இலங்கையுடன் எந்தத் தொடர்பும் இல்லை.. : விளக்குகிறார் கமலா ஹரிஸின் மாமனார்

Published By: J.G.Stephan

15 Nov, 2020 | 11:48 AM
image

*உலகத்தில் உள்ள மக்கள் குழுமங்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது கமலா அதுபற்றி கரிசனை கொண்டு நிச்சயமாக குரல் கொடுப்பார்

*சர்வதேசத்தில் உள்ள நாடுகளின் இருதரப்பு மூலோபாய அடிப்படையில் அமெரிக்காவின் அணுகுமுறைகள் மாற்றமடைவதற்கே வாய்ப்புக்கள் அதிகமுள்ளன

*ட்ரம்பின் நிருவாக முறைக்கு நேர் எதிரான தாராளவாத ஜனநாயக அடிப்படையிலான ஆட்சியையே பைடன்-கமலா கூட்டணி முன்னெடுக்கும்

'அவர் அவருடைய தாயாரைப் போன்றவர். அவருடைய தாயாரான சியாமளாவும் தான் எடுக்கும் தீர்மானங்கள் வெற்றியடைய வேண்டும் என்று உறுதியான நம்பிக்கையுடனேயே செயற்படுவார். அதில் வெற்றியும் காண்பார். அப்படியொரு தீர்மானத்தினை எடுத்தே அவர் 1958இல் மேற்படிப்புக்காக புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பத்து அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அவர் அன்று எடுத்த தீர்மானமும் இலக்கும் தற்போது முழுமை அடைந்திருக்கின்றது. 

அவரது பிள்ளை அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஆகியிருக்கின்றது. அதற்கான அடித்தளத்தினை இட்டவர் சியாமாவே. தனது பிள்ளைகளை துறைசார் நிபுணர்களாக்கியதோடு உலக வல்லரசு நாடொன்றுக்கு தலைமை அளிக்கவல்ல மனோதிடத்தினையும், ஆற்றையும் அவர் கட்டியெழுப்பியிருக்கின்றார் என்றால் அவருடைய அர்ப்பணிப்புக்களும், திறன்களும் எண்ணற்றவை என்றே நான் கருதுகின்றேன்' என்கிறார் கோபாலன் பாலச்சந்திரன்.

கோபாலன் பாலச்சந்திரன், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கமலாதேவி ஹரிஸின் தாயாரான சியாமளாவின் சகோதரர். தற்போது டெல்லியில் வசித்து வருகின்றார். பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான நிறுவனத்தின் முன்னாள் விரிவுரையாளரும், அமெரிக்க, இந்திய இருதரப்பு உறவுகள் தொடர்பான சுயாதீன ஆய்வாளராகவும் பேராசிரியராகவும், ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகின்றார். 

அவர், அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியையும், 49ஆவது துணை ஜனாதிபதியையும் தெரிவு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்து ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், கமலா ஹரிஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு தொலைபேசி ஊடாக விசேட செவ்வியொன்றை வழங்கினார். அச்செவ்வியின்போதே அவர் மேற்கண்ட விடயத்தினை குறிப்பிட்டுள்ளதோடு, அடுத்துவரும் காலத்தில் ஜோ பைடன் மற்றும கமலா ஹரிஸ் தலைமையிலான அமெரிக்க அரசு எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கப்போகின்றது என்பது பற்றிய எதிர்வு கூறல்களையும் எதிர்பார்ப்புக்களையும் பகிர்ந்துள்ளார். 

2016ஆம் ஆண்டு கமலா ஹரிஸ் செனட்டராக தெரிவாகி பதவியேற்றபோது, அந்த விழாவில் தானும், அமெரிக்காவில் உள்ள தனது மகள் சரதா மற்றும் சகோதரி சரளா உள்ளிட்ட நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள் பலரும் பங்கேற்றிருந்தமையை நினைவுகூர்ந்த பாலச்சந்திரன், 'அமெரிக்காவின் துணை ஜனாதிபதி என்ற அதியுச்ச பதவியை கமலா ஏற்கும் போது அதனை நேரில் பார்ப்பதற்காக விரைவில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு வருகின்றேன்' என்று புளகாங்கீதத்துடன் தெரிவித்தார். 

எனினும், கொரோனா வைரஸின் தாக்கம் எதிர்காலத்தில் எவ்வாறிருக்கப் போகின்றதோ என்பது தான் அச்சமான விடயமாக உள்ளதாகவும் பதவி ஏற்பு விழாவிற்கு இன்னமும் இரண்டு மாதங்கள் இருப்பதால் பொறுமையுடன் இறுதி முடிவினை எடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதேநேரம், கமலா ஹரிஸினுடைய பூர்வீகம் இலங்கையென்றும், தமிழ் நாடென்றும் முன்னுக்குப் பின் முரணான கருத்தாடல்கள் இடம்பெற்று வருக்கின்றமை தொடர்பாக குறிப்பிட்ட பாலச்சந்திரன், 'எமது பூர்வீகம் தமிழ் நாடே. இலங்கைக்கும் எமக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை. எமது தந்தையார் பி.வி.கோபாலன் தயார் ராஜம். எமது தந்தையார் ஆங்கிலேய அரசாங்கத்தில் நிருவாக சேவையில் பணியாற்றியவர். 

எங்களது பெற்றோர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம் என்ற கிராமத்தினைச் சேர்ந்தவர்கள். அங்கே எமது தாத்தா, பாட்டி ஆகியோரும் இருந்தார்கள் என்று எமது தந்தையார் கூறியிருக்கின்றார். இதனைவிட எமக்கு வேறெந்த பகுதியுடனும் பூர்வீகத் தொடர்புகள் கிடையாது. அண்மைய நாட்களில் பல புனைகதைகள் வெளியிடப்படுகின்றன. அதிலொன்றாகவே எமது பூர்வீகம் இலங்கையின் வடபகுதி  என்ற விடயமும் காணப்படுகின்றது என்றே கொள்ளவேண்டும்' என்கிறார் அவர். 

இதற்கு அடுத்தபடியாக, பைடன்-கமலா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் இந்தியா உட்பட தெற்காசிய பிராந்தியத்துடனான உறவு நிலைகள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்ட அவர், 'அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையில் கனதியான மாற்றங்கள் எப்போதுமே இடம்பெறமாட்டாது. அமெரிக்கா பூகோள அடிப்படையில் வடிவமைத்துள்ள மூலோபாயக் கொள்கையையே தொடர்ந்தும் பின்பற்றும். ஆட்சித் தலைவர்கள் மாறினாலும் வெளியுறவு கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அதேநேரம், கமலா, துணை ஜனாதிபதியாகி விட்டார் என்பதற்காக இந்தியாவுடனோ அல்லது இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடனோ கொள்கை சார் நிலைப்பாடுகள் மாறிவிடாது. இதில் கமலாவும் தற்துணிவில் செயற்பட முடியாது' என்று திடமாக கூறினார் .

அடுத்து, அடிப்படை உரிமைகள், நீதியைப் பெற்றுக்கொடுத்தல், பொறுப்புக்கூறல் விடயங்களில் அதீத அக்கறை கொண்டிருக்கும் கமலா ஹரிஸ் இலங்கை உட்பட உலகாளவிய ரீதியில் சிறுபான்மை இனக்குழுமங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எவ்விதமாக நடந்துகொள்வார் என்பது தொடர்பில் பாலச்சந்திரன் சில எதிர்வு கூறல்களைச் செய்துள்ளார். குறிப்பாக, 'எந்தவொரு இனக்குழுமத்திற்கும் அநீதிகள் இழைக்கப்படுகின்றபோது நிச்சயமாக அது தொடர்பில் வெளிப்படையாக தனது நிலைப்பாட்டை கூறுவார். அதில் எந்தவொரு பின்வாங்கலையும் அவர் செய்யமாட்டார். அதேபோன்று, தனது அதிகாரத்திற்கு உட்பட்டதாக உரிய நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு முனைப்புச் செய்வார் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்க முடியும்.

ஏனென்றால், கமலா தனது தாயார் உரிமைகளுக்காக வெகுஜனப் போராட்டங்களில் கலந்து கொண்டபோதே, அவருடைய தோள்களில் இருந்து பார்த்து வளர்ந்தவர். அதன் தாக்கம் அவரிடத்தில் வெகுவாகவே உள்ளது. கடந்த காலத்தில் கறுப்பினத்தவர்களின் உரிமைகள், பால்நிலை சமத்துவம் போன்ற விடயங்களில் அவருடைய  ஊடாட்டங்களும், செயற்பாடுகளும் அதனை வெளிப்படுத்தியிருக்கின்றன.

ஆகவே, இந்தியாவின் காஷ்மீர் பிரச்சினையாக இருக்கலாம். இலங்கையின் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் பிரச்சினையாக இருக்கலாம் அவை தொடர்பில் கமலா கரிசனை கொள்வார். பகிரங்கமாக அதுதொடர்பிலும் உரையாடவும் செய்வார். அவர் என்றுமே குரலற்றவர்களின் குரலாக இருப்பார் என்று எதிர்பார்க்க முடியும்' எனவும் பாலச்சந்திரன் கூறுகின்றார்.

இதேநேரம், சர்வதேச நாடுகளின் இருதரப்பு மூலோபாய உறவுகளின் அடிப்படையில் பைடன் நிருவாகத்தின் அணுகுமுறைகளும் மாறுபட்டதாக இருக்கும் என்று கூறும் அவர், 'ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார ஸ்தாபனம், அணுவாயுத ஒப்பந்தம், காலநிலை உடன்படிக்கை இவ்வாறு பல விடயங்களில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகளுக்கு நேர் எதிரானதாகவே பைடனின் செயற்பாடுகள் அமையவுள்ளன எனவும் குறிப்பிடுகின்றார். 

மேலும் வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் பைடனே பெரும்பான்மையை பெற்றுள்ளபோதும் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறத் தயாரில்லாத மனோநிலையில் இருப்பது பற்றி குறிப்பிட்ட கமலா ஹரிஸின் மாமனார், 'ஜனவரி 18ஆம் திகதி வரையில் வெள்ளை மாளிகை அவருக்குச் சொந்தமானது தான். அதுவரையில் அவர் அங்கேயே இருக்கலாம். அக்காலத்தில் ட்ரம்ப் இயலுமான குழப்பங்களையும் விளைவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.  ஈற்றில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவார். அல்லது நிர்பந்திக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்' என்று மேலும் தெரிவித்துள்ளார். 

(நேர்காணல்:- ஆர்.ராம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22