கொரோனா பரவல் நிலை தெரிந்தும் சுகாதார அமைச்சிற்கு குறைந்தளவில் நிதி ஒதுக்கீடு : சரத் பொன்சேகா

Published By: R. Kalaichelvan

20 Nov, 2020 | 04:49 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

வரவு செலவு திட்டத்தில் தவறான தரவுகளை முன்வைத்து நாட்டை ஏமாற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது, நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் சுகாதார அமைச்சிற்கு ஒதுக்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று , 2021 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கதின் வரவு செலவு திட்டத்தில் பாரிய மோசடிகளே இடம்பெற்றுள்ளது, எண்ணிக்கைகளில் முரண்பாடுகள் உள்ளது.

வரவு செலவு திட்டத்தில் தவறான தரவுகளை முன்வைத்து நாட்டை ஏமாற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக மீறும் விதத்தில் செயற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக விவசாயிகளுக்கான உர மானியம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நாம் அரச ஊழியர்களுக்கு எதிராக செயற்பட்டதாக கூறுகின்றனர், ஆனால் எமது ஆட்சியில் போல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரித்த ஆட்சி வேறு எதுவும் இல்லை. ஒரு சிலர் தண்டிக்கப்பட்டதை நாம் மறுக்கவில்லை, ஆனால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நல்லாட்சியில் அவர்களை தண்டித்தது சரியானதே.

மேலும் கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமையில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதே எமதும் நிலைப்பாடாகும், ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் பல தவறுகளை விடுகின்றனர்.

எமக்கு தடுப்பூசிகள் வேண்டும்,இப்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பது எமக்கும் தெரியும், ஆனால் முன்னாயத்தமாக நாம் நிதியை ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும், ஆனால் வரவு செலவு திட்டத்தில் சுகாதார அமைச்சிற்கும், கொவிட் வைரஸ் தடுப்பு செயற்பாடுகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி போதாது.

இந்த ஆட்சியில் மட்டுமே சிறைக் கைதிகள் சுதந்திரமாக செயற்பட்டு வருகின்றனர், சிறையில் உள்ள பிள்ளையான் அண்மையில் கட்டிட திறப்புவிழாவில் கலந்துகொண்டுள்ளார்.

அரசியலில் ஈடுபட்டு வருகின்றார், மரண தண்டனை கைதிக்கு பாராளுமன்றத்தில் பங்குகொள்ள எந்த நாட்டில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனைவிட நல்லதொரு வேலையை செய்ய முடியும்.

பாராளுமன்றத்தில் சிறைச்சாலைகளை அமைத்துக்கொள்வோம். அப்படி செய்தால் கைதிகளுக்கும் பாராளுமன்றத்தில் நேரடியாக பங்குகொள்ள முடியும். எமது ஆட்சியை விமர்சித்து இன்று ராஜபக் ஷ அரசாங்கம் மிக மோசமான ஆட்சி முறைமையை நடத்தி வருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்