சீனாவின் ஐந்தரப்பு அணி

Published By: J.G.Stephan

22 Nov, 2020 | 06:08 PM
image

- ஹரிகரன் -

*‘சீனா தொற்றுக்கு எதிரான சூழ்நிலையை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதற்கு அதிக முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது. பிராந்திய நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியது தொடக்கம், கொரோனா தடுப்பூசிக்கான சந்தையை விரிவாக்கிக்கொள்வது வரைக்கும் மிகவலுவான அடித்தளத்தை இட்டு வருகிறது’

இந்தியா, அமெரிக்கா தவிர்ந்த அவுஸ்ரேலியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஆசியான் நாடுகள் என 15 நாடுகளை இணைத்து, பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது, சீனா.

கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்பாடு அமெரிக்காவுக்கு எதிரான பொருளாதார கூட்டணியை உருவாக்குவதில், சீனாவுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளதாக பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

இந்த கூட்டணியில் அமெரிக்காவில் கூட்டாளிகளான ஜப்பான், அவுஸ்ரேலியா, தென்கொரியா போன்ற நாடுகள் இணைந்திருப்பது,  இன்னும் கூடுதலான கேள்விகளை எழுப்ப வைத்திருக்கிறது.

ஒரு பக்கத்தில் அமெரிக்காவுடன் இந்தோ- பசுபிக் என்ற, பாதுகாப்பு பொருளாதார கூட்டமைப்பை வலுப்படுத்துவதில் பங்களித்து வரும் ஜப்பான், அவுஸ்ரேலியா போன்ற நாடுகள்,  இன்னொரு பக்கத்தில் சீனாவுடன் இந்த உடன்பாட்டில் கைச்சாத்திட்டிருப்பதை பலரும் கேள்விக்குட்படுத்துகின்றனர்.

பொருளாதார ரீதியாக சீனா தன்னை பலப்படுத்திக் கொள்வதற்கு இந்த உடன்பாட்டை பயன்படுத்திக் கொள்ள முயன்றாலும், பாதுகாப்பு ரீதியாக இந்த கூட்டு உருவெடுப்பதற்கு சாத்தியமில்லை என்பதே உண்மை.

ஏனென்றால் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் நீண்டகால முரண்பாடுகள் உள்ளன. சீனாவின் கடல் ஆதிக்க விரிவாக்கத்தை அவுஸ்திரேலியா வன்மையாக எதிர்க்கிறது.

இவ்வாறான நிலையில் இந்த நாடுகள் சீனாவின் நலன்களை உறுதி செய்வதற்கு இடமளிக்காது என்பதில் சந்தேகமில்லை.

ஆனாலும், சீனாவை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்த முனையும் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இந்த புதிய உடன்பாடு பின்னடைவை கொடுத்திருப்பதாகவே கருதப்படுகிறது.

இந்த 15 நாடுளையும் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு சீனா தனது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதை அமெரிக்கா வேடிக்கை பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இதனை முன்னிறுத்தியே அமெரிக்கா தோல்வியைச் சந்தித்துள்ளதாக பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, இதுபோன்ற ஆரவார உடன்பாடுகளுக்கு மத்தியில் சில சந்தடியில்லாத நகர்வுகளையும் சீனா முன்னெடுத்து வருகிறது.

அதில் ஒன்று, கொரோனாவுக்குப் பிந்திய சூழலை சீனா தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முனைந்திருப்பதாகும்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய போதும், அது உலகமெல்லாம் சென்று சேர்ந்த போதும், சீனாவைத் திட்டித் தீர்க்காத ஆளே இல்லை என்று கூறலாம்.

அந்தளவுக்கு உலகத்தின் வசைகள் முழுவதையும் சீனா வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனாலும் உள்நாட்டில் கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய சீனா, கொரோனாவுக்குப் பிந்திய சூழலை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதிலும், கணிசமான வெற்றிகளைப் பெற்று வருவதாகவே தெரிகிறது.

கொரோனா தொற்று ஆரம்பித்த போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பேசி ஒரு நிதியத்தை உருவாக்குவதாக அறிவித்தார்.

அது பிராந்தியத்தில் கொரோனாவை எதிர்கொள்வதற்கான கூட்டு ஒத்துழைப்புக்கான ஒரு உபாயமாக பார்க்கப்பட்டது.

இந்தியாவில் மிகமோசமாகப் பரவிய தொற்று, அந்தக் கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்வதில் புதுடெல்லியின் ஆர்வத்தைக் குறைத்து விட்டது.

ஆனால், சீனா இந்த தொற்றுக்கு எதிரான சூழ்நிலையை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதற்கு அதிகம் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது.

பிராந்திய நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியது தொடக்கம், கொரோனா தடுப்பூசிக்கான சந்தையை விரிவாக்கிக் கொள்வது வரைக்கும் அது மிகவலுவான அடித்தளத்தை இட்டு வருகிறது.

இன்றைய உலகின் மிகப்பெரிய வணிகமாக மாறப் போவது, கொரோனா தடுப்பு மருந்து மற்றும் கொரோனா சிகிச்சை மருந்துகள் தான்.

இவற்றைக் கண்டுபிடித்து சந்தைப்படுத்தும் நாடுகள், மிகப்பெரிய வருமானத்தைப் பெறப் போகின்றன.

ஏனென்றால், உலக சனத்தொகையில் குறைந்தது பாதிக்கும் அதிகமானோரது இதனைப் பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

எவ்வளவு செலவானாலும் இந்த தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொண்டால் தான், தாம் அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும் என்று சிந்திக்கிறார்கள்.

எனவே, அடுத்த ஆண்டில் கொரோனா தடுப்பு மருந்து மற்றும் சிகிச்சை மருந்துக்கான போட்டிதான் நடக்கப் போகிறது.

இந்தப் போட்டியில் இறங்கத் தயாராக இருக்கும் பல நாடுகள் ஏற்கனவே சந்தைக்கான போட்டிகளில் இறங்கி விட்டன.

இந்தப் போட்டிக் களத்துக்கு இலங்கை உள்ளிட்ட நாடுகளும் விதிவிலக்காக இருக்கவில்லை. ஏற்கனவே, தாங்கள் தருகிறோம் என்று ரஷ்யா முன்வந்தது. இப்போது சீனாவும் அதற்கு முன்வந்திருக்கிறது.

இவற்றை இந்த நாடுகள் நன்கொடையாக தரப் போவதில்லை. விலைக்குத் தான் விற்கப் போகின்றன.

அந்தசந்தையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, கொரோனா தடுப்புக்கான கூட்டணிகளையும் பல நாடுகள் உருவாக்கத் தொடங்கி விட்டன. சீனாவே அதில் முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த 10ஆம் திகதி சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர்லூ சாவோஹியூய் தலைமையில் நடத்தப்பட்ட மெய்நிகர் கருத்தரங்கில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் ஆகிய ஐந்து நாடுகளின் உதவி வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதனை“ஐந்தரப்பு குழு” என்று சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனாவுக்கு எதிராக செயற்படுவதற்கும், பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கும் ஒருங்கிணைந்த முயற்சி அவசியம் என்று இந்த ஐந்தரப்பு அணி ஏற்றுக் கொண்டுள்ளது என்று சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லூ சாவோஹியூய் தெரிவித்துள்ளார்.

சீனாவினால் அழைக்கப்பட்ட நான்கு நாடுகளும், இந்தியாவை சுற்றி நான்கு பக்கங்களிலும் இருப்பவை.

வடக்கே நேபாளம், கிழக்கே பங்களாதேஷ், தெற்கே இலங்கை, மேற்கே பாகிஸ்தான் என்று இந்த ஐந்தரப்பு கூட்டணியை சீனா உருவாக்கியிருக்கிறது.

இந்த ஐந்தரப்பு அணி இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கானது அல்ல. 

ஆனால், இந்தியாவின் நிம்மதியைக் குலைப்பதற்கானது.

இந்த நான்கு நாடுகளில் பாகிஸ்தான் தவிர ஏனைய மூன்றும், இந்தியாவின் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் இருந்தவை தான்.

ஆனால், அண்மைக்காலங்களில் இவை சீனாவின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளன. இந்த நாடுகளை இந்தியாவின் அரவணைப்பில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு சீனா படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறான நிலையில் தான், கொரோனாவை எதிர்கொள்வதற்கான ஐந்தரப்பு அணிக்குள் இந்த நாடுகளை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது சீனா. 

இந்த ஐந்தரப்பு அணியில் பங்கேற்றது இலங்கை தரப்பில் பங்கேற்ற இராஜாங்கஅமைச்சர் தாரக பாலசூரிய, ஊடகங்களுடன் அதுபற்றி பேசவேயில்லை. 

சீன உதவி வெளிவிவகார அமைச்சர் இதனை வெளியே கசியவிடாமல் இருந்திருந்தால், இது ஒரு இரகசிய கலந்துரையாடலாகவே கருதப்பட்டிருக்கும்.

இந்த ஐந்தரப்பு அணி இந்தியாவுக்கு எதிராக ஏன் உருவாக்கப்பட்டது?

கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்தில் இந்தியாவும் முக்கியமான பங்கை வகித்து வருகிறது. மருந்து கண்டுபிடிப்பு, தயாரிப்பில் உலகிலேயே இந்தியா மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.

இந்தியாவின் அந்த வகிபாகத்தை வைத்து தான் அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றிய போது, மலிவு விலையில் இந்தியாவிடம் இருந்து தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்வதற்கு உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார்.

இவ்வாறான ஒரு சூழலில், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு தடுப்பு மருந்து கொடுப்பதை உறுதிப்படுத்துவதன் மூலம், சீனா தனது ஆதிக்கத்தை பெருங்கிக் கொள்ள முனைகிறது. 

அதைவிட இந்தியாவின் சந்தை வாய்ப்பை முடக்கவும் முற்படுகிறது.

இந்த ஐந்தரப்பு கூட்டணியில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதன் மூலம் தெரிந்தோ தெரியாமலோ, சீனாவின் அணியில் இலங்கையும் இடம்பெற்று விட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54