அமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்தும் ட்ரம்ப் இருப்பதை சீனா விரும்புவது ஏன்?

Published By: J.G.Stephan

24 Oct, 2020 | 06:32 PM
image

ட்ரம்பின் ' அமெரிக்கா முதலில் ' என்ற கொள்கை பாரம்பரியமான நேசநாடுகளை அதிருப்திக்குள்ளாக்கியதுடன் பெய்ஜிங் தனக்கு அனுகூலமாக  வியூகங்களை வகுக்கவும் இடம்கொடுத்துவிட்டது.

 டொனால்ட் ட்ரம்ப் அமளியான முதலாவது பதவிக்காலத்தில் அதிருப்திக்குள்ளாக்கி சீற்றமடைய வைத்துவிட்டார். ஆனால், அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவதை பெய்ஜிங் வரவேற்கக்கூடும். ஏனென்றால், போட்டி வல்லரசு என்ற வகையில் அமெரிக்காவின் வீழ்ச்சி  ட்ரம்பைப் போன்ற ஒருவர் ஜனாதிபதியாக தொடர்ந்தும் இருந்தால் விரைவுபடுத்தப்படலாம் என்று சீனா நம்புகிறது.

 சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் முறைப்படியான உறவுகள் ஏற்படுத்தப்பட்டதற்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இப்போது இருப்பதைப் போன்று சினேகபூர்வமற்றவையாக முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. அமெரிக்காவுடன் ' புதிய பனிப்போர் ' ஒன்றில் ஈடுபட விரும்பவில்லை என்று சீனா எச்சரிக்கைசெயதிருக்கிறது. அமெரிக்கா முதலில்' என்ற பதாகையின் கீழ் ட்ரம்ப் சீனாவை அமெரிக்காவுக்கும்  உலகளாவிய ஜனநாயகத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக காண்பித்திருக்கிறார்.

அவர் சீனாவுடன் பெரியதொரு வர்த்தகப்போரை தொடுத்திருக்கிறார். அதனால் சீனாவுக்கு கோடிக்கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டுவிட்டது. சீனாவின் தொழில்நுட்ப  நிறுவனங்களை அடாவடித்தனமான முறையில் கண்டித்திருக்கும் ட்ரம்ப் தொற்றுநோய்க்கான முழுப்பொறுப்பையும் பெய்ஜிங் மீதே சுமத்தியிருக்கிறார்.

   ஆனால், ஒரு உலக வல்லரசாக தனது நாட்டின் எழுச்சியை வலுப்படுத்துவதில்  ஜனாதிபதி சி ஜின்பிங் நாட்டம் கொண்டிருக்கும்  நிலையில், நவம்பரில் இன்னொரு ட்ரம்ப் வெற்றி பெய்ஜிங்கிற்கு  அனுகூலமாக அமையலாம்.

   " உலகமயமாக்கல், பல்தரப்பு அணுகுமுறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காக குரல்கொடுக்கும் நாடாக சீனாவின் உலகளாவிய மதிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பொன்று சீனத் தலைமைத்துவத்துக்கு கையளிக்கப்படக்கூடும்" என்று பக்னெல் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் சர்வதேச உறவுகள் பேராசிரியர் ஷிகுன் ஷூ கூறுகிறார்.

   பரந்தளவிலான ஆசிய  - பசுபிக் வர்த்தக உடன்படிக்கை மற்றும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான  உடன்படிக்கைகளில் இருந்து ட்ரம்ப் அமெரிக்காவை வெளியில் எடுத்துவிட்டார். சீனப்பொருட்கள் மீது கோடிக்கணக்கான டொலர்கள் தீர்வைகளை விதித்த அவர் உலகளாவிய தொற்றுநோயின் உச்சக்கட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தில் இருந்தும் அமெரிக்கா வெளியேறியது.

   அமெரிக்கா எங்கெல்லாம் பின்வாங்குகிறதோ அங்கெல்லாம் சீனா பிரவேசிக்கிறது.

 சுதந்திர வர்த்தகத்துக்காக குரல்கொடுக்கும் நாடாகவும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தலைமைத்துவம் கொடுக்கின்ற நாடாகவும் சீனாவை முன்னிலைப்படுத்தியிருக்கும் சி ஜின்பிங் கண்டுபிடிக்கப்படக்கூடிய எந்தவொரு கொவிட் -- 19 தடுப்புமருந்தை வறிய நாடுகளுடன் பகிர்ந்துகொள்வதற்கும்  உறுதிபூண்டிருக்கிறார்." ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலம் ஒன்று உலக அரங்கில் மிகப்பெரிய வல்லரசாக எழுச்சி பெறுவதற்கு சீனாவுக்கு பெருமளவு காலத்தைக் கொடுக்கக்கூடும் " என்று பேராசிரியர் ஷூ குறிப்பிட்டார்.

    ட்ரம்பின் ' அமெரிக்கா முதலில் ' என்ற கொள்கையின் விரிவாக்கம் பெய்ஜிங்கிற்கு நீண்டகால நோக்கில் பயனளிக்கக்கூடியதாகும் என்று அமெரிக்காவின் ஹார்வார்ட் கென்னடி பாடசாலையி்ன் ஒரு சீன விவகார நிபுணரான பிலிப் லீ கோர் கூறுகிறார். அது ஒரளவுக்கு பாரம்பரிய நேசநாடுகளிடமிருந்து வாஷிங்டனை துண்டிக்கிறது.அத்துடன்   சீனா தனக்கு அனுகூலமான வியூகங்களை வகுக்கவும் அது வசதியாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

   சீனாவின் தேசியவாதிகள் ட்ரம்பை வெளிப்படையாக ஊக்கப்படுத்தி ஆரவாரம் செய்கிறார்கள் அல்லது கிண்டல் செய்கிறார்கள்.

  " அமெரிக்காவை வழமைக்கு மாறான விசித்திரமான போக்கை கடைப்பிடிக்கிற நாடாக மாற்றி உலகம் அமெரிக்காவை வெறுக்கும் நிலையை ஏற்படுத்தலாம் என்று சீனாவின் கடும்போக்கு தேசியவாதப் பத்திரிகையான  குளோல் ரைம்ஸின் பிரதம ஆசிரியர் ஹு சிஜின் அமெரிக்க ஜனாதிபதியை நோக்கிய டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்திருக்கிறார்." சீனர்களின் ஐக்கியத்தை மேம்படுத்த நீங்கள் உதவுகிறீர்கள் " என்று ட்ரம்புக்கு அவர் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

   கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்ற சீனாவின் சமூக ஊடகங்களும் ட்ரம்பை " ஜியான்குவோ' ( சீனாவை கட்டியெழுப்ப உதவுகிறவர்) என்று கிண்டல் செய்திருக்கி்ன்றன.

  பைடனின் சிக்கல்
சீனாவுக்கு பொருளாதார ம்றும் அரசியல் வேதனையை ட்ரம்ப் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

  சீனா அதன் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்துக்கான  திட்டத்தில் பெருமளவு வாய்ப்புக்களை இழந்திருக்கிறது என்று பெய்ஜிங்கை தளமாகக்கொண்ட அரசியல் ஆய்வாளர் ஹுவா போ கூறினார்.

   அமெரிக்காவும் சீனாவும் ஜனவரியில் அவற்றுக்கிடையிலான வர்த்தகப்போரில் ஓரளவு போர் நிறுத்தத்தை கொண்டுவரும் உடன்டிக்கையொன்றில்  கைச்சாத்திட்டன. அந்த உடன்படிக்கையின் கீழ் கார்கள் தொடக்கம் இயந்திரங்கள் வரை, எண்ணெய் தொடக்கம் பண்ணை உற்பத்திகள் என்று 20,000 கோடி டொலர்கள் பெறுமதியான மேலதிக அமெரிக்க உற்பத்திகளை இரு வருடங்களுக்கு இறக்குமதி செய்ய பெய்ஜிங் கடமைப்பட்டுள்ளது.

  சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தோற்றுவிப்பதாகக் கூறி அவற்றுக்கு எதிராகவும் வாஷிங்டன்  திரும்பியது. இதனால் சீனக்கம்பனியொன்றுக்கு சொந்தமான வீடியோ பகிரும் செயலியான ' ரிக்ரொக்' கின் எதிர்கால செயற்பாடுகள் நிச்சயமற்ற நிலைக்குள் தள்ளப்பட்டன.ட்ரம்பின் தாக்குதல் பட்டியலில்

 பிரமாண்டமான  மொபைல் கம்பனியான ஹுவாவீயும் இடம்பெறுகிறது.

  இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமை பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களிலும் வியாபகமடைகின்றன.தாய்வான், ஹொங்கொங் நிலைவரங்கள் ம்றும் சீனாவின் முஸ்லிம் உய்குர் சிறுபான்மையினத்வர்கள் நடத்தப்படுகின்ற முறை குறித்து அமெரிக்காவில் அக்கறை காட்டப்படுகிறது.ஆனால், ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடனிடம் ட்ரம்ப் தோல்வி கண்டாலும் இந்த பிரச்சினைகளில் எந்தவொன்று தொடர்பிலும் சீனாவுக்கு பெருமளவு மனநிம்மதி கிடைக்காமல் போகலாம்.

   மனித உரிமைகள் விவகாரங்களில் அமெரிக்க தலைமைத்தவத்தை புதுப்பித்து பைடன் உய்குர், திபெத் மற்றும் ஹொங்கொங் பிரச்சினைகளில் சீனா மீது நெருக்குதல்களைக் கொடுக்கக்கடிய சாத்தியம் இருப்பதாக பெய்ஜிங் கவலைப்படுகிறது. "சின்ஜியாங்கிலும் திபெத்திலும் மனித உரிமைகள் பிரச்சினைகளில் பைடன் ட்ரம்பையும் விட கடுமையான நிலைப்பாட்டை எடுக்கக்கூடியது சாத்தியம்" என்று பகனெல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷூ கூறுகிறார்.

   அமெரிக்க - சீன போட்டாபோட்டியில் முக்கியமான விவகாரங்களான தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் பைடனின் வெள்ளைமாளிகை எந்தளவுக்கு வியூகங்களை வகுக்கக்கூடியதாக இருக்கும் என்பதும் தெளிவில்லை.

   பைடன் ஜனாதிபதியானால் சீனாவுடனான தீர்வைகள் தொடர்பான பிரச்சினையையும்  கையேற்கவேண்டியிருக்கும்.அவர் ஒருதலைப்பட்சமாக தீர்வைகளை நீக்குவார் என்பதில் சந்தேகமில்லை என்று மூலோபாய மற்றும் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளரான போனி கிளாஸ்டர் கூறுகிறார்."  தீர்வைகள் நீக்கப்படவேண்டும் என்று சீனா விரும்பினால், அமெரிக்காவின் ஏனைய கோரிக்கைகளுக்கு பெய்ஜிங் விட்டுக்கொடுக்கவேண்டியேற்படலாம் ".

   தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மேலும் சேதத்தை ஏற்படு்த்தக்கூடிய  தடைகளை தவிர்க்கவேண்டுமானால், தரவுப் பாதுகாப்பு  விவகாரத்தில் நம்பகத்தன்மையான நிலைப்பாட்டை சீனா முன்வைக்கவேண்டியும் இருக்கும். 5 ஜி இன்டர்நெற்றில் உலக தலைமை நிறுவனமாக விளங்கும் ஹுவாவீயை பாரதூரமான பாதுகாப்பு அச்சுறுத்தலாக வாஷிங்டன் நோக்குகிறது.

  " அரசியல்ரீதியில் நோக்குகையில், இந்த கொள்கைகளையெல்லாம் மறுதலையாக்குவது பைடனுக்கு பெரும்பாலும் சாத்தியமாகாமல் போகலாம்.ட்ரம்ப் ஜனாதிபதியாக வருவதற்கு முன்னதாகவே ஹுவாவீ ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமெரிக்காவின் ராடாரில் இருந்துவருகிறது " என்று புரூசெல்ஸில் அமைந்திருக்கும் ரஷ்ய ஐரோப்பிய ஆசிய கற்கைகளுக்கான நிலையத்தின் பண்ப்பாளரான தெசேரா ஃபாலொன் கூறினார்.

( பட்ரிக் பார்ட், ஏ.எவ்.பி.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54