

அத்துடன், ரபேல் போர் விமானங்களையும் கூட, இங்கு நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இது இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடல் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கான, வியூகமாகத் தான் பார்க்கப்படுகிறது.

சீன ஆய்வுக் கப்பல்கள், வேவுக் கப்பல்கள் இந்தியாவுக்கு அருகே நடமாடித் திரிவது,  பல ஆண்டுகளாக நடந்துவரும் நிகழ்வுகள்தான். 

இலங்கை கடல் எல்லைக்குள் நடமாடும், சீன கப்பல்கள் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்துக்கு தெரியுமா என்ற பலமான சந்தேகங்களும் இந்திய தரப்பினால் எழுப்பப்படுகிறது.

சீனாவின் ஆய்வுக் கப்பல்கள்,2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் 12 தடவைகள் மாத்திரமே இலங்கைக்கு அறிவித்து விட்டு இலங்கை கடல் எல்லைக்குள் வந்திருக்கின்றன.

ஏனைய பல சந்தர்ப்பங்களில், எந்த தகவல்களையும் வழங்காமலேயே நடமாடியிருப்பதாக கூறப்படுகிறது.

சர்வதேச கடல் வழிப்பாதைக்கு அருகே இருப்பதால், இலங்கையின் கண்காணிப்பில் இருந்து சீன கப்பல்கள் தப்பியிருக்கக் கூடும்.

ஆனாலும், இலங்கை கடல் எல்லைக்குள் இருந்து இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய வகையிலான, தரவுகள் திரட்டப்படுவதை தடுக்க வேண்டியது இலங்கையின் பொறுப்புதான்.

அதற்காகத்தான், இலங்கை கடற்படைக்கு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை, இந்தியா கொடுத்திருந்தது.

ஆனால், அந்தக் கப்பல்களை பெற்றுக்கொண்ட இலங்கை, சீனக்கப்பல்களின் நடமாட்டம் பற்றி தகவல்களை இந்தியாவுக்குக் கொடுக்கவில்லை.

இலங்கையின் பொருளாதாரக் கடல்எல்லைக்குள் சீனகப்பல்களின் நடமாட்டத்தை, இலங்கை தெரிந்தே அனுமதித்திருந்தால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கொடுக்கப்பட்ட வாக்குறுதி பொய்யானதாகிவிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49