இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 என்ற விமானமொன்று 29 விமானப்படை வீரர்களுடன் வங்காள விரிகுடா கடல் பகுதியில் வைத்து நடுவானில் மாயமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஏஎன்-32, இன்று காலை சென்னை தாம்பரத்திலிருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றபோது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த விமானத்தின் தகவல் தொடர்பு காலை 8.40 - 9.00 மணி அளவில் துண்டிக்கப்பட்டதாகவும் குறித்த விமானத்தில் 29 விமானப்படை வீரர்கள் பயணித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவல் துண்டிக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள், விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்தி உள்ளனர்.

குறித்த விமானம் எங்கே சென்றது, விபத்தில் சிக்கியுள்ளதாக அல்லது கடத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, மாயமான விமானத்தில் 4 மணி நேரம் மட்டுமே பயணிக்கும் அளவுக்கு எரிபொருள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.