மதுபானம் மற்றும் சிகரட் பாவனையை தடுப்பதற்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி அதிகரிப்பு தொடர்பான முன்மொழிவுகள் பயனுள்ள விடயமாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது,

தற்போது நல்லாட்சி அரசாங்கத்தினால் மதுபாவனையற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் பாராட்டப்படக்கூடிய விடயமாகும். கடந்த வாரத்தில் மதுபானம் மற்றும் சிகரட் பாவனையை தடுப்பதற்காக வரியை அதிகரிக்க உத்தேசித்துள்ளமை மற்றும் பாடசாலை மட்டத்தில் மதுபாவனையை குறைப்பதற்கென மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போன்றன வரவேற்கத்தக்க விடயங்களாகும். அத்தோடு மக்கள் மத்தியில் மதுபாவனையற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அரச மருத்துவ சங்கம் என்ற வகையில் எமது பூரண ஆதரவினை வழங்குவதற்கு தயாராகவுள்ளோம்.

தற்போது பாரியளவில் உருவெடுத்துள்ள போதைப்பொருள் மாபியாவினை கட்டுப்படுத்த அனைத்து வழிவகைகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.