கட்டுக்குள் வராத கொரோனா

Published By: J.G.Stephan

15 Nov, 2020 | 04:34 PM
image

*‘மேல் மாகாணத்தில் தொற்று மிகத் தீவிரமாக பரவியிருக்கிறது என்பதை அரசாங்கம் ஏன் சரியாக பகுப்பாய்வு செய்யத் தவறியது என்ற குழப்பம் இன்னமும் காணப்படுகிறது’

கொரோனா தொற்று இப்போது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது. இன்னமும், அது சமூகத் தொற்றாக மாறவில்லை என்று அரசாங்கமும், சுகாதார அதிகாரிகளும் கூறிக் கொண்டிருந்தாலும், நாட்டின் பல இடங்களில் ஏற்கனவே அவ்வாறான நிலை தோன்றி விட்டதாக கூறியிருக்கிறது பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்.

கொழும்பு வடக்கு, மற்றும் கம்பஹாவின் பல பகுதிகளில் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத வகையில் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கூறியிருப்பது அதிர்ச்சியான தகவல். தற்போது மேல் மாகாணத்துக்குள் தீவிரமடைந்துள்ள தொற்று அதனைக் கடந்து செல்லுமேயானால், நிலைமைகள் இன்னும் மோசமடையும்.

கொரோனா தொற்றின் முதலாவது அலையை வெற்றிகரமாக கையாண்ட அரசாங்கத்தினால் தற்போது அவ்வாறு செயற்பட முடியவில்லை. குழப்பமான முடிவுகளும், தவறான நடவடிக்கைகளும், இந்தமுறை தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பக்கத்தில் பொதுமக்கள் தான், இதற்கு பொறுப்பு என்று கூறி குற்றம்சாட்டிய ஜனாதிபதி, பயங்கரவாதப் பிரச்சினை என்றால் நானே தீர்த்திருப்பேன், இதனை சுகாதாரத் துறையினர் தான் தீர்க்க வேண்டும் என்று மீண்டும் பந்தை தன்னிடம் இருந்து தட்டி விட்டுள்ளார்.

அது போதாதென்று, இப்போது அவர் பொதுமக்களுடன் ஊடகங்களும் பொறுப்பின்றி நடந்து கொண்டதால் தான், இந்தநிலை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுபோன்ற தருணங்களில், இவ்வாறான கருத்துக்கள் நிலைமையை மோசமாக்குமே தவிர, சிறப்பாக கையாளுவதற்கு உதவாது. ஆனால் அரசாங்கம் அதனைப் பற்றி கருத்தில் கொள்வதாக இல்லை.


மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தைகடந்த 9ஆம் திகதிஅதிகாலை நீக்கிய கையுடன், பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. அதேவேளை, அடுத்த இரண்டு நாட்களிலேயே மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.  மேல் மாகாணத்தில் உள்ள தொற்று ஏனைய பகுதிகளுக்குபரவுவதைதடுக்கவே, இந்த நடவடிக்கை என்பதுதெளிவாகத் தெரிகிறது. அவ்வாறாயின், 9ஆம்திகதி அனைத்து போக்குவரத்துக்களையும்மீள ஆரம்பிக்கஅரசாங்கத்தினால் ஏன் அனுமதி கொடுக்கப்பட்டது?

மேல் மாகாணத்தில் தொற்று மிகத் தீவிரமாக பரவியிருக்கிறது என்பதை, நாளாந்த தொற்று நிலைமை அறிக்கையை பார்க்கின்ற எவராலும், இலகுவாக ஊகிக்க முடிகிறது. எனினும் அரசாங்கம் ஏன் இதனை சரியாக பகுப்பாய்வு செய்யத் தவறியது என்ற குழப்பம் இன்னமும் காணப்படுகிறது. தினமும் வெளியிடப்படுகின்ற தொற்றாளர் எண்ணிக்கையையும், மரணமடைவோரின் எண்ணிக்கையையும் வைத்து மாத்திரம்- உண்மையான நிலையை தீர்மானிக்க முடியாது.

தொற்று மற்றும் மரணம் குறித்து அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிபரங்கள் தவறு என்றும், உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுகிறது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டுகிறது.இவ்வாறான சந்தேகம் பொதுமக்களுக்கும் உள்ளது. அதேவேளை, அரசாங்கம் வெளியிடுகின்ற எண்ணிக்கைகள் கூட உண்மையான தொற்றாளர்களின் எண்ணிக்கை அல்ல. தினமும் கண்டுபிடிக்கப்படுகின்ற தொற்றாளர்களின் எண்ணிக்கையைத் தான் அரசாங்கம் வெளியிடுகிறதே தவிர, சமூகத்தில்உள்ள புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அல்ல.

அதனை எவராலும் கண்டுபிடிக்கவும் முடியாது. அத்தகைய வசதி உலகில் எங்கும் இருக்கவும் வாய்ப்பில்லை. பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் தான் இப்போது தொற்றாளர்களின் எண்ணிக்கையாக வகைப்படுத்தப்படுகிறார்கள். சமூகத்தில் கண்டுபிடிக்கப்படாத தொற்றாளர்கள் இதனை விடவும் அதிகமாக இருக்கக் கூடும். இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்றாளர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா நோய்க்கான எந்த அறிகுறிகளும் இருக்கவில்லை என்று மருத்துவநிபுணர்கள்கூறுகிறார்கள்.

அறிகுறிகள் இருந்தால் தான் எவரேனும், பரிசோதனைக்கு செல்வார்கள். நோய்க்கான அறிகுறி இல்லாதவர்கள் தொடர்ந்து சமூகத்தில் இயங்கிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்கள் நோய்க்காவிகளாகவும் இருப்பார்கள்.இது தான் ஆபத்தான நிலை.  அறிகுறிகளுடன் நோயை வெளிப்படுத்துபவர்களுக்கு, சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். அறிகுறியற்றவர்களை கண்டுபிடிப்பதே கடினம். 

தொற்றாளருடன் தொடர்பில் இருப்பவர்களைமட்டுமே கண்டுபிடிக்கமுடிகிறது. கொழும்பில் அண்மையில் நடத்தப்பட்ட எழுமாற்றான பரிசோதனையில் 5 சதவீதமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், எனவே, கொழும்பில் நடமாடித் திரியும் ஆறு இலட்சம் பேரில் 30ஆயிரம் பேருக்கு தொற்று இருக்கலாம் என்றும் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறார் கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி.

இந்தக் கணிப்பு ஒரு எடுகோளின் அடிப்படையிலானது தான். இதில் 50 வீதம் சரியாக இருந்தால் கூட,15 ஆயிரம் தொற்றாளர்கள் நடமாடிக் கொண்டிருப்பார்கள்.  இது மோசமான சுகாதார நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான அறிகுறியாகவே இருக்கிறது. இவற்றுக்கு அப்பால், கொரோனா தொற்று மரணங்கள் இப்போது வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் நான்கு,ஐந்து பேர் உயிரிழப்பதுஇப்போது சாதாரணமாக மாறி விட்டது,

இவ்வாறு உயிரிழப்பவர்கள் பெரும்பாலானவர்கள், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான். இதுவரை உயிரிழந்தவர்களில் 93 வீதமானோர் தொற்றா நோயினால்தான் உயிரிழந்தனர் என்று ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் கூட, இவ்வாறான ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.

தொற்றா நோயினால் இறந்தவர்களை அமெரிக்க மருத்துவர்கள் கொரோனா மரணங்களுக்குள் சேர்த்துக் கொள்வதால் தான், அமெரிக்கா கொரோனாஇறப்பில்முதலிடத்தில் இருப்பதாகவும், ஜேர்மனி போன்ற நாடுகள் அவ்வாறு சேர்ப்பதில்லை என்றும் அவர் கூறியிருந்தார். தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் போது அவர்களுக்கு கூடிய விரைவில் மரணம் நிகழ்கிறது.  பலவீனமானவர்கள் தான் கொரோனாவின் பிரதான இலக்கு. அண்மையில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக மாத்திரம் இருக்கவில்லை.

பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே உயிரிழந்திருக்கிறா்கள். தொற்று கண்டறியப்படாமல் வீடுகளிலேயே மரணத்தை சந்தித்திருக்கிறார்கள். தொற்றா நோயாளிகள் கொரோனாவை அறிய முன்னரே மரணத்தைதழுவும் சுகாதார நெருக்கடி தோன்றியிருக்கிறது. மருத்துவ சிகிச்சைக்கு முன்னரே மரணமடைகின்ற இந்த நிலையானது, தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதில் உள்ள நெருக்கடியை வெளிப்படுத்துகிறது.

சமூகத்துக்குள் ஊடுருவியுள்ள தொற்றைக் கண்டறிவதற்கு அதிகளவில் பி.சி.ஆர் சோதனை நடத்த வேண்டும் என்று, அரசாங்கமருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் சில மாதங்களுக்கு முன்னரே, ஆலோசனைகூறப்பட்டது. அப்போது அரசாங்கம்அதனைக் கண்டுகொள்ளவில்லை. அதற்கு பரிசோதனைக்கு ஏற்படும் அதிகசெலவினமும் ஒருகாரணம் தான். நாளொன்றுக்கு 60 மில்லியன்ரூபா, பி.சி.ஆர்சோதனைகளுக்காக செலவிடப்படுவதாக அண்மையில் அரசாங்கம் கூறியிருக்கிறது. இப்போது நிலைமை கையை மீறிச் சென்ற பின்னர், தான் பி.சி.ஆர்.பரிசோதனைகளை அதிகரிக்க முனைகிறது அரசாங்கம். அதேவேளை, அரசாங்கம் கொரோனா தொற்று தொடர்பான முடிவுகளை எடுப்பதில் தடுமாறுகிறது.

சுகாதார நிலையும், பொருளாதார நிலையும் அரசாங்கத்தின்கைகளைக்கட்டிப்போட்டிருக்கிறது. இவ்வாறானநிலையில், சமூகத் தொற்றாக மாறிக் கொண்டிருக்கும் கொரோனாவை, இனிக் கட்டுப்படுத்துவது இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை என்பதை தான் இப்போதைய நிலைமைகள் உணர்த்தியிருக்கின்றன.

-என்.கண்ணன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04