அமெரிக்க தேர்தல் சாதனைகளும் வேதனைகளும்

08 Nov, 2020 | 06:31 PM
image

 “பரம்பரிய அரசியல்வாதியில்லாதவர்களை மக்கள் தெரிவு செய்கின்றனர் என்று ட்ரம்ப்பை முன்னுதாரணம் காட்டிய ஜனாதிபதி கோட்டாபய அமெரிக்காவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் அனுகுமுறையை முன்னுதாரணத்தினையும் பின்பற்றிவிடுவாரோ என்பது இலங்கையர்களின் அச்சமாக இருக்கின்றது” 

பிரசித்தமான வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் சாதனை படைத்திருந்தாலும் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்து  ட்ரம்ப் நடத்தும் சட்டப்போராட்டத்தால் உலகிற்கு ஜனநாயக கற்பிதத்தினை வழங்கிய அமெரிக்காவுக்கு வரலாற்று அவமானம் ஏற்பட்டுள்ளது.

 

-என்.கண்ணன்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று கூறப்படும் அமெரிக்காவில்,  கடந்த வாரம் நடந்த ஜனாதிபதித் தேர்தல்,  பல்வேறு குழப்பங்களுக்கும்  வழிவகுத்துள்ளது.

உலகத்துக்கு ஜனநாயகத்தைப் போதிக்கும் அமெரிக்காவுக்கு, இந்தத் தேர்தல் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவைப் பார்த்து, சீனர்களும், ஈரானியர்களும், ரஷ்யர்களும் கேலி செய்யும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன்,  குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர், போட்டியிட்ட இந்த தேர்தல் தான், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் பரபரப்பை - பதற்றத்தை ஏற்படுத்திய ஒன்றாக பதிவு பெற்றிருக்கிறது.

Key dates surrounding the U.S. 2020 presidential election | CTV News

பல வரலாற்றுச் சாதனைகளை மாத்திரமன்றி, வரலாற்றுச் சோதனைகளுக்கும் இந்த தேர்தல் காரணமாகியிருக்கிறது.

அமெரிக்காவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், இந்த தேர்தல் இடம்பெற்றது.

 கொரோனா வைரஸ் தொற்றினால், ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்படலாம் என்ற சூழ்நிலைகளும் காணப்பட்டன.

இந்தமுறை வாக்களிக்க அச்சம் கொண்டவர்களுக்காக, தபால் மூலம் வாக்களிக்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதன் மூலம், அமெரிக்க வரலாற்றிலேயே அதிகபட்ச வாக்களிப்பு இடம்பெற்ற தேர்தலாக இது பதிவாகியிருக்கிறது.

இம்முறை 66.9 சதவீதத்துக்கும் அதிகமான வாக்களிப்பு இடம்பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு முன்னர், அதிகபட்ச வாக்களிப்பு இடம்பெற்றது 1900 ஆம் ஆண்டில் தான். 120 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த தேர்தலில், 73.7 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

அதற்குப் பிறகு நடந்த தேர்தல்களில் இப்போது தான், வாக்களிப்பு, 66.9 சதவீதத்தை எட்டியிருக்கிறது.

அதுமாத்திரமன்றி, இந்த தேர்தலில், ஜோ பைடன், அமெரிக்க வரலாற்றிலேயே அதிகபட்ச பிரசித்தமான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். 

இதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, சுமார் 69.49 மில்லியன் வாக்குகளைப் பெற்றிருந்ததே, வரலாற்றுச் சாதனையாக இருந்து வந்தது.

அந்தச் சாதனையை முறியடித்து, 73.5 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார் ஜோ பைடன்.

பைடன் மாத்திரமன்றி, ட்ரம்பும் கூட ஒபாமாவின் சாதனையை முந்தியிருக்கிறார் என்பது தான் ஆச்சரியம்.

கடந்தமுறை அவர், 306 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தாலும்,  232 தேர்தல் கல்லூரி வாக்குகளை மட்டுமே பெற்ற, ஹிலாரி கிளின்டன் தான், அதிகளவு பிரசித்தமான வாக்குகளை பெற்றார்.

ஹிலாரி கிளின்டனுக்கு, 65.84 மில்லியன் வாக்குகள் கிடைத்திருந்தன. டொனால்ட்  ட்ரம்புக்கு 62.98  மில்லியன் வாக்குகள் தான், கடந்த முறை கிடைத்திருந்தது.

அமெரிக்க ஜனாதிபதியை தெரிவு செய்வது, தேர்தல் கல்லூரி வாக்குகளே தவிர, பிரசித்தமான வாக்குகள் அல்ல.

அதனால் தான் ட்ரம்பினால் கடந்தமுறை சுமார் 3 மில்லியன் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்த போதும் ஜனாதிபதியாக வரமுடிந்தது.

அமெரிக்க வரலாற்றில் இதுபோன்று 1824, 1876, 1888 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளிலும்-  பிரசித்தமான வாக்குகளை அதிகமாகப் பெற்ற வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவும் நிலைமை காணப்பட்டது.

அந்த நிலைமை இம்முறையும் ஏற்படலாம் என்றும் கூட ஊகங்கள் இருந்தன.

ஹிலாரி கிளின்டன், அதிகளவு பிரசித்தமான வாக்குகளைப் பெற்ற போதும், வெற்றிபெற முடியாமல் போனபோது, அமெரிக்க ஜனநாயக முறைமை பற்றிய பலத்த கேள்வி உலகம் முழுவதும் எழுந்தது.

கடந்த முறை,  62.98 மில்லியன் வாக்குகளையே பெற்ற ட்ரம்ப், இந்த முறை ஒபாமாவின் சாதனையையும் முந்திக் கொண்டு, 69.6 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்பது, பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.

ட்ரம்பின் செல்வாக்கு மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிய போதும், அவரது தனிப்பட்ட செல்வாக்கு சரிவைச் சந்திக்கவில்லை என்பதை இந்த வாக்குகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

ஒபாமாவை முந்தும் அளவுக்கு அவரது செல்வாக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது.

ஒபாமாவின் சாதனையை, ஜோ பிடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் முந்திக் கொண்டு செல்வதற்கு, முக்கியமான காரணம் இம்முறை காணப்பட்ட வாக்களிப்புச் சூழல் தான்.

வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்புடன், வாக்களிப்பு வீதம் அதிகரித்ததும், அதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது.

இம்முறை அதிகளவில் இளம் வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். அதைவிட, தபால் மூலம் வாக்களிக்கும் வசதியை பெருமளவு வாக்காளர்கள் பயன்படுத்தியிருந்தனர்.

US presidential election 2020 results: what Trump and Biden need to win -  AS.com

தபால் மூல வாக்குகளை சரிபார்த்து, உறுதிப்படுத்தி எண்ணுவதில், ஏற்பட்ட இழுபறிகளாலேயே வெற்றியை தீர்மானிப்பதில் பலத்த இழுபறி காணப்பட்டது.

அதேவேளை, இந்த தேர்தல் பல்வேறு சோதனைகளுக்கும் காரணமாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

இந்த தேர்தலுக்கான பிரசாரம் தொடங்கிய போதே, ட்ரம்புக்கான ஆதரவு குறைந்து கொண்டிருந்தது.

ஆனாலும் அவர் எல்லா வழிகளையும் பயன்படுத்தி, வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

தோல்வியடைந்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறமாட்டேன் என்று தேர்தலுக்கு முன்னரே கூறினார்.

அதுபோல, தேர்தலுக்குப் பின்னர் சட்டப் போர் நடக்கும் என்றும் தெரிவித்தார்.

முகக் கவசம் அணியமாட்டேன் என்று அடம் பிடித்தவர்,  இடையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார். 

மூன்றாவது நாளே, சிறப்பு சிகிச்சை பெற்று, குணமடைந்து விட்டதாக மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்.

அதன் பின்னர், பிரசார மேடைகளில் ஆட்டம் போட்டு, தான் வலிமையானவர் என்று நிரூபிக்கவும் முயன்றார்.

இவ்வளவும் நடந்து கொண்டிருந்த போது, சாதாரண அமெரிக்கர்கள், கொரோனாவினால் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த தேர்தல் பிரசாரங்களின் போது ட்ரம்ப் நடந்து கொண்ட முறைகள் எதுவுமே, ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உகந்தவையாக இருக்கவில்லை.

வழக்கம்போலவே, அவர் கோமாளித்தனமான பேச்சுக்களாலும், நடத்தைகளாலும் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயன்றார்.

US election results 2020 LIVE: Another Republican victory in sight as Trump  leads over Biden | News | Zee News

தன்னை தீவிர வலதுசாரியாக காட்டிக் கொள்ளும் அவர், சீனா, ஈரான், ரஷ்யா போன்ற நாடுகளுடனான உறவுகளை பதற்றத்தில் வைத்துக் கொண்டே, அதனைக் காரணம் காட்டி வெற்றியைப் பெற முயன்றார்.

அத்துடன், தேர்தல் முடிவுகளை ஏற்கமாட்டேன் என்றார். தபால் மூல வாக்களிப்பில் மோசடிகள் நடக்கும் என்றார், வன்முறையை எதிர்கொள்வதற்கு நாட்டை தயார்படுத்தினார்.

ஆக, அமைதியான, சுமுகமான ஒரு தேர்தல் நடத்தப்படும் என்ற நம்பிக்கை, அமெரிக்க மக்களிடம் உருவாகாத வகையில் நடந்து கொண்டிருந்தார் ட்ரம்ப்.

ஜனநாயகம், தேர்தல்களின் மீதான நம்பிக்கையை குறைக்கும் வகையில் அவர் தேர்தலுக்குப் பின்னரும் நடந்து கொண்டிருக்கிறார்.

வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த போதே, தானே வெற்றி பெற்றதாக அறிவித்தார். பின்னர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்று நீதிமன்றங்களையும் நாடினார். 

இவை போதாதென்று, ட்ரம்ப் ஆதரவாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் குழப்பங்களும், தேர்தலுக்குப் பின்னர் பதற்றத்தை ஏற்படுத்தியது,

ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க ஜனநாயகம் உலகத்துக்கு முன்னுதாரணம் என்ற நிலை இப்போது மாற்றடைந்துள்ளது.

அதற்கு டரம்ப் போன்றவர்கள் தான் காரணம்.

கடந்தமுறை அவர் தீவிர வலதுசாரியாக- வெள்ளையின வாக்காளர்களின் வாக்குகளால் வெற்றியைப் பெற்றார்.  

பாரம்பரிய அரசியல்வாதிகள் போலன்றி, தீவிர தேசியவாதியாக, நாடு தான் முக்கியம், மற்றெல்லாம் அதற்குப் பின்னர் தான் என்ற ஒரு புதிய வழியைக் காட்டினார்.

அவரது இந்த அணுகுமுறை, இலங்கை போன்ற பல நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் அமைந்தது.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ அரசியலுக்கு வர முன்னரே, ட்ரம்ப்பைத் தான் முன்னுதாரணம் காட்டியிருந்தார்.

பாரம்பரிய அரசியல்வாதியாக அல்லாதவர்களையே மக்கள் இப்போது தெரிவு செய்கிறார்கள் என்றும், தனக்கும் அந்த தகுதி இருப்பதாகவும், அவர் சில வருடங்களுக்கு முன்னரே வெளிப்படுத்தினார்.

அதுபோன்று, தனிச் சிங்கள பௌத்த வாக்குகளால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்பதை அவர் நிரூபித்தும் காட்டியிருக்கிறார்.

 ட்ரம்பின் இப்போதைய அணுகுமுறை அமெரிக்காவுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

இவ்வாறான சூழலில், இலங்கை அரசியல்வாதிகள் இந்த தவறான முன்னுதாரணத்தை எடுத்துக் கொண்டு விடுவார்களோ என்ற அச்சம், இலங்கை வாழ் மக்களிடம் எழுகிறது.

U.S. Election Is a High-Stakes Political Struggle. In Russia. - The New  York Times

2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையும் கட்டத்தில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியை ஏற்றுக்கொண்டு அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார்.

அமெரிக்காவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பின் பின்னரே அவர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறியதாகவும் அப்போது கூறப்பட்டது.

அந்த இடத்தில் ஜனநாயகத்தின் காவலனாக அமெரிக்கா நடந்து கொண்டது.

ஆனால், தோல்வியடைந்தாலும் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறமாட்டேன் என்று ட்ரம்ப் அடம்பிடிக்கின்ற நிலையை, பல வாரங்களுக்கு முன்னரே உலகம் பார்த்து விட்டது. 

அவர் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல், சட்டப் போர் நடத்தப் போவதாக கூறுவது, அமெரிக்க மக்களை வெறுப்படையச் செய்திருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை அவரது உரையை அமெரிக்க ஊடகங்கள் பல இடைநிறுத்துகின்ற அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

இதுபோன்றதொரு நிலை வேறெந்த அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஏற்பட்டதில்லை. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மிகநீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டது. 

அவ்வாறான ஒரு ஜனநாயக வரலாற்றுப் பாரம்பரியத்துக்கு, இந்த தேர்தல் ஒரு கரும்புள்ளியாகவே கணிக்கப்படும்.

இவ்வாறான கரும்புள்ளிகளை, வேறு பல நாடுகளும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளும் நிலை தோன்றலாம்.

உலகிற்கு ஜனநாயக சித்தாந்தத்தை அறிமுகப்படுத்திய நாடு, இப்படியொரு வரலாற்று பழிக்குள் சிக்கிக் கொள்வது, காலத்தின் கோலம் தான்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22