சறுக்கிய சாணக்கியம்

01 Nov, 2020 | 07:00 PM
image

'சரியான நேரத்தில் எடுக்கின்ற பிழையான முடிவும், பிழையான நேரத்தில் எடுக்கின்ற சரியான முடிவும் தவறாகிவிடக்கூடாது என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்றுமே திடமாக இருக்கின்றது'


 

(ஆர்.ராம்)

'1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரத்தினை நிரந்தமாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட 18ஆவது திருத்தச்சட்டத்தினை ஆதரித்த பாவத்தினை கழுவுவதற்காகவே நாம் 19ஆவது திருத்தச்சட்டத்தினை ஆதரித்திருந்தோம். தற்போது 20ஆவது திருத்தச்சட்டம் மூலமாக மீண்டும் ஜனநாயக விழுமியங்களுக்கு மாறாக நிறைவேற்று அதிகாரத்தினை வலுப்படுத்தும் நடவடிக்கைளை அனுமதிக்க முடியாது. இதனை பாராளுமன்றத்தில் தடுத்து நிறுத்துவது கடினமான காரியமாக இருப்பதாலேயே உயர்நீதிமன்றத்தினை நாடிவந்து நம்பியிருக்கின்றோம்' 

ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நிறைவேற்று அதிகாரங்களை வலுப்படுத்தும் 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தனே மனுத்தாக்கல் செய்து தானே வாதாடிய போது இலங்கை வாழ் முஸ்லிம்களின் தேசிய அடையாளமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் தலைவரான ரவூப் ஹக்கீமால் இதயசுத்தியுடன் உதிர்க்கப்பட்ட வார்த்தைகள் இவை.

அதுமட்டுமன்றி 2018இல் நிகழ்ந்த ஒக்டோபர் புரட்சியின்போது ஜனநாயக மீட்பர்களாக இணக்கப்பாட்டுடன் செயற்பட்டிருந்த சிறுபான்மை தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தரப்புக்கள் 20ஆவது திருத்தம் மூலம் மீண்டும் சர்வாதிகாரம் தலைதூக்கிவிடக்கூடாது என்பதிலும் ஏகோபித்திருந்தன.

அதற்காக 20ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக எதிர்த்தாகுவதென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எடுத்த முன்முயற்சிக்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக மு.கா.வினதும், அ.இ.ம.கா.வினதும் தலைவர்களான ஹக்கீமும், ரிஷாத்தும் திடமான உறுதிமொழியையும் வழங்கியிருந்தார்கள். 

ஈற்றில், கடந்த 22ஆம் திகதி 20ஆவது திருத்தச்சட்டத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களிப்பதென வாக்குறுதி அளித்த ரவூப் ஹக்கீமும், ரிஷாத் பதியுதீனும் அவரது பிறிதொரு பாராளுமன்ற உறுப்பினரான முஷாரப்பும் அவ்வாறே செயற்பட இவ்விரு கட்சிகளினது ஏனைய ஆறு உறுப்பினர்களும்; 20 ஐ ஆதரித்திருந்தார்கள். 

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாத் பதியுதீன் தலைமறைவு பின்னர் கைது என்று சுமூகமற்ற நிலையில் இருந்தமையால் தமது கட்சி ஒருமித்து தீர்மானம் எடுக்க முடியாது போயிருந்தது என்று காரணங்கூறலாம். இல்லை, தலைவரை நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக வாக்களித்தோம் என்று ஆதரவாக வாக்களித்தவர்கள் அர்த்தம் கற்பிக்கலாம் அதுவேறு கதை. 

ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில் அவ்விதமான எந்த நெருக்கடிகளோ, அழுத்தங்களோ காணப்பட்டிருக்கவில்லை. அவ்வாறிருக்கையில் ஏன் ஏகோபித்த முடிவொன்றை எடுக்க முடியாது போனது என்ற கேள்வி இங்கு மேலெழுகின்றதல்லவா? 

ஆம், அதற்கு காரணங்கள் இல்லாமலில்லை. வழமையாக 20ஆவது திருத்தம் போன்ற தீர்க்கமான விடயங்கள் தொடர்பில் மு.கா.வின் உயர்பீடமே இறுதி தீர்மானங்களை எடுப்பது வழமையாக இருக்கின்றது. அவ்வாறிருக்க, பொதுத்தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் மு.கா.வின்  உயர்பீடம் இரண்டு தடவைகளே கூடியிருக்கிறது. 

பொதுத்தேர்தல் நிறைவடைந்த கையோடு நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் மற்றும் கொரோனா விவகாரம் சம்பந்தமாக ஆராயப்பட்டிருக்கின்றது. அதற்கு அடுத்தபடியாக 20ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக  அவசரஅவசரமாக கூட்டமொன்று கூட்டப்படிருக்கின்றது. ஆனால் இந்தக் கூட்டத்தில் 20ஆவது திருத்தம் குறித்து ஆராயப்பட்டிருந்தாலும் அதனை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எட்டப்படிருக்கவில்லை. 

தற்போது 'சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டிருக்கும்' ரவூப் ஹக்கீம் உயர்பீடத்தில் தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பதாக இருந்தால் பரஸ்பர கருத்துமோதல்கள் இடம்பெற்றாலும் அமைதிகாப்பார். மூன்று நான்கு தடவைகள் உயர் பீடத்தினைக் கூட்டுவார். ஒரேவிடயத்தினை மீண்டும் மீண்டும் பேசுபொருளாக்குவார். 

ஈற்றில் உயர்பீட உறுப்பினர்கள் களைத்துபோய் 'எங்களால் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வரமுடியாது இருக்கின்றது. ஆகவே தலைவரின் தீர்மானத்திற்கு கட்டுப்படுகின்றோம்' என்றவாறு வெளிப்படுத்தலைச் செய்யும் வரையில் பொறுமைகாத்து தனது தீர்மானத்தில் மு.காவை செவ்வனே முன்னகர்த்துவார். 

அவ்வாறான சந்தர்ப்பங்களில், ஏனைய பாராளுமன்ற மற்றும் உயர்பீட உறுப்பினர்கள்  உள்ளிட்ட அனைவருமே தலைமையின் தீர்மானத்திற்கு ஆதரவளித்தே வந்திருந்தார்கள். இதனால் ஹக்கீமின் நகர்வுகள் இதுவரையில் 'சாணக்கியமானதாகவே' இருந்தன. ஆனால் 20ஆவது திருத்தத்தில் அது பிழைத்துவிட்டது. 18ஐ ஆதரிப்பதற்காக வக்கெடுப்பு நடைபெறுவதற்கு முதன் நாள் தனது வீட்டிற்கு உறுப்பினர்களை அழைத்து ஒருமித்த முடிவெடுக்க முனைந்தவர் 20 விடயத்தில் அவ்விதமாக நடந்து கொள்ளவில்லை 

20ஆவது திருத்தம் பற்றி உயர்பீடத்தில் கலந்துரையாடியபோது கட்சியின் பிரதித்தலைவர்களான நஸீர் அஹமட்டும், ஹரீஸும் கிழக்கு நிலைமைகள் வேறுவிதமாக உள்ளன. அவற்றில் கரிசனை செலுத்தியே நாம் முடிவெடுக்க வேண்டும் என்று இறுதி வரையில் கூறியிருக்கின்றனர். ஆனாலும் அந்த விடயம் பொருட்படுத்தப்பட்டிருக்கவில்லை.

ஹக்கீம், 20இற்கு எதிராக கருத்துக்களை பகிரங்கப்படுத்தினார். உயர்நீதிமன்றம் சென்றார். வழமையைப்போன்றே உறுப்பினர்களும் தன்பின்னால் இருப்பார்கள் என்ற அதீத நம்பிக்கையைக் கொண்டிருந்தார். ஆனால் உறுப்பினர்களின் முடிவு நேர்மறையானது. விளைவு, ஹக்கீமின் அரசியல் நேர்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கி விட்டது. 

அதுமட்டுமன்றி, கட்சியின் பிரதிதலைவர்களாக இருக்கும் நஸீரும், ஹரீஸும் தலைமைக்குத் தெரிவித்த பின்னரே '20' ஐ ஆதரித்தோம் என்கின்றனர். ஆனால் தலைவர் ஹக்கீம் 'தனக்கு இறுதி நொடிவரையில் தெரியவே தெரியாது' என்று அடித்துச் சொல்கின்றார். அதுமட்டுமன்றி 'ஆளும் தரப்பிடமிருந்து நேர ஒதுக்கீட்டைப் பெற்றே நஸீர் உரையாற்றினார் என்றும் அச்சமயத்தில் தான் தர்மசங்கடத்திற்கு உள்ளானதாகவும்' கூறுகின்றார். 

'20' ஐ ஆதரிக்கும் மு.கா.வின் ஏனைய நான்கு உறுப்பினர்களின் தீர்மானம் தலைவர் ஹக்கீமுக்கு தெரியுமா தெரியாதா என்ற வாதவிவாதம் சென்று கொண்டிருக்கையில் கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர், 20 ஐ ஆதரித்தவர்களுக்கு எதிராக உயர் பீடத்தினைக் கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொழும்பிலிருந்தவாறு தடாலடியாக அறிக்கை விட்டார். 

மறுநாளே, முஸ்லிம்களின் இதயமான கல்முனையிலிருந்தவாறு, 'முடிந்தால் கட்சியை விட்டு நீக்குங்கள்' என்று பதிலுரைத்தார் ஹரீஸ். அத்தோடு 'தனது அரசியல் அடையாளத்தினை அழித்து , சஜித்தை திருப்திப்படுத்தி அரசியல் நன்மை அடைய முனைபவர்களே நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறுகின்றனர்' என்றும் சுட்டிக்காட்டி விட்டார் ஹரீஸ். 

அதுமட்டுமன்றி '19இற்கு முன்பு ஜனாதிபதிக்கு இருந்த நிறைவேற்று அதிகாரத்துடன் ஒப்பிடும் போது தற்போதைய 20ஆவது திருத்தத்;தால் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவைரயில் அதிகாரம் ஒருவரிடமிருப்பதே பொருத்தமானதென்ற அரசியல் புரிந்துணர்வுகள் ஆரம்பத்திலிருந்து இருப்பதாகவும்' ஹரீஸ் கொட்டித்தீர்த்துவிட்டார்.

இந்த அறிக்கையும், பதிலளிப்பும்,  நிஸாம் காரியப்பருக்கும், ஹரீஸுக்கும் இடையில் இருந்த 'கல்முனையின் அதிகாரமும் அடையாளமும் யாருக்கு' என்ற உச்சக்கட்ட முட்டிமோதல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்திவிட்டது. தலைமையின் அரவணைப்பு நிஸாமுக்கு இருக்கும் வரையிலும், கல்முனையில் அங்கீகாரம் ஹரீஸுக்கு இருக்கும் வரையிலும் இவர்கள் இருவருக்கும் இடையில் 'விடாக்கண்டன் கொடாக் கண்டன்' நிலையே நீடிக்கப்போகின்றது. 

மறுபக்கத்தில் ஹக்கீம் இரட்டை வேடம் தரித்தாரா என்றொரு சந்தேகமும் காணப்படுகின்றது. ஏனென்றால் நஸீரும், ஹரீஸும் தனித்து தீர்மானம் எடுக்க வல்லவர்கள். கடந்த காலத்தில் அவ்வாறு தீர்மானம் எடுத்து கட்சிக்குள்ளும் வெளியிலும் செயற்பட்டும் இருக்கின்றார்கள். பைசல் காசீமைப்பொறுத்தவரையில்  'தனது அரசியல் எதிர்காலம் கருதி' நஸீர், ஹரீஸுடன் கைகோர்த்திருக்கலாம். ஆனால் எம்.எஸ்.தௌபீக்கைப் பொறுத்தவரையில் ஹக்கீமின் அதீத நம்பிக்கைக்கு பாத்திரமானவர். தலைமையின் விசேட கரிசைனை வட்டத்திற்குள் இருப்பவர். 

அத்தகையவர், தன் மீதான தலைமையின் அபிமானத்தினை உடைத்தெறியும் வகையிலும் கடந்த காலத்தில் தேசியப் பட்டியல் உறுப்புரிமை வழங்கிய நன்றிக்கடனை மறந்தும் செயற்படுமளவிற்கு திராணி உள்ளவரா என்பதே இங்குள்ள கேள்வியாகும். ஆகவே, தான் தௌபீக் தலைமைக்கு தெரியாது '20' ஐ ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கமாட்டார். அதற்கான வாய்ப்புமில்லை என்பதே ஹக்கீம் இரட்டைவேடம் தரித்திருக்கலாம் என்பதற்கு ஆணித்தனமாக வைக்கப்படும் தர்க்கமாகும். 

20ஆவது திருத்தச்சட்ட நிறைவேற்றத்தின் பின்னர் மு.கா.வின் பாராளுமன்றக்குழு கூடியபோது, கட்சியினை உடைப்பது நோக்கமல்ல என்றும், தலைமையுடன் இணைந்தே பயணிப்பதென்றும் ஹக்கீமிடம் ஏனைய நான்கு உறுப்பினர்களும் தெரிவித்திருகின்றார்கள். 

மு.கா.விற்கு மர்ஹும் அஷ்ரப் தலைமைதாங்கும் போது ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீனுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் 1992இல் அவரை கட்சியிலிருந்து வெளியேற்றினார். 

அஷ்ரப்பின் மறைவின் பின்னர் இரட்டைத்தலைமையில் இயங்கிய மு.கா.விலிருந்து 2000ஆம் ஆண்டில் அவருடைய துணைவியார் பேரியல் அஷ;ரப் உள்ளிட்டவர்கள் வெளியேறினர். 

மு.கா.வின்.தலைமைத்துவம் ஹக்கீமிடம் வந்த கடந்த 18வருடங்களில் பல வெளியேற்றங்கள் தேசிய, மாகாண, உள்ளூராட்சி மட்டங்களில் நடைபெற்றிருக்கின்றன.

அவற்றில் 2002இல் அதாவுல்லா தலைமையிலான அணி, 2004 ஹாபீஸ் நஸீர் அஹமட் அணி, 2004இல் ரிஷாத் பதியுதீன் அணி, 2007 முபாரக் அப்துல் மஜீத் அணி, 2016இல் செயலாளர் நாயகம் ஹசன் அலி, தவிசாளர் பஷிர் சேகுதாவுத் அணி ஆகிய வெளியேறி புதிய கட்சிகளை, அணிகளை ஆரம்பித்துள்ளன.

அப்படியென்றால் 'சரி, நடந்தது நடந்தாகிவிட்டது; ஆக வேண்டியதைப் பார்ப்போம். இதற்கு அப்பால் எதுவுமில்லை' என்று இந்த விடயம் இத்தோடு முடிந்து விடப்போகின்றதா?. அவ்வாறு இந்த விடயம் முடிவுறுமாக இருந்தால் நிலைமை எப்படியிருக்குமென்று சிந்திக்கவேண்டி ஏற்படுகின்றது. 

2002ஆம் ஆண்டு மு.கா.வின் தலைமைப் பொறுப்பை ஹக்கீம் ஏற்ற பின்னர் நடைபெற்ற ஒன்பது தேர்தல்களில் எதிரணியில் போட்டியிடுவதும் பின்னர் ஆளும் தரப்பிற்குச் செல்வதும், தேர்தலுக்கு அண்மித்த காலத்தில் அதிலிருந்து வெளியியேறுவதுமாக  (2015 பாராளுமன்ற தேர்தல் மட்டுமே விதிவிலக்கானது) இருந்தமையால் தற்போது வரையில் படிந்துள்ள கறைகளையும் பார்க்க மிகப்பெரிய வரலாற்றுக்கறையொன்றை ஹக்கீம் சுமந்தாக வேண்டியேற்படும். 

'கனவான் அரசியல் கலாசாரத்தினை விரும்பும்' ஹக்கீம் அவ்விதமான அவமானப் பழியொன்றை சுமப்பதற்கு ஒருபோதும் விரும்பமாட்டார். அத்துடன் ஹக்கீம் கைகோர்த்துள்ள சஜித் அணியானது, 20இற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆசனங்களை நீக்கி ஆளுந்தரப்பில் ஒதுக்குமாறு சாபாநயகருக்கு அறிவித்தாகிவிட்டது. மேலும் அந்த அணியானது 20ஐ ஆதரித்த உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் ஹக்கீமுக்கு அழுத்தங்களையும் தொடர்ச்சியாக பிரயோகித்து வருகின்றது. 

மறுபக்கத்தில் ஹக்கீம் தனது கட்சியின் 'சேதாரம்' பற்றியும் நிச்சயம் கரிசனை கொள்ள வேண்டியவராக உள்ளார். அவ்வாறான நிலை ஏற்படுகின்றபோது ஹக்கீமின் கைகள் கட்டுற்றிருக்க  வேண்டிய நிலையே ஏற்படும். ஆனால் அமைதியாக இருந்தாலும் கட்சிக்குள் இருக்கும் நஸீர், ஹரீஸ் எதிர்ப்புவாதிகள் நடவடிக்கைகளை எடுக்குமாறு தொடர்தேச்சியாக கோரியவாறே இருப்பர். 

இத்தகைய இக்கட்டுக்களிலிருந்து ஹக்கீம் தப்பித்துக்கொள்வதற்காகவும் தன் 'தலை(மை)யை' பாதுகாத்துக்கொள்வதற்காகவும் ஹக்கீம் நிச்சயம் உயர்பீடத்தினையே பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். 

உயிர்பீடத்தினைப் பொறுத்தவரையில் இறுதியாக நடைபெற்ற கூட்டத்தில் அப்பீடத்திற்கு கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து ஒன்பது பேர் இணைத்துக்கொள்ளப்பட்டனர். கட்சியின் யாப்பில் உயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கை 90ஆக வரையறுக்கப்பட்டிருந்தாலும் தற்போது 109இற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். 

உயர்பீட உறுப்பினர்கள் எண்ணிக்கை ஏன் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது என்ற கிளைக்கேள்வி இங்கு எழுகின்றது.  அதற்கான பதில் மிகவும் சாதாரணமானது. ஹக்கீமின் முன் அனுபவம் தான். வேறொன்றுமில்லை. 

மு.கா.வின் உயர்பீட உறுப்பினர்கள் 23பேராக இருந்தபோது ஹக்கீமும் ஹசன் அலியும் வெளிநாடு சென்றிருந்தார்கள். அப்போது அதாவுல்லாவும், ஹப்ராத்தும் கட்சியை கையகப்படுத்த எடுத்த நடவடிக்கையால் 'நொந்துபோன' அனுபவம் ஹக்கீமுக்கு நிறையவே உண்டு. 

ஆகவே தான் நாடு திரும்பியதும் உயர்பீட உறுப்பினர்களின் எண்ணிக்கையை 90ஆகவும், தன்னால் நேரடியாக 58பேரை உயர்பீடத்திற்கு நியமிக்க முடியும் என்றும் யாப்பினை சாணக்கியமாகத் சீர்திருத்தினார் ஹக்கீம். அந்த அனுபவத்தில் தானோ தெரியவில்லை நஸீர், ஹரீஸ் ஆகிய இரட்டை துப்பாக்கிகளை எதிர்கொள்வதற்காகவோ என்னமோ 90இற்கு அப்பால் உறுப்பினர்களின் எண்ணிக்கை சென்றுகொண்டிருக்கின்றது.

ஆனாலும் தற்சமயத்தில் மு.கா.வின் உயர்பீடத்தில் ஹக்கீமுக்கு யானை பலம் உண்டு. எனவே ஹக்கீம் தற்போது எழவுள்ள அக,புற நெருக்கடிகளை  சமாளிப்பதற்காக உயர்பீடத்தினை வைத்து காய்களை நகர்த்துவதற்கு வாய்ப்புக்கள் இல்லாமில்லை. அவ்வாறு காய்கள் நகர்த்தப்பட்டால் நிச்சயமாக மு.கா.வில் மற்றொரு பிரிவு ஏற்படுமா இல்லை உட்கட்சி போராட்டம் தொடருமா? என்ற ஐயம் நீடிக்கிறது

ஏனென்றால், தற்போதைய சூழலில் மு.கா.வில் பாராளுமன்ற அரசியல் சிரேஷ்டத்துவத்தில் ஹக்கீமுக்கு அடுத்து இருப்பவர் ஹரீஸ். கட்சியினுள் பிரச்சினைகள் எழுக்கின்றபோது வெளியேற நேரிட்டால் ஹாபீஸ் நஸீர் கையில் வைத்திருக்கும் 'துஆ' எனப்படும் ஜனநாயக ஐக்கிய முன்னணியிலேயே வெளியேறுபவர்கள் சங்கமிக்க வேண்டி ஏற்படும். 

நஸீருக்கும் 'அரசியல் தலைமைத்துவ விருப்பு' இல்லாமல்லை. ஆகவே அவரும் பிரியவேண்டிய ஏற்பட்டால் தன்னுடன் பிரிபவர்களை நிச்சயம் அள்ளி அரவைணைக்க முனைவார். ஆனால் தனது 'எதிர்கால அரசியல் தலைமைத்துவத்திற்கான வாய்ப்பொன்று' பறிபோகும் முடிவொன்றை ஹரீஸ் நிச்சயம் எடுக்கமாட்டார் என்று உறுதியாக நம்பலாம். 

அதுமட்டுமன்றி, 20இற்கு வாக்களித்ததை வைத்து உயர்பீடம் தீர்மானமொன்றை எடுக்குமாயின் அத்தீர்மானம் கிழக்கு மாகாணத்திற்கு எதிராகவே பார்க்கப்படும். அல்லது அவ்வாறு தான் பிரசாரம் செய்யப்படும். ஏனென்றால் 20ஐ ஆதரித்த நால்வரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அம்மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் மக்களின் ஆணை பெற்றவர்கள். 

ஆகவே அவ்வாறான தீர்மானம் எடுப்பதானது மு.காவிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தவது மட்டுமன்றி 'கிழக்கு மாகாணத்திலிருந்தே மு.காவிற்கு தலைமை' என்ற கோசத்தினை மீண்டும் அதியுச்சமாக வலுப்படுத்தும். அந்தக் கோசத்திற்கு மு.கா.விற்கு வெளியில் ஏலவே பிரிந்து சென்றவர்களும் ஆதரவளிக்கலாம். 

அத்தகையதொரு விஷப்பரீட்சைக்கு ஹக்கீம் நிச்சயமாக செல்லமாட்டார். அந்த அடிப்படையில் பார்க்கின்றபோது கட்சியினுள் ஒருவேளை வாதப்பிரதிவாதங்கள் எழுந்து முரண்பாடுகள் வலுத்தாலும் உட்கட்சி போராட்டம் தான் நடைபெறப்போகின்றது.

எவ்வாறாயினும் கிட்டிய தூரத்திற்கு 20 ஆதரிப்புக்கு எதிரான நடவடிக்கைகள், அரச ஆதரவு, எதிரணியுடன் இணைந்த செயற்பாடுகள் என்று முஸ்லிம் காங்கிஸின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் கண்ணாமூச்சி விளையாட்டாகத்தான் இருக்கப்போகின்றது துர்ப்பாக்கிய நிலைமையே.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் சித்தாந்த போர்

2024-04-20 11:28:47
news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16