(க.கிஷாந்தன்)

ஹட்டன் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்ட லயன் குடியிருப்பில் நேற்ற இரவு 07.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 2 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு குறித்த லயன் குடியிருப்பு தொகுதியில் இருந்த 10 வீடுகளுக்கு சிறதளவில் தீ பரவியுள்ளது.

எனினும் குறித்த இரண்டு லயன் வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாகவும் ஏனைய வீடுகளுக்கு பெரிதளவில் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டாவாறு வெளியே ஓடி வந்துள்ளனர்.

எனினும் லயன் குடியிருப்பு தொகுதியில் 12 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் தற்போது பாதுகாப்பாக குறித்த தோட்ட தொழிற்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மின்சார கோளறே இத் தீ விபத்துக்கு காரணமாக இருக்கும் என சந்தேகிப்பதாக விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கூச்சல் சத்தம் கேட்டு அயலவர்கள் அனைவரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்போது சிறியளவான பொருட்களை மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியில் எடுக்க முடிந்துள்ளது.

தீ விபத்து குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.