இலங்கை ஊடாக இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட இடமளியோம்

Published By: Digital Desk 3

17 Oct, 2020 | 02:52 PM
image

சீனாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி பாலித்த கோஹன கேசரிக்கு செவ்வி

பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவுக்கு பாரிய அக்கறை இருக்கின்றது.   அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அவர்களுக்கு பாரியதொரு தேவை இருக்கின்றது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இலங்கையினாலும் அல்லது இலங்கை ஊடாகவும் இடம்பெறாமல் இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும்  என்று  சீனாவுக்கான நியமிக்கப்பட்டுள்ள  தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார். 

இந்தியாவின்  பாதுகாப்பு அக்கறைக்கு இலங்கை எந்தவிதமான அச்சுறுத்தலையும் கொடுக்காது. இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்பது உறுதிப்படுத்தியுள்ளோம். இலங்கையினால் இந்தியாவின் பாதுகாப்பு அக்கறைக்கு எந்த விதமான சேதமும் ஏற்படாது  என்றும்  அவர் குறிப்பிட்டார்.  

கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் சர்வதேச மயப்படுத்தல் நிலைமை, நாடுகளுக்கு இடையிலான தொடர்புகள், உறவு, நட்பு நிலைமைகள், கொடுக்கல் வாங்கல்கள், அரசியல், சமூக, பொருளாதார, கலாசார ரீதியான தொடர்புகள் எவ்வாறு தொடர்கின்றன என்பது தொடர்பில் ஒரு புதிய அத்தியாயமே ஆரம்பித்திருக்கிறது. இந்த புதிய நிலைமை எவ்வாறு அமையுமென்பது தொடர்பாக சீனாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சிரேஸ்ட இராஜதந்திரி கலாநிதி பாலித கோஹன கேசரிக்கு வழங்கிய  செவ்வியிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பரந்துபட்ட ரீதியான விளக்கங்களுடனான கலாநிதி பாலித கோஹனவுடனான நேர்காணல் வருமாறு. 

கேள்வி கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலானது உலக நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தியது? 

பதில்; பல்வேறு புதிய விடயங்கள் இடம்பெற்றுள்ளன. நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் இணையவழியில் இடம்பெற்றுள்ளன. இம்முறை ஐக்கிய நாடுகள் சபை தலைவர்கள் மாநாடு கூட டிஜிட்டல் வழியே நடைபெற்றது. எனவே எதிர்காலத்தில் நாடுகளின் வெளியுறவு விவகாரங்கள்கூட இவ்வாறு டிஜிட்டல் அல்லது இணைய வழி முறையிலேயே அதிக அளவில் நடைபெறும் என்பது தெளிவாகின்றது. அதுமட்டுமன்றி சர்வதேச வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் என்பவையும் இவ்வாறு புதிய முறையில் இடம்பெறுமென நான் நம்புகிறேன்.‌ சில வாரங்களுக்கு முன்னர் எமது நாட்டின் பிரதமர் இந்திய பிரதமருடன் இவ்வாறு இணையவழி இருதரப்பு கலந்துரையாடல்  மாநாடு ஒன்றை நடத்தியதை  கண்டோம். எனவே எதிர்காலத்தில் வெளிநாட்டு உறவு அல்லது சர்வதேச உறவு என்பது இலத்திரனியல் முறையிலேயே நடை பெறுவதற்கான ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.  

கேள்வி;  கொரோனா காலப்பகுதியில் வெளிவிவகார அல்லது சர்வதேச உறவு என்பது நாடுகளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது? 

பதில்; இக்காலப்பகுதியில் சர்வதேச உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது. நாடுகளுக்கிடையிலான பெளதீக ரீதியான  தொடர்பு குறைந்தது. சர்வதேச போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது. அதனால் இலத்திரனியல் தொடர்பு மிகப்பெரியதொரு நிவாரணமாக அமைந்தது. 

கேள்வி; கொரோனாவுக்கு முன்னரை போன்றே இந்த இணைய வழி ஊடான நாடுகளுக்கு இடையிலான தொடர்பு உரிய முறையில் பயன்பட்டதா? 

பதில்; இலத்திரனியல் தொடர்புமுறை ஒரு சிறந்த ஒரு பதிலீடாக அல்லது ஒரு புது முறையாக காணப்பட்டது. பெளதீக தொடர்புகளை போன்று மிக சிறப்பாக இடம் பெற்றதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இது ஒரு மாற்று வழியாக காணப்பட்டது. தொடர்புகள் தொடர்ச்சியாக பேணப்பட்டமை முக்கிய அம்சமாகும். 

கேள்வி; கொரோனா இந்தளவு தூரம் உலகை ஆட்டிப் படைப்பதற்கும் இந்த சர்வதேசமயமே காரணம் என்று கூறப்படுகின்றதே? 

பதில்; அது ஒரு சரியான கூற்று என்று நான் நினைக்கவில்லை. தற்போது நாம் ஐரோப்பாவை எடுத்தால் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக இருக்கின்றனவே. அதுதான் யதார்த்தம்.  

கேள்வி கொரோனாவின் பின்னர் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் எவ்வாறானதொரு புதிய அணுகுமுறை இருக்க வேண்டும்? 

பதில் எமது சர்வதேச தொடர்புகளை நாம் சரியான முறையில் தொடர்ந்து பேண வேண்டும். அவற்றின் ஊடாகவே சர்வதேச பொருளாதார தொடர்புகளை நாம் பேண முடியும். வர்த்தகத் தொடர்புகள் மற்றும் கல்விமான்களுடனான தொடர்பு தொழில்நுட்ப தொடர்பு என்பவை மிகவும் முக்கியமாகும். எந்த ஒரு நாடும் இப்போதும் அல்லது எதிர்வரும் காலங்களிலும் முழுமையான ஒரு தீவாக இருக்க முடியாது.  தீவு என்பதன் வரைவிலக்கணம் கூட தற்போது மாறியிருக்கிறது. ஒரு நாட்டின் எதிர்கால பயணத்திற்கு சர்வேதேச தொடர்பு என்பது மிகவும் அவசியமாகும். அது வரலற்றிலும் முக்கிய மிக்கதாகவே இருந்தது. பண்புகள் கலாச்சாரம் மதம் என்பவை அதனாலே பரவின. 

கேள்வி; எதிர்காலத்தில் இலங்கையின் வெளியுறவானது எந்த பிராந்தியத்தை எந்த திசையை நோக்கியதாக இருக்கவேண்டும்? 

பதில்;  தெற்காசிய பிராந்தியம் கிழக்காசிய பிராந்தியம் உட்பட்ட ஆசியாவை நோக்கியதாக கொரோனாவின் பின்னரான  இலங்கையின் அடுத்த வெளியுறவு  அவதானம் வெகுவாக இருக்கவேண்டும். இந்தப் பிராந்தியமே   தற்போது மிகவும் வேகமாக அபிவிருத்தி அடைந்து வருகிறது. அந்த முன்னேற்றத்தில் நாம் பயன் பெறவேண்டும். ஆசிய நாடுகளுடன் மிக நெருக்கமான வர்த்தக தொடர்புகளை இலங்கை பேண வேண்டும். முதலீடுகளை பெற்றுக் கொள்வது அவசியம். சீனாவிலிருந்து 2019 ஆம் ஆண்டில் 169 மில்லியன் சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதில் ஒரு சிறு பகுதியையாவது எமது நாட்டுக்கு திருப்பி கொண்டால் எமது பொருளாதாரம் சிறந்த நிலைக்கு பயணிக்கும். எனவே எமது அடுத்த அணுகுமுறை அல்லது அவதானம் எமது ஆசியாவை  நோக்கியதாகவே இருக்க வேண்டும். 

கேள்வி; அதாவது நாம் ஆசியாவை நோக்கி  எமது வெளியுறவு அணுகுமுறையை முன்னெடுக்கவேண்டும் அப்படியா

பதில்; ஆசியாவை நோக்கிய எமது அதிக அவதானம் வெளியுறவு அணுகுமுறை இனிவரும் காலங்களில் இருக்க வேண்டும். 

கேள்வி; எமது ராஜதந்திர வெளியுறவு சேவையில் நாம் ஒரு புதிய கோணத்தில் செயல்பட வேண்டுமா? ஏதாவது மாற்றங்களை செய்ய வேண்டுமா? 

பதில்; வரலாற்று ரீதியாக எமது அவதானம் அதிக அளவில் மேற்கு நாடுகளை நோக்கியே இருந்துள்ளது.  அந்த அவதானம் தொடர்ந்தும் இருக்க வேண்டும். அதை நிறுத்த   தேவையில்லை. ஆனால் தற்போது ஆசியா சிறந்த மட்டத்தில் முன்னேறிக் கொண்டு செல்கிறது.   இராணுவ ரீதியாகவும் மக்கள் அபிவிருத்தி ரீதியாகவும் ஆசிய நாடுகள் சிறந்த நிலைக்கு செல்கின்றன. எனவே எமது அடுத்த அவதானத்தை ஆசிய நாடுகள் மீது செலுத்துவதே நியாயமானதாக இருக்கும். அது செய்யப்படும் முடியுமான ஒன்றாகும். 

கேள்வி; கொரோனா வைரஸ்  உலகம் எனக்கு கற்பித்த பாடம் என்ன? 

பதில்; பல பாடங்களை கற்பித்துள்ளது.முதலாவதாக நாம் சிறந்த முறையில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.  இந்த வெற்றியை நாம் உலகத்துடன் பகிர்ந்து கொள்ள முடியும்.   2009 ஆம் ஆண்டும் நாம் யுத்தத்தை முடித்து உலகத்திற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தினோம். சர்வதேச சஞ்சிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும் என்று ஆசிரியர் தலையங்கம் தீட்டியது. அதற்கு உதாரணமாக இலங்கையை எடுத்துக் காட்டியிருந்தது. 

கேள்வி; ஆசியாவுடன் எமது அடுத்த அணுகுமுறை இருக்க வேண்டும் என்று கூறுகின்றீர்கள். ஆசியாவின் இருபெரும் சக்திகளாக சீனா மற்றும் இந்தியா உள்ளன. இந்த இரண்டு நாடுகளுடனும் எமது உறவு எவ்வாறு முகாமை செய்யப்பட வேண்டும்? 

பதில்; இது ஒரு முக்கியமான கேள்வி. இந்தியா எமது நெருங்கிய அயல்நாடு. எமது தேச எல்லையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. இந்தியா விரைவாக அபிவிருத்தி அடைந்துவரும் மிக விசாலமானது ஒரு நாடாகும். ஒரு மிகப்பெரிய சந்தை எனக்கு அருகில் இருக்கின்றது. அதிகமான கலாசார விழுமியங்கள் எமக்கு இந்தியாவிடமிருந்து கிடைத்தன. எமது மதம் மக்கள் அனைத்தும் இந்தியாவிலிருந்தே வந்தனர். மிக நெருக்கமாக நாம் செயற்பட வேண்டிய நாடு இந்தியா.   இந்தியாவுடன் எமது உறவு வலுவாகவும்  சிறந்த நெருக்கமான முறையிலும் இருக்கும்.  அதேபோன்று சீனாவும்  எம்முடன் நீண்டகாலமாக செயற்பட்டுவருகின்றது.   இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளும் யுத்தத்தை  முடிக்க எமக்கு உதவியுள்ளன. இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவுக்கு பாரிய அக்கறை இருக்கின்றது.   அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அவர்களுக்கு பாரியதொரு தேவை இருக்கின்றது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இலங்கையினாலும் அல்லது இலங்கை ஊடாகவும் இடம்பெறாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்தியாவின்  பாதுகாப்பு அக்கறைக்கு இலங்கை எந்தவிதமான அச்சுறுத்தலையும் கொடுக்காது. இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்பது உறுதிப்படுத்தியுள்ளோம். இலங்கையினால் இந்தியாவின் பாதுகாப்பு அக்கறைக்கு எந்த விதமான சேதமும் ஏற்படாது. 

மறுபுறம் எமது பிராந்தியத்தில் மிகவும் அபிவிருத்தி அடைந்த நாடாக சீனா திகழ்கிறது. சீனாவே இன்று உலகநாடுகளுக்கு மூலதனத்தை பகிர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கிறது. மிகப் பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடு செய்யும் நாடாக இருக்கின்றது. எனவே சீனாவுடனும் நாம் நெருக்கமாக செயற்பட வேண்டும். நாம் விரைவாக அபிவிருத்தி அடைய வேண்டியுள்ளது.  எமது இலக்கை அடைய பாரியளவில் சீனாவினால் உதவ முடியும். சீனாவும் எம்முடன் நீண்ட காலமாக நெருக்கமாக செயற்பட்டு வந்திருக்கிறது. யுத்த காலத்தில் சீனா எமக்கு பாரிய உதவிகளை வழங்கியது. அவ்வாறு சீனா உதவி வழங்கியிருக்காவிட்டால்  2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடித்திருக்க முடியுமா என்ற ஒரு கேள்வியும் காணப்படுகிறது.  இந்த வைரஸ் தொற்றின் போதும் சீனா எனக்கு உதவியது. எமக்கு தற்போது மூலதனம் உதவி தேவைப்படுகிறது. அதனை நாம் சீனாவிடம் இருந்து அதிகளவில் பெற்றுக்கொள்ள முடியும். சீனா ஒரு மிகப்பெரிய வளர்ச்சியை அடைகிறது. அதிலும் நாம் பயன்பெற வேண்டும். சீனாவுடனான எமது நெருக்கம் அதற்கு சிறந்த வகையில் கைகொடுக்கும்.

கேள்வி; சீனாவுடனான இலங்கையின்  நெருக்கமான உறவு இந்தியாவின் அக்கறைக்கு எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தாது என்று கூறுகிறீர்களா? 

பதில்; இது ஒரு அவசியமற்ற கேள்வியாகவே இருக்கிறது. சீனாவுடனான எமது உறவு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்க வேண்டும் என்று கருதுவதாக  சீனாவும் ஒருபோதும் கூறியதில்லை. இந்தக் கேள்வி இங்கு எழ வேண்டிய அவசியமில்லை. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையை சீனா பயன்படுத்துவதாக ஒருபோதும் கருதவில்லை

கேள்வி; எனினும் அண்மைய சில நகர்வுகள் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது? 

பதில்; அப்படி இருப்பதாக நான் கருதவில்லை. 

கேள்வி; சீனாவின் உயர்மட்ட குழுவின்  இலங்கை வருகை அதனைத்தொடர்ந்து திடீரென பிரதமரை இந்திய தூதுவர் சந்தித்தமை என்பவற்றின் வெளிப்பாடு என்ன? 

பதில்; வெளிநாட்டு தூதுவர்கள் எமது நாட்டில் இருப்பது தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தானே?. அதில் எந்த சிக்கலும் இல்லை.

கேள்வி; எனினும் சீன குழுவினரின் வருகையின் பின்னர் இந்தியா எம்முடன் மனஸ்தாபப்படும் என்பது போன்ற கருத்துக்களை எதிர்க்கட்சியும் வெளியிடுகின்றதே? 

பதில்; இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றமையினால்தான்   நாடுகளுக்கிடையில் சிக்கல்கள் தோன்றுகின்றன. இதனைவிட சிந்தனை ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் நாம் செயல்பட வேண்டும். புத்தி கூர்மையாக செயல்படுவது அவசியம். இந்த விடயத்தில் ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. தனிப்பட்ட கருத்துக்களை விட  ஒன்றிணைந்த ஒரு கூட்டு போக்கு அவசியமாகும். அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் வெளிவிவகார உறவு விடயத்தில் ஒரு கூட்டு போக்கில் பயணிக்கின்றன. 

கேள்வி; எமது இராஜதந்திர அணுகுமுறையில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா? காரணம் கடந்த வாரம் அமெரிக்க தூதுவர் மற்றும் சீன தூதரகத்தின் அதிகாரி ராஜதந்திர ரீதியில் முரண்பட்டுக் கொண்டனரே? 

பதில்; அது எமது பிரச்சினையல்ல. அது அவர்களுக்கு இடையிலான முரண்பாடு.‌ வேறு நாடுகளுக்கிடையில் காணப்படும் பிரச்சினை தொடர்பில் நான் பேச வேண்டியதில்லை.

கேள்வி; அப்படியானால் இலங்கை உதைபந்து போன்று ஆகிவிடாதா? 

பதில்; இல்லை அப்படியில்லை.  

கேள்வி; யார் இலங்கையுடன் அதிக உறவை பேணுகின்றனர் என்பது தொடர்பான பிரச்சினை இருப்பதாக அல்லவா  தெரிகிறது?  

பதில்; இலங்கை தொடர்பான அவதானம் வெளி நாடுகளுக்கு இருக்கலாம். அதில் நன்மை அடைவது எமது சாமர்த்தியமாகும். மாறாக அவர்களது பிரச்சினையில் தலையிடுவது எமது செயற்பாடு அல்ல. அயலவர்களின் நெருக்கடியில் நாம் தலையிட வேண்டியதில்லை. நாம் எமது பிரச்சினைகளை பார்த்துக் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு எமது தொடர்புகளை முன் கொண்டுசெல்லக்கூடாது. 

கேள்வி; 2010 ஆம் ஆண்டின் பின்னர் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டதா

பதில்;  2010 ஆம் ஆண்டின் பின்னர் விரிசல் ஏற்பட்டது என்று நான் கருதவில்லை. யுத்த காலத்தில் நாம் பேணிய மிக நெருக்கமான தொடர்பு அதன் பின்னர் அலட்சியப்படுத்தப்பட்டதாக இருந்திருக்கலாம். அந்த தவறிலிருந்து நாம் பாடங்களை கற்றிருக்கின்றோம். அதனாலேயே முன்னெப்போதும் இல்லாத வகையிலான சிறந்த பலமான உறவை நாம கட்டி எழுப்புகிறோம். 

கேள்வி; யுத்தத்தை முடிப்பதற்கு இந்தியாவும் சீனாவும் உதவியது அல்லவா

பதில்; இந்தியாவிலிருந்து  பாரிய உதவிகள் கிடைத்தன. இந்தியா தனது தேச எல்லைகள் ஊடாக புலிகளின் போக்குவரத்தை முறியடித்தது. புலிகளின் ஆயுத போக்குவரத்தை தடுத்தது. இந்தியாவில் இருந்த புலி உறுப்பினர்களை அவர்கள் தமது அவதானத்தின் கீழ் கொண்டு வந்தனர். அதன்படி இந்தியாவில் இருந்தாலும் மிக மக்கிய உதவிகளை எமக்கு  கிடைத்தன. 

கேள்வி; இந்தியா மற்றும் சீனாவின் உதவி இல்லாவிடின் யுத்தத்தை முடித்திருப்பது கஷ்டமாக இருந்திருக்குமா

பதில்; அந்த நெருக்கடி நேரத்தில் நாம் எமது வெளியுறவுக் கொள்கையை மிகவும் சிறப்பாக கொண்டு சென்றதைப் போன்று எதிர்காலத்திலும் நாம் செயற்படுவது அவசியம். நாம் அப்போது இந்தியா மற்றும் சீனாவோடு சிறந்த உறவை முன்னெடுத்தோம். இரண்டு நாடுகளினதும் உதவியைப் பெற்று யுத்தத்தை முடிப்பதில் வெற்றி கொண்டோம்.

ரொபட் அன்டனி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22