(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொழும்பு நகரில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த  மற்றும் டெங்கு நுளம்பு குடம்பிகள்  கண்டுபிடிக்கப்பட்ட 103 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கமைய கடந்த 14,15,16 ஆகிய மூன்று தினங்களில் டெங்கு நுளம்பு கட்டுப்படுத்தல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது 8075 வீட்டு சுற்றுப்புறச்சூழல் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதில் டெங்கு நுளம்பு குடம்பி கண்டுபிடிக்கப்பட்ட 103 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைத்திட்டத்தின் போது கூடுதலாக டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த பகுதியாக கொழும்பு கிழக்கு பகுதியில் நாரஹேன்பிட்டி பிரதேசம் இனம் காணப்பட்டுள்ளது. அத்துடன் இந்த டெங்கு நுளம்பு கட்டுப்படுத்தல் வேலைத்திட்டத்தின்போது 5பாடசாலைகள் மற்றும் 14கட்டுமான வேலைத்தளங்களில் டெங்கு நுளம்பு பரவும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த வேலைத்திட்டத்தில் முப்படைகள், சூழல் பாதுகாப்பு பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகர சபையின் சுகாதார பிரிவு அதிகாரிகள் உட்பட 900பேர் வரை கலந்துகொண்டிருந்தனர்.