நிறைவேறுமா ‘20’?

18 Oct, 2020 | 09:09 AM
image

-என்.கண்ணன்

‘மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது கூட, அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சிக்கலான விடயமாகவே உள்ளது’

20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு வலுவடைந்து வருகின்ற சூழலில், இதனை அவசர அவசரமாக நிறைவேற்றும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடும் போது தான், 20 ஆவது திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது, விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், தெரிவித்துள்ள கருத்து அதிகாரபூர்வமாக சபாநாயகரால் வெளிப்படுத்தப்படும்.

எனினும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த வாரமே அதிகாரபூர்வமற்ற வகையில் ஊடகங்களில் வெளியாகி விட்டது. அது எவ்வாறு ஊடகங்களுக்கு கசிந்தது - அது கசிய விடப்பட்டதன் மர்மம் என்ன என்பதெல்லாம் ஒரு புறத்தில் இருக்கட்டும்.

உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபையில் அறிவிக்கப்பட்ட பின்னர் அடுத்தவாரம், பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

வரும், செவ்வாய் மற்றும் புதன்கிழமையில் அல்லது புதன் மற்றும் வியாழக்கிழமையில் விவாதத்தை நடத்தும் திட்டத்தில் அரசாங்கம் இருக்கிறது.

இந்த விவாதத்தின் பின்னர், வாக்கெடுப்பு நடத்தி அதனை நிறைவேற்றுவது தான், அரசாங்கத்தின் திட்டம். உயர்நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தாலும், அதற்குச் செல்வதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக தெரிகிறது.

கடந்த வாரம் பொதுஜன பெரமுன தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், உயர்நீதிமன்றம் கூறும் பரிந்துரைகளை ஏற்று, அதற்கேற்ப திருத்தங்களைச் செய்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லப் போவதில்லை என்றும் அவர் கூறியி்ருக்கிறார். 20 ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட போதும், அதற்கு முன்னரும், தேவைப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்த தயார் என்று அரசாங்கம் மார் தட்டியது நினைவிருக்கலாம்.

பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியின் திமிர் அந்தக் கருத்தில் வெளிப்பட்டது. பொதுத் தேர்தலில் வென்றதைப் போல சர்வஜன வாக்கெடுப்பையும் இலகுவாக வெற்றி கொண்டு விடலாம் என்று அசட்டு நம்பிக்கை அரசாங்கத்திடம் காணப்பட்டது.

இப்போது அந்த நிலை இல்லை. 20 ஆவது திருத்தத்துக்கு எதிரான அலை பௌத்தர்கள் மத்தியில் இருந்தோ எழுந்து கொண்டிருக்கிறது.

அதைவிட, பொதுத் தேர்தலுக்குப் பிந்திய, சூழலில், அரசாங்கம் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

பொருளாதார ரீதியாகவும், ஏனைய பல்வேறு விடயங்களிலும், அரசாங்கம் செல்வாக்கை இழந்து வருகிறது. மக்கள் மத்தியில் அரசாங்கம் மீதிருந்த நம்பிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது.

குறிப்பாக, 20 ஆவது திருத்தம், முன்வைக்கப்பட்ட பின்னர், அரசாங்கம் தன்னிச்சையாக - சர்வாதிகாரப் போக்கில் செயற்பட முனைகிறது என்ற கருத்து பெரும்பாலானவர்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.

இவ்வாறான நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது கூட, அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் சிக்கலான விடயமாகவே உள்ளது.

இவ்வாறான நிலையில், சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றால், அரசாங்கம் தோல்வியைச் சந்திக்கும் நிலை கூட ஏற்படலாம்.

அவ்வாறான ஒரு தோல்வி ஏற்பட்டால், சில மாதங்களுக்கு முன்னர், அரசாங்கம் பொதுத் தேர்தலில் பெற்றிருந்த மக்கள் ஆணையைக் கூட அது கேள்விக்குள்ளாக்கி விடும்.

எனவே, இப்போதைய நிலையில், சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. அவ்வாறு செல்லாமல் இருப்பது தான் புத்திசாலித்தனம். பௌத்த பீடங்கள், சங்க சபாக்கள் கூட 20 ஆவது திருத்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வலுவாக எதிர்க்கின்ற நிலையில் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வது உண்மையில் ஆபத்தான விடயம் தான்.

இந்த விசப்பரீட்சையில் இறங்குவதை விட, உயர்நீதிமன்றம் கூறுகின்ற விடயங்களில், திருத்தங்களைச் செய்வது, அல்லது அந்த திருத்தங்களை கைவிடுவதற்கே அரசாங்கம் தயாராக இருக்கிறது.

சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்வதானால் கூட அரசாங்கத்துக்கு பெரும் செலவு ஏற்படும். பொதுத்தேர்தலில் ஏற்பட்டளவுக்கு இல்லாவிட்டாலும் அதனை விட சற்று குறைந்தளவு பணத்தை செலவிட்டே ஆக வேண்டியிருக்கும்.

இப்போதைய நிலையில் அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது.

இதனையே சமாளிக்க முடியாத நிலையில் சர்வஜன வாக்கெடுப்புக்காக நிதியை செலவிட முனைந்தால், அது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பொதுமக்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தும்.

எனவே, சர்வஜன வாக்கெடுப்பில் இருந்து விலகியிருக்கவே அரசாங்கம் முற்படும். பொதுத்தேர்தலின் போது காணப்பட்ட அரசாங்கத்துக்கு சார்பான சூழல் இப்போது மாறத் தொடங்கியிருக்கிறது, இவ்வாறான நிலையில், 20 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாயின், அரசாங்கத்துக்கு உள்ள ஒரே வழி, உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படும் நான்கு பிரிவுகளிலும் திருத்தங்களை செய்யாமல், நாசூக்காக நழுவிக் கொள்வது தான்.

அதேவேளை, 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தில், இந்த நான்கு விடயங்கள் மாத்திரமே, ஜனநாயகத்துக்கும், இறைமைக்கும், சுதந்திரத்துக்கும் ஆபத்தானவை அல்ல.

ஏனைய பல பிரிவுகளும் கூட, ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாகவே உள்ளன என்பது தான் எதிர்க்கட்சிகளின் வாதம்.

ஜனாதிபதிக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கும் வேறு பிரிவுகளும் உள்ளன என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. 

எவ்வாறாயினும், 20 ஆவது திருத்தம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டாலும் சரி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும் சரி, அது ஆபத்தான நிலையைத் தான் உருவாக்கும்.

அதனால் தான், அமரபுர- ராமன்ன மகா நிக்காயக்களும், கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள் பேரவையும் கூட 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

பௌத்த பீடங்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசாங்கம் 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை விலக்கிக் கொண்டால், பௌத்த சிங்கள மக்களின் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள முடியும். மாறாக இந்தக் கோரிக்கையை நிராகரித்து, பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால், பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அரசாங்கத்தின் செல்வாக்கு உடையத் தொடங்கும்.

அதேவேளை, பௌத்த பீடங்கள் மற்றும் சிங்கள கடும்கோட்பாட்டாளர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டு, 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கி அரசாங்கம் தோல்வியை சந்தித்தால், அதுவும் ஆபத்தானது தான்.

அந்தக் கட்டத்தில் சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் இன்னும் கூடுதலாகப் பலமடைவார்கள். ஏற்கனவே தனியாக அரசாங்கத்தை அமைத்து விட்டோம் என்று நிரூபித்த சிங்கள பௌத்த பேரினவாதம், அவ்வாறான அரசாங்கத்தை தனியாக வீழ்த்தவும் தயங்கமாட்டோம் என்று நிரூபித்து விட்டோம் என்றும் கொட்டமடிக்கும்.

அது, சிங்கள அரசியல் சக்திகளை பௌத்த சிங்கள பேரினவாதத்துக்குள் இன்னும் ஆழமாக இழுத்துச் செல்லவே வழி வகுக்கும்.

20 ஆவது திருத்தம் என்பது இந்த அரசாங்கத்தின் ஒரு அடையாளம் தான். அதன் வெற்றியும் தோல்வியும் பல்வேறு பரிமாணங்களில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்களை, யாரும் இலகுவானதாக குறைத்து மதிப்பிட்டு விட கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22