(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அரசியல் முக்கிய பதவி வழங்கப்பட்டிருப்பதை கடுமையாக எதிர்ப்பதாகவும் இதனை உடனடியாக கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்தும் ஜே.வி.பி, மஹிந்த ஆட்சியைப் போன்று இன்றைய ஆட்சியாளர்களும் திருடர்களை பாதுகாக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதாகவும் அக் கட்சி குற்றம் சாட்டியது. 

இது தொடர்பாக ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜிதஹேரத் மேலும் தெரிவிக்கையில்,

 

மத்திய வங்கி பினை முறிவு தொடர்பான 1500 கோடி ரூபா தொடர்பான பிரச்சினை தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன. கோப் குழு விசாரணைகளும்  நடைபெற்று வருகின்றன. அத்தோடு மேற்கண்ட பிணை முறிவு தொகை தொடர்பிலும் இது வரையில் நிச்சயிக்கப்பட்டு முறிவு விசாரணைகள் மூலம் எடுக்கப்படவில்லை. 

இவ்வாறானதோர் நிலையில் அதாவது விசாரணைகள் முடிவடையாத நிலையில் அர்ஜுன மகேந்திரனை அரசின் பத்து இலட்சம் தொழில் வழங்கும் திட்டம் மற்றும் நாட்டுக்கு பயங்கரமான பொருளாதார பாதிப்புக்களை ஏற்படுத்தும் எட்கா உடன்படிக்கை உட்பட சர்வதேச நாடுகளுடனான உடன்படிக்கைகளை கையெழுத்திடுவது தொடர்பிலான பொறுப்பும் வழங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெ ளியாகியுள்ளன. 

இதனை நாம் எதிர்க்கின்றோம். கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் திருடர்களை பாதுகாக்க முனைந்ததாலேயே மக்களால் வெ ளியேற்றப்பட்டனர். எனவே அவ்வாறான நிகழ்ச்சி நிரலையே நல்லாட்சி என கூறிக் கொள்ளும் புதிய ஆட்சியாளர்கள் முன்னெடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். 

அரசாங்கம் இவ்வாறானதொரு முடிவினை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இதனை கைவிட வேண்டும் என்றும் விஜித்த ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.