இருபதின் கதி எவ்வாறு அமையும்  ?

Published By: Digital Desk 3

14 Oct, 2020 | 12:07 PM
image

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு  என்னவாகும்? என்று பலரும் எதிர்பார்த்துள்ளனர்.  இந்நிலையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தனி மனித சுதந்திரத்திற்கும் ஜனநாயக கொள்கைகளுக்கும் முரணான கொள்கைகளை கொண்டுள்ளது. இத்திருத்தம் செயலுருவம் பெற்றால் நாடு இருண்ட யுகத்தை நோக்கி பயணிக்கும். பாராளுமன்றமும் நீதிமன்றமும் நிறைவேற்ற துறைக்கு அடிபணிய இடமளிக்க முடியாது. எனவே அரசு 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று இலங்கை அமரபுர மற்றும் ராமான்ய பீடங்களின் சங்கசபை  கூட்டாக இணைந்து அரசாங்கத்தை கேட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தினை துரிதமாக நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பது சந்தேகத்திற்குரியது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் பெரும்பான்மை பலத்தை தவறான முறையில் பயன்படுத்தக் கூடாது. ஆகவே பௌத்த அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நாட்டின் ஜனநாயகத்தையும் இறைமையையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.  

20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையிலேயே இருபதை கைவிடுமாறு பௌத்த பீடங்களின் சங்க சபை இவ்வாறு கோரியுள்ளது.  மேலும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள ஆலோசனைகள் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் கூறியுள்ளார் . 

இதேவேளை 20 ஆவது திருத்தத்தில்  ஒரு சில ஏற்பாடுகளை திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் பீரிஸ், அதனால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.  

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று அரசாங்கம் எதிர்பார்த்தது. எனினும் ஆளும் கட்சிக்குள்ளும், எதிர்ப்புத் தரப்பினர் மத்தியிலும் உருவாகியுள்ள எதிர்ப்புகளும் உயர்நீதிமன்றத்தின் பரபரப்பான தீர்ப்பும் அதன் நடைமுறையாக்கலை சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்து 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவது அரசின் நிலைப்பாடாக இருந்தாலும் அதிகாரம் யாவும் ஒருவர் கையில் செல்வது நாட்டை சர்வாதிகார ஆட்சிக்கு கொண்டு செல்லும் என்ற கருத்து இன்று மேலோங்கி வருவதை காண முடிகின்றது.  

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒரு சில விடயங்களுக்கு சாதகமாக இருந்தாலும் ஒருவரிடம் கண்மூடித்தனமாக அதிகாரங்கள் குவியுமானால், அது ஜனநாயகத்தை இல்லாமல் செய்து விடும் என்பதே எதிர்த் தரப்பினரின் கருத்தாக உள்ளது.  

அதுமாத்திரமன்றி இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்கும் பட்சத்தில் நாட்டின் இறைமை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு சிலர் தங்களின் வாதங்களை முன் வைக்கின்றனர். 

எவ்வாறு இருப்பினும் நாட்டில் 20 ஆவது திருத்தம் தொடர்பில் சற்று எதிர்ப்பான தன்மைகள் அதிகரித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து பலரும் மௌனம் கலைய ஆரம்பித்துள்ளனர்.  

இதனிடையே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துமபண்டார, 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக அமரபுர, ராமான்ய பீடத்து தேரர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருப்பது போன்று ஏனைய பீடங்களும் அவர்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.  

இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் பௌத்த பீடங்களின் செல்வாக்கு அதி உச்சமாக இருப்பது சகலரும் அறிந்த ஒன்றாகும்.  இதன் காரணமாகவே அரசியலமைப்பு சட்டத்தில் கூட பௌத்த மதத்துக்கு அதி உன்னத கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு புறம் இது சாதகமாகவும், மறுபுறம் இதுவே பாதகமாகவும் அமைவதுண்டு.

அந்த வகையில் அனைத்து பௌத்த மத பீடங்களும் 20 ஐ கைவிடுமாறு அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்குமானால் அது அரசின் தற்போதைய முயற்சிகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமையும்.

இதனை நன்கு உணர்ந்த வகையிலேயே எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தற்பொழுது பௌத்த மத பீடங்களின் தயவை நாடியுள்ளது.  இனி பௌத்த பீடங்கள் எடுக்கும் முடிவிலேயே இறுதியில் 20 ஆவது அரசியல் திருத்தத்தின் கதி தங்கியுள்ளது என்று கூறினால் தவறாகுமா?

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54