இலங்கை தமிழர்களை இனியும் இந்தியா பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது - சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை

Published By: Digital Desk 3

20 Oct, 2020 | 11:30 AM
image

இலங்கை தமிழர்களை இனியும் இந்தியா பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது. 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதிலிருந்து அதனை மேம்படுத்தி அர்த்தபுஷ்டியான அரசியல் தீர்வொன்றை நிலைபெறச்செய்வதற்கு உடனடியானதும் காத்திரமானதுமான தலையீடுகளை இந்தியா செய்ய வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 33 ஆண்டுகளைக் கடந்துள்ளபோதும் தற்போது வரையில் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் மாறிமாறி ஆட்சிப்பீடமேறிய ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்தே வந்திருக்கின்றனர்.

அவ்வாறான நிலையில் தற்போதைய ஆட்சியாளர்கள் தமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை பாராளுமன்றில் கொண்டிருக்கின்றோம் என்ற இறுமாப்புடன் அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் காணப்படும் ஒரேயொரு ஏற்பாடான 13ஆவது திருத்தச்சட்டத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

விடயதானத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகரவே மாகாண சபை முறைமைகளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறிவருவதோடு, இந்திய எதிர்நிலை வாதத்தினையும் தோற்றம்பெறச் செய்து வருகின்றார். அதேநேரத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

ஆனால் இதுவரையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆட்சியில் உள்ளவர்கள் எந்தவிதமான பிரதிபலிப்பையும் செய்ததாக இல்லை. அதேநேரம் ஜனநாயக கட்டமைப்புக்களை தகர்த்து ஜனநாயக விழுமியங்களுக்கு மரண அடி அளிக்கப்போகும் 20ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றுவதற்கே அரசாங்கம் முனைந்து கொண்டு இருக்கின்றது.

அதற்கு அடுத்ததாக புதிய அரசியலமைப்பு ஒன்றையும் உருவாக்குவதற்கான முனைப்புக்கள் செய்யப்படுகின்றன. 'ஒரேநாடு ஒரே சட்டம்' என்ற கோட்பாட்டில் சர்வாதிகாரத்தினை முன்னெடுக்கும் வகையில் தனி நபருக்கான அதிகாரக்குவிப்பை இலக்கு வைத்தே புதிய அரசியலமைப்பு மேற்கொள்ளப்படப் போகின்றது என்பது திண்ணம்.

இவ்வாறானதொரு பின்னணியில் இந்தியா 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுயையாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். அந்த தார்மீக கடமையிலிருந்து இந்தியா தவறும் பட்சத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தம் கேள்விக்குள்ளாக்கப்படுவதோடு மாகாண சபை முறைமையும் நீர்த்துப்போகும் போராபத்தே உள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் இந்தியாவின் பங்களிப்பு காலங்காலமாக தொடர்ந்துகொண்டிருக்கின்றது. தற்போது கூட பிராந்தியத்தின் தலைமைப் பாத்திரத்தினைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மீது தமிழர்கள் நம்பிக்கையும் எதிர்பார்ப்பினையும் கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இந்தியா தனது நலன்களுக்கு அப்பால் சென்று உரிய தலையீடுகளை செய்ய வேண்டும். கடந்தகாலங்களில் இலங்கை அரசாங்கத்துடன் முரண்பாடுகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்தியா தமிழர்களின் விடயத்தில் தீவிரத்தன்மையை காட்டியது. இத்தகைய பகடைக்காய்களாக பயன்படுத்தும் நிலைமையை இந்தியா கைவிட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

சமகாலத்தில், ஆட்சியாளர்கள் சீனாவுடன் கொண்டிருக்கும் இருதரப்பு உறவுகள் மென்மேலும் வலுவடைந்து செல்கின்றன. அதுமட்டுமன்றி, இலங்கையின் பொருளாதார மந்தநிலைமையிலிருந்து மீட்சி பெறுவதற்கு சீனாவின் பங்களிப்பும் கணிசமாக உள்ளதோடு சர்வதேச ரீதியாகவும் இலங்கையின் காப்பாளனாக சீனா செயற்படுவதை உறுதி செய்துள்ளது.

ஆகவே இந்த உறவு நிலை மேலும் வலுப்படும் பட்சத்தில் இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுவதானது, வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு சமாந்தரமாக தென்னிந்தியாவிலும் சுமூகமற்ற நிலைமையொன்று ஏற்படும். அவ்விதமான நிலைமையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமைவதோடு பிராந்திய தலைமைத்துவ பாத்திரத்திற்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

எனவே, இந்திய மத்திய அரசானது, தொடர்ச்சியாக கடைப்பிடிக்கும் மென்போக்கினை விடுத்து நேரடியான தலையீடுகளைச் செய்வதன் மூலமாகவே தமிழர்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் உறுதிப்படுத்தப்படுவதோடு இந்தியாவின் பூரண அமைதியும் உறுதி செய்யப்படும் என்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08