( மயூரன் )

யாழ்.சங்கரத்தை வயல் பகுதியில் இருந்து கழுத்தில் வெட்டுக்காயத்துடன் சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.


அராலி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் (வயது 55) என்பவரே வயல் வெளியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 


சடலமாக மீட்கப்பட்டவர், அராலியிலுள்ள தனது வீட்டில் சிறிய கடையொன்றினை நடாத்தி வருகின்றார். இன்று திங்கட்கிழமையும் வழமை போன்று தனது கடையில் விற்பனை செய்வதற்காக மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்காக சங்கானை சந்திக்கு சென்றுள்ளார்.


அங்கு மரக்கறிகளை கொள்வனவு செய்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளை சங்கரத்தை வயல்வெளி பகுதியில் வைத்து இனம்தெரியாத நபர்கள் இவருடைய கழுத்தை வாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். 


இக் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.