தமிழ்த் தேசியத்தின் திரிசங்கு நிலை 

Published By: J.G.Stephan

15 Nov, 2020 | 12:31 PM
image

தமிழ்த் தேசியத்தின் திரிசங்கு நிலை என்ற தலைப்பில் கடந்த வாரம் வெளியான பத்தியின் தொடர்ச்சியாக…, 

கடந்த வார கட்டுரையை படிக்கhttps://www.virakesari.lk/article/93974

சம்பந்தனைப் பொறுத்த வரையில் பங்காளிக்கட்சிகளை தன்னுடன் வைத்திருப்பதன் மூலம் கூட்டமைப்புக்கு வெளியே உருவாகின்ற கூட்டுக்கு ‘செக்’ வைக்க முடியும் என்று கருதலாம். அதாவது, தற்போதைய சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியையும், கொறடா பதவியையும் பங்காளிக்கட்சிகளான புளொட்டும், ரெலோவும் கோரிக்கொண்டிருக்கின்றன. இந்தப்பதவிகளை புளொட்டினதும் ரெலோவினதும் கோரிக்கைக்கு இசைந்து வழங்குவதன் மூலமாக அத்தரப்புக்களை தம்முடனனேயே நிலைநிறுத்த முடியும் என்ற ‘அரசியல் கணக்கிற்கு’ சம்பந்தன் செயல்வடிவம் கொடுக்க முனையலாம்.

பங்காளிக்கட்சிகளின் கோரிக்கைகள் நடைமுறைச்சாத்தியமாகின்றபோது, அவையும்,  தாம் முன்வைத்த நிபந்தைகளுக்கு சம்பந்தன் உள்ளிட்ட தமிழரசுக்கட்சி ‘சரண்’ அடைந்து விட்டது என்ற மனோ நிலையில் எதிர்காலத்திலும் அதே மூலோபயத்தினை பயன்படுத்தி ‘பிடியை’ இறுக்கமாகக் கொண்டு கூட்டமைப்பை நகர்த்திச் செல்லமுடியும் என்ற பெருநம்பிக்கையை தமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும். 

அத்துடன் தேர்தல்களை எதிர்கொள்வதற்காக ‘கூட்டமைப்பு’ என்ற ‘பாதுகாப்பு வளையமும்’ பங்காளிக்கட்சிகளுக்கு மேலும் உறுதியாகுவதுடன், ஒவ்வொரு  தேர்தல்களிலும் தலையிடியாக இருக்கும் ஆசன ஒதுக்கீடுகளையும் நியாயமாக பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்ற மனோநிலையையும் அவற்றுக்குள் தோற்றம் பெறச் செய்யும். இவ்விதமான நிலையால் பங்காளிக்கட்சிகளும் ‘கூட்டமைப்புக்குள்ளேயே’ தொடர்ந்தும் பயணிப்பதற்கான அதிக விருப்பினையே கொண்டிருக்கும்.  

அதுமட்டுமன்றி சம்பந்தன் உள்ளிட்டவர்களின் விருப்பினை பிரதிபலிக்கும் முகமாக சேனாதிராஜாவின் கூட்டமைப்புக்கு வெளியிலான கூட்டணி நகர்வுகளுக்கும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் ஊடாக பங்காளிக்கட்சிகளும் ‘முட்டுக்கட்டைகளை’ போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

அதேநேரம், பங்காளிக்கட்சிகளை தம் வசப்படுத்துவதற்காக சம்பந்தன் மேற்படி நடவடிக்கையை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் ஊடகப்பேச்சாளர் பதவியை ‘அண்மைக்கால அரசியல் நண்பர்’சிறிதரனுக்கே வழங்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ள சுமந்திரனையும், ஊடகப்பேச்சாளர், கொறடா ஆகிய இரண்டு பதவிகளையும் பங்காளிகளிடத்தில் வழங்கமுடியாது என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கும் சிறிதரனையும் சாந்தப்படுத்த வேண்டிய நிலையொன்று அவருக்கு ஏற்படும். அந்த ‘சாந்தப்படுத்தல்’ எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற கேள்வியும் உள்ளது.

ஏனென்றால், மூன்று தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானமை, இரண்டு தடவைகள் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்றமை, பாராளுமன்ற அரசியலில் சம்பந்தனுக்கு அடுத்தாக ‘அரசியல் சிரேஷ்டத்துவத்தினை’ (தற்போதைய தமிழரசுக்கட்சியின் சார்பில்) கொண்டிருக்கின்றமை ஆகிய பெருமைகளை சிறிதரன் கொண்டுள்ளார். அத்தகையவர்,  தன்னை நோக்கி வந்துள்ள ஊடகப்பேச்சாளர் பதவியை விட்டுக்கொடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. 

அத்துடன் சுமந்திரனும் தனது முன்மொழிவு நடைமுறைச்சாத்தியமாகாது இருப்பதையும் விரும்பமாட்டார். அவ்வாறு விட்டுக்கொடுப்பற்ற நிலைமைகள் ஏற்படுகின்றபோது புதிய பதவி நிலைகளை தெரிவு செய்வதற்காக வாக்கெடுப்பு கோரப்படும். கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவைப் பொறுத்தவைரயில் சிறிதரன், சுமந்திரன் அணி பக்கமே ‘பெரும்பான்மை’ உள்ளமையையும் குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது.

ஆகவே நிலைமைகள் மோசமடைந்து வாக்கெடுப்புக்குச் செல்வதற்கு சம்பந்தன் நிச்சயம் இடமளிக்கமாட்டார் என்று நம்பலாம். அப்படியென்றால் தனது ‘அரசியல் சீடரான’ சுமந்திரனின் முன்மொழிவு ஒருபக்கம், தன்னுடைய தலைமைக்கான ‘தனித்துவம்’ மறுபக்கம். இதில் எதனை தக்கவைப்பதென்று அவருக்கு ஏற்பட்டிருக்கும் இக்கட்டான நிலையிலிருந்து எவ்வாறு மீள்வதென்பது அவருக்கு மட்டுமே வெளிச்சமான விடயம். 

அடுத்து இடம்பெற்ற மற்றொரு விடயம் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் பதவிக்கு சேனாதிராஜா நியமிக்கப்பட்டமை. உள்ளுராட்சி மன்றங்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் கூட்டமைப்பின் பங்காளிகள் சகிதம் கூட்டமொன்று இடம்பெற்றது. 

இந்தக் கூட்டத்தில் திடீரென ‘தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு பதிலளிப்பதற்காக தீர்மானம் எடுக்க வேண்டும்’ என்ற கூற்று பிரதான பொருளானது. ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவதானால் அதன் தலைவர், செயலாளர் யார் என்ற பரிந்துரைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருப்பதாக’ சி.வி.கே.சிவஞானம் ஆவணம் சகிதம் வெளிப்படுத்தினார். 

‘தலைவர் சம்பந்தனாக இருக்கையில் செயலாளர் ஒருவர் கூட்டமைப்புக்காக நியமிக்கப்பட வேண்டியுள்ளது என்ற கோரிக்கையை’ முன்வைத்த அவர் ‘அதற்கு சேனாதிராஜாவே பொருத்தமானவர்’ என்றும் முன்மொழிந்தார். இந்த முன்மொழிவை பங்காளிக் கட்சிகளான ரெலோவும், புளொட்டும் எதிர்பார்த்திருக்காத போதும் அதனை ஏகமனதாக ஆமோதித்தனர். தமிழரசுக்கட்சியின் தற்காலிக செயலாளராக உள்ள வைத்தியர்.சத்தியலிங்கமும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். கூட்டமைப்பிற்கான திடீர் செயலாளர் அறிவிப்பை இட்டு அவர் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். காரணம், அவர் இந்த விடயத்தினை முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை. அவ்வாறு அறிந்திருந்தால் சிலவேளை அவர் சார்ந்தோரின் அறிவுரைகளைப் பெற்றாவது ‘சட்டரீதியான தர்க்க வாதங்களை முன்வைத்து நியமனத்திற்கான தடுப்புக்களை’ போட்டிருப்பார். இல்லை ‘நமக்கேது வம்பு’ என்று கூட்டத்தில் பங்குபற்றாது நழுவியிருப்பார். எனினும் அந்தக் கூட்டத்தின் திரைமறைவு நிகழ்ச்சி நிரலை அறியாமை அவரது துரதிஷ்டம் தான், 

அத்தகைய நிலையிலிருந்த சத்தியலிங்கம், கூட்டமைப்புக்கான செயலாளர் நியமனம் இடம்பெற்றபோது ‘சேனாதி அண்ணன் இதுபற்றி சொல்லவே இல்லையே, நான் செயலாளராக இருந்து என்ன செய்வது’ என்று மனக் குமுறல் அடைந்திருக்கின்றார். அதனை கூட்டம் முடிந்த வேளையோடு நெருங்கியவர்களிடத்தில் அவ்வாறே பகிர்ந்தும் இருக்கின்றார். சத்தியலிங்கத்தின் நிலைமை அவ்வாறிருக்க, கூட்டமைப்பினுள் தமிழரசுக்கட்சியானது ‘தான்தோன்றித்தனமாகச்’ செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்களை அடுக்கும் பங்காளிக்கட்சிகள் கூட்டமைப்பின் செயலாளர் பதவிக்கு சேனாதிராஜா முன்மொழியப்பட்டபோது அதனை சற்றும் மறுதலிக்காது ஏகமனதாக ஆதரித்திருக்கின்றது என்றால் அதன் பின்னணியில் ‘எதுவுமில்லை’ என்று கொள்ள முடியாது.  

கட்டமைக்கப்படாத கூட்டமைப்பிற்கு ‘செயலாளர்’ என்ற ‘கௌரவ வேடத்தினை’ தரிப்பதை விடவும் அதனை தமிழரசுகட்சிக்கு வழங்குவதன் மூலம் குழப்பிப்போயிருக்கும் குட்டை மேலும் குழம்பும் என்று பங்காளிக்கட்சிகள் கருதியிருக்கலாம். அவ்விதமான குழப்ப நிலைமை ஏற்படுகின்றபோது கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக்கட்சியின் மேலாதிக்கம் அகன்றுவிடும் என்றும் பங்காளிக்கட்சிகள் கணக்குப்போட்டிருக்கலாம்.

பங்காளிகள் அவ்விதமான கணக்கினையே போட்டிருக்கின்றன என்பது அதற்கு அடுத்து நடைபெற்ற விடயங்களுடன் இணைத்துப் பார்க்கையில் கனகச்சியதமாக இருக்கின்றது. ஏனெனில் கூட்டமைப்பு சார்ந்த நியமனங்கள் அனைத்தும் அதன் ஒருங்கிணைப்பு குழுவிலேயே தீர்மானிக்கப்படுவது வழமை. அவ்வாறிருக்க, கூட்டமைப்பின் தலைமைக்கும், தமிழரசுக்கட்சியின் சார்பில் ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பினர்களுக்கும் முன் அறிவிக்கப்படாதே செயலாளர் நியமனம் இடம்பெற்றுள்ளது. 

ஆகவே இந்த நியமனம் நிச்சயமாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதை செயலாளராக தெரிவு செய்யப்பட்ட சேனாதிராஜா சில மணிநேரங்களிலேயே உணர்ந்துவிட்டார். அதன் வெளிப்பாடாக, சுமந்திரனை சந்திப்பதற்கு அன்றே முனைந்திருந்தார். இருப்பினும் அது சாத்திமாகது போகவும் மறுதினமும் முயற்சித்திருக்கின்றார். மரணச்சடங்கு மற்றும் சொந்தக் கிராமத்திலும் அதனை அண்மித்த பகுதிகளுக்குமான களப்பயணங்களில் ஈடுபட்டிருந்த சுமந்திரனால் நேரகாலத்துடன் யாழ். திரும்ப முடிந்திருக்கவில்லை. 

இந்நிலையில் நியமனம் பெற்ற இரண்டாவது நாளில் சுமந்திரனை அவருடைய யாழ்.இல்லத்தில் வைத்து சந்தித்தார் சேனாதிராஜா. சேனாதிராஜாவுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் மட்டுமே முதலில் கலந்துரையாடல் ஆரம்பித்திருந்தபோதும், பிறிதொரு காரணத்திற்காக சுமந்திரனின் ‘அரசியல் நண்பரான’ சிறிதரன் அங்கு சென்றமையால் அவரும் அச்சந்தப்பில் பங்கேற்றார். 

அதுமட்டுமன்றி, சுமந்திரனுடனான நட்புவட்டத்தினை கிளிநொச்சி தாண்டி மன்னார் வரையில் விஸ்தரிப்பதற்கு சிறிதரன் விரும்பியிருந்தார். அதனால் தனது நண்பரான பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனையும் சுமந்திரனின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். நட்பு வட்டத்தினை பெரிதாக்குவது என்பதற்கு அப்பால், சாள்ஸ் நிர்மலநாதனுக்கும், சுமந்திரனுக்கும் இடையிலான கீறல்களை ஆற்றுப்படுத்துவது தான் சுமந்திரன் இறுதி இலக்காக இருந்தது.

ஏனென்றால், கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது சுமந்திரன் மன்னாருக்கு வரவே கூடாது, அவர் தோன்றும் அரசியல் மேடைகளில் பங்குபற்றவே மாட்டேன் என்று திடசங்கற்பம் பூண்டிருந்தவர் சாள்ஸ் நிர்மலநாதன். அவ்விதமான நிலைப்பாட்டில் இருக்கும் சாள்ஸ் நிர்மலநாதன், சுமந்திரனுடன் தொடர்ந்தும் முரண்பட்டே இருப்பாராயின் தமது அடுத்த கட்ட நகர்வுகளுக்கு அவர் முட்டுக்கட்டையாகி விடலாம் என்று எண்ணியே ‘சுமந்திரன், சாள்ஸ்’ புத்துறவை ஏற்படுத்த விளைந்திருக்கின்றார் சிறிதரன். அவர் அதில் வெற்றியும் கண்டுவிட்டார் என்பது வேறுகதை. 

இந்நிலையில், சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், சாள்ஸ் ஆகியோர் கூடிப்பேசலாயினர். முதலில் சேனாதிராஜா மும்முரமாக நின்று கூட்டமைப்புக்கு வெளியில் உருவாக்கிவரும் கூட்டணியை தாம் விரும்பவில்லை என்று சுமந்திரன், சிறிதரன், சார்ள்ஸ் ஆகிய மூவரும் நேரடியாகவே தெரிவித்திருக்கின்றனர். 

வடக்கில் மக்களால் தெரிவாகியுள்ள தங்கள் மூவரையும் தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகளுடன் இணைத்துச் செயற்பட விரும்பவில்லை என்றால் கட்சி உறுப்புரிமையை துறந்து விடுகின்றோம் என்று சிறிதரன் உள்ளிட்டவர்கள் கூறுமளவிற்கு நிலைமைகள் மோசமடைந்திருந்தன. 

அதுமட்டுமன்றி, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் சபைகளை கூட்டமைப்பின் தலைமையில் அமைப்பதற்கு உங்களுடன் (சேனாதிராஜாவுடன்) இணைந்து பணியாற்றிய என்னை, புறக்கணித்து அது குறித்து கூட்டமொன்றை நடத்தியமைக்கான காரணத்தினை கூறுமாறு சுமந்திரன் கோரியிருக்கிறார்.

ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களான தம்மை புறக்கணித்து அக்குழுவிலே உறுப்புரிமை இல்லாதவர்களின் பங்கேற்புடன் எவ்வாறு ஒருங்கிணைப்புக்குழுவை நடத்த முடியும். அதில் முக்கிய தீர்மானங்களை எடுக்க முடியும் என்றும்  அடுக்கடுக்காக சேனாதிராஜவிடத்தில் எழுப்பட்டன.  எனினும், தேர்தல் காலத்தில் நடைபெற்ற ‘கசப்பான’ செயற்பாடுகளை மீள நினைவுபடுத்திய சேனாதிராஜா சுமந்திரன் மற்றும் அவரது அணிமீது பலமான குற்றச்சாட்டுக்களை அடுக்கியவாறே இருந்திருக்கின்றார். ‘கசனப்பான விடங்களை பட்டியலிடுங்கள்’ என்று சுமந்திரன் தரப்பில் இறுக்கமாக கோரப்பட்டபோதும் சுட்டிக்காட்டும்படியாக எவ்விதமான விடயங்களையும் சேனாதிராஜா வெளியிட்டிருக்கவில்லை.  

அதேநேரம், தமிழரசுக்கட்சியின் செயலாளரே கூட்டமைப்பினதும் செயலாளராக இருப்பார் என்று 2010ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது. இந்நிலையில் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப். வெளியேறி உள்ளது. புளொட் உள்ளே வந்துள்ளது. ஆகவே தான் தற்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், குழு உறுப்பினர்களின் பெயர் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. அதுபற்றி ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்தேசப்பிரிய தன்னுடனும் பேசியதாக சேனாதிராஜாவிடத்தில் கூறிய சுமந்திரன் ‘புதிய செயலாளரை’ தேர்தல்கள் ஆணைக்குழு கோரவில்லை என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.  

அது சேனாதிராஜாவை சிந்திக்க வைக்கவும், ஈற்றில், வழமைபோன்றே ‘சரி தம்பி நாங்கள் திரும்பவும் பேசுவோம். ஒன்றாய் செயற்படுவோம். யாழ்.மாவட்ட உள்ளுராட்சி சபைளை பற்றி கலந்து பேச வேண்டியுள்ளது. அதற்கு வந்து விடுங்கள்’ என்று கடுமையான நிலைமைகளை தணித்த அவர் கூட்டமைப்புக்கு வெளியே உருவாகும் ‘கூட்டணி’ தொடர்பில் தீர்க்கமாக எதனையும் குறிப்பிட்டிருக்கவில்லை. இந்த சந்திப்பின் பிற்பாதியில் சேனாதிராஜாவின் புதல்வர் கலைஅமுதனும் ‘தந்தையின்’ அழைப்பில்’ அவ்விடத்திற்கு வந்ததாகவும் தகவல்.

அதன் பின்னர் யாழ்.மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் நிலைமைகள் தொடர்பில் சுமந்திரன், சிறிதரனின் பிரசன்னத்துடன் கூட்டம் நடைபெற்றிருந்தது, கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட அதே விடயங்களே மீளவும் பேசப்பட்டதால் செல்வம், சித்தார்த்தன் ஆகியோருக்கு அது ‘முகச்சுழிப்பை’ ஏற்படுத்தியிருக்கின்றது. எவ்வாறாயினும், கூட்டமைப்பின் கௌரவப் பதவியை ஏற்ற சேனாதிராஜாவுக்கு அவரது கட்சிக்குள்ளிருந்தே மெல்லென ‘அழுத்தங்கள்’ ஆரம்பித்துவிட்டன. அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் முழுக்க முழுக்க சுமந்திரனுடன் இணைக்கப்பாட்டிற்குச் சென்று அணியாகிவிட்டதையும் சேனாதிராஜா இனியும் உணராதிருக்க வாய்ப்பில்லை. 

சுமந்திரனின் சிறுப்பிட்டிக் கூட்டத்திற்குச் சென்றதால் தன்னுடன் இருந்தவர்களுக்கு மனக்கசப்பு, கூட்டமைப்புக்கு வெளியில் கூட்டணி அமைப்பதை சம்பந்தன் விரும்பான்மை, செயலாளர் பதவியை முறையின்றி பெற்றதால் சுமந்திரன் அணியின் அழுத்தம் என்று சேனாதிராஜாவின் நிலைமை தற்போது இடியப்பச்சிக்கலாவிட்டது. இந்த நிலைமையில் இருந்து எவ்வாறு மீள்ப்போகின்றார் என்ற எதிர்பார்ப்பு வலுத்துவருகையில் அவர் மற்றுமொரு ‘அரசியல் பொறிக்குள்’ சிக்கும் நிலைமை  ஏற்பட்டுள்ளது.

அதாவது, கூட்டமைப்பிற்கு வெளியில் ஒருங்கிணைந்துள்ள தமிழ்த்த் தேசியக்  கட்சிகளின் ‘ஐக்கிய அணிக்கான’ கட்டமைப்பினை உருவாக்கும் உறுப்பினர்கள் குழு விரைவில் கூடவுள்ளது. அக்குழு கூடுகின்றபோது ‘ஐக்கிய அணிக்கு’ தலைவர், செயலாளர், பொருளாளர், அரசியல் பீடம் உள்ளிட்ட பதவி நிலைகளை ஸ்தாபிக்கப்பட வேண்டி சூழல் உருவாகும். அத்தகையதொரு சூழலில், தமிழரசுக்கட்சியின் தலைவர், கூட்டமைப்பின் செயலாளர் ஆகிய பதவிகளை அலங்கரித்துக்கொண்டிருக்கும் சேனாதிராஜாவுக்கு ஒருங்கிணைந்துள்ள ஐக்கிய அணியின் தலைமைத்துவப் பொறுப்பு வழங்கப்படுமா என்பது தான் பிரதான கேள்வியாகின்றது. 

சேனாதிராஜா கூட்டமைப்பின் செயலாளர் பதவியைப் பெற்றதன் பின்னர் அவர் மீதான ‘அரசியல் நேர்மைத்தன்மை’ தொடர்பில் ஐக்கியத்திற்காக ஒருங்கிணைந்துள்ள தரப்புக்கள் மனச்சஞ்சலம் அடைந்திருக்கின்றன. அத்தகைய தரப்புக்கள் தலைமைத்துவ பாத்திரத்தினை சேனாதிராஜா ஏற்பதற்கு இலகுவாக  ஒத்திசைந்து அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. 

ஐக்கியத்திற்காக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டில் சேனாதிராஜா களமிறங்கியபோது ‘அவரே தலைவர்’ என்ற மனோநிலையே அனைவரிடத்திலும் இயல்பாக காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த  நிலைமையில் பலத்த மாற்றம் ஏற்பட்டு விட்டது. தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவை ‘தமிழ்த் தேசிய கட்சிகளின் ஐக்கிய அணிக்கான’ தலைமைப் பொறுப்புக்கு உகந்தவர் என்று சி.வி.விக்கினேஸ்வரன் முன்மொழிந்திருக்கின்றார். 

இது வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ள முன்மொழிவு. இதனைவிட திரைக்குப்பின்னால் எத்தகைய முன்மொழிவுகள், திட்டங்கள் இருக்கின்றன என்பது இதுவரை வெளிவராத சங்கதி. தற்போது சேனாதிராஜாவுக்கு ஏறக்குறைய ‘இரட்டைத் தோணியில்’ கால் வைத்த நிலை தான் ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் சேனாதிராஜாவும், சும்மா இல்லை. தனக்கு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை போக்கும் ஏக நேரத்தில் ‘ஐக்கிய அணியையும்’ பலப்படுத்துவதற்கும் அதன் ‘தலைமையைப்’ பெறுவற்கும் காய்களை நகர்த்தியுள்ளாராம். 

தமிழரசுக்கட்சிக்கு நிரந்தர செயலாளர் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளது. அதற்காக விரைவில் அக்கட்சியின் பொதுச்சபை கூட்டப்படவுள்ளது. அந்தக் கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைமையை கிழக்கு மாகாணத்திற்கு வழங்கி விட்டு செயலாளர் பதவியை தான் தக்கவைத்துக் கொள்வதே சேனாதிராஜாவினுடைய காய்நகர்த்தலின் உள்ளீடாகும். சேனாதிராஜாவின் இந்த பதவிநிலை மாற்றதினை யாரும் கேள்விக்கும் உட்படுத்த முடியாது. ஏனென்றால் கடந்த பொதுச்சபை கூட்டத்தில் தலைவர் வடக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்டதால் செயலாளர் கிழக்கிலிருந்து நியமிக்கப்பட்டார். இம்முறை அது முறையாக மாறியிருக்கின்றது என்று தனது பதவி நிலை மாற்றத்தினை அவர் இலாவகமாக நியாயப்படுத்தவும் முடியும். 

இந்நிலையில் மீன்பாடும் தேன் நாட்டைச்  சேர்ந்த தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) ஒருவர் தலைமைப்பதவிக்காக தயார் படுத்தப்படுவதாகவும் தகவல்கள் உள்ளன. தலைவர் தயாராகினாலும் பொதுச்சபை கூட்டத்தில் ‘செயலாளர்’ பதவியை சேனாதிராஜா தக்கவைப்பது தான் அவருக்கு இப்போதுள்ள பெரும்சவால்.

ஏனென்றால் தமிழரசுக்கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுச்சபை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சேனாதிராஜாவை ஆதரிப்பார்களா என்பது முதலாவது விடயம். சேனாதிராஜாவின் முன்னெடுப்பில் கூட்டமைப்புக்கு வெளியே பிறிதொரு ‘ஐக்கிய அணி’ உருவாகுவதற்கு அவர்கள் விரும்புவார்களா என்பது இரண்டாவது விடயம். குறிப்பாக, சேனாதிராஜாவுக்கு எதிரான அணியால் கூட்டமைப்பின் ‘முதன்மைத் தானம்’ சிதைக்கப்படுகின்றது என்ற பிரசாரம் செய்யப்பட்டு பொதுச்சபை உறுப்பினர்களும் அதனை ஏற்றுக்கொள்வார்களாக இருந்தால் சேனாதிராஜாவின்  நிலைமை ‘அந்தோ பரிதாபம்’ ஆகிவிடும். 

அதுமட்டுமன்றி அவ்வணியால், பொதுச்சபை உறுப்பினர்களில் பலர் அரசியல் அடையாளத்திற்காக காத்திருக்கின்றார்கள். அவர்களுக்கு மாகாண சபையில் வாய்ப்பு தருவோம் என்ற நம்பிக்கை அவ்வணியால் வழங்கப்பட்டாலும் சேனாதிராஜாவிற்கு ‘இறங்கு முகம்’ தான். ஆக, தமிழ்த் தேசிய அரசியலில் தன்னை ‘மையப்படுத்திய’ சேனதிராஜாவின்  ‘ஒற்றைக்கல்லில் இரட்டை மாங்காய் அடிக்கும்’ முயற்சி வெற்றி பெற்றால் அது அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் அரசியலுக்குமே புதிய திருப்பம் தான். 

ஒருவேளை அவரது முயற்சி தோல்வியுற்றால் கூட்டமைப்பும் இல்லை, தமிழ்த் தேசிய ஐக்கிய அணியும் இல்லை என்ற கையறு நிலை அவருக்கு மட்டுமல்ல எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய வாக்காளர்களுக்கும் தான் ஏற்படும். இது தமிழ்த் தேசிய அரசியலின் மீதான பெரும் வெறுப்பிற்கும் விரக்திக்கும் மேலும் வித்திட்டுவிடும். ஏற்கனவே மக்களுக்கு எதிர்பார்ப்புக்களை வழங்கி முன்னெடுக்கப்பட்ட ‘அரசியல் சித்து விளையாட்டுக்களால்’ திரிசங்கு நிலையில் இருக்கும் ‘தமிழ்த் தேசிய சித்தாந்தாந்தம்’ தொடந்தும் அதேபோக்கிலேயே சென்றால் தேசிய அரசியல் நீரோட்டத்தில் வேகமாகக் கழுவிச் செல்லப்படும்.

அறநெறிகளில் மனிதகுலம் ஒன்றி நின்று வாழ்வதை உறுதிப்படுத்தவே அரசியல் தோன்றுகிறது, தொண்டு செய்கிறது, பகை ஒடுங்கி பண்பாடு விளங்க வழி செய்கிறது என்பதை மட்டுமே தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்களுக்கு இப்போதைக்கு நினைவு படுத்திச் செல்ல முடியும்.

-ஆர்.ராம்-

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18