ஜே.ஆரின் 6/5   –  ஜி.ஆரின்  3/2  

Published By: Digital Desk 3

13 Oct, 2020 | 10:54 AM
image

20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான  விவாதங்கள் நாட்டின் தற்போதைய கொரோனா பரவல் சூழ்நிலையால் சற்று  அமைதியாக உள்ளன.  இருப்பினும்  அதை கொண்டு வருவதற்கான நோக்கங்களில் அரசாங்கம் இம்மியளவும் பிசகாது தனது நகர்வை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் அரசாங்கத்துக்கு ஆதரவு தரும் தரப்பினரைத் தவிர்த்து பார்க்கும் போது இந்த 20 ஆவது திருத்தம் தொடர்பில்  எதிர்மறையாக கருத்துக்களே ஊடகங்களையும் ஆக்கிரமித்து வருகின்றன.

ஒரு காலத்தில் 6/5 பாராளுமன்ற பெரும்பான்மையைக்கொண்டிருந்த போது 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை கொண்டு வந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அமுல்படுத்திய ஜே.ஆர் ஜெயவர்தனவை விட தற்போது மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கக் கூடிய ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்சவின் ஆட்சி காலம் சற்று அச்சத்துடன் பார்க்கப்படுகின்றது.   ஜே. ஆர். பாரம்பரிய அரசியல் பின்புலத்திலிருந்து வந்த ஜனநாயக ஆட்சி முறை அம்சங்களை தன்னிடத்தே கொண்ட ஒருவர். அதேவேளை  தந்தை ,சகோதரர்கள் என்ற அரசியல் பின்புலத்தை கொண்டிருந்தாலும் கூட  ஜனாதிபதி கோத்தாபயவை அனைவரும் அச்சத்துடன்  எதிர்கொள்வதற்கு பிரதான காரணம் அவர் ஒரு இராணுவ அதிகாரியாக இருந்ததாலாகும்.  மட்டுமன்றி  இறுதி யுத்த நேரத்தில் துணிச்சல் மிக்க தீர்மானங்களை எடுத்த ஒருவராகவும்  விளங்குகிறார். பாகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற நிர்வாக பொறுப்பில் அவர் அத்தருணம் இருந்திருந்தாலும் சில முடிவுகளை அவர் இராணுவ அதிகாரி என்ற வகையிலேயே மேற்கொண்டிருந்தார் என்பதை மறுக்க முடியாது.

ஏனெனில் இந்த அம்சங்கள் இயல்பாகவே இராணுவ அதிகாரி ஒருவருக்கு இருக்கும் பண்புகளாகும். 

இந்நிலையில் தற்போதைய 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அவர் கொண்டிருக்கக் கூடிய கொள்கைகள் பற்றி பல தரப்பிலிருந்தும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தின் பக்கமிருக்கும் பலர் வெளிப்படையாக இது குறித்து கருத்துத் தெரிவிக்க அச்சங்கொள்வதிலிருந்து இந்த நிலைமை விளங்குகிறது. எனினும் கடந்த வாரம் அரசாங்கத்தின் பக்கமிருக்கும் முக்கிய பிரமுகரான  ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் கூறியிருந்த கருத்துக்கள் பலரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. 

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் ‘ 20 ஆவது திருத்தச்சட்டத்தின்  ஆபத்துக்களை புரிந்து கொள்ளாமல் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது ‘ என அவர் தெரிவித்துள்ளார். மட்டுமன்றி 19 ஆவது திருத்தச்சட்டத்தின் குறைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டமையினாலேயே தற்போது கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கின்றார் என்ற விடயத்தையும் அவர் கூறுவதற்குத் தவறவில்லை.  20 ஆவது திருத்தச்சட்டம்   பற்றி ஆரம்பத்திலிருந்து பலரும் எதிர் கருத்துக்களை முன் வைத்து வந்தாலும் கூட அது பற்றி குறைவாக கூறியிருந்தாலும்  தன்னை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் விஜேதாச ராஜபக்ச. ஏனென்றால் கடந்த நல்லாட்சி காலத்தில் நீதி அமைச்சராக இருந்தாலும் கூட அவர் ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆதரவு வழங்கக் கூடிய ஒருவராகவே அடையாளம்  காணப்பட்டிருந்தார். இதன் காரணமாகவே அக்காலத்தில் அவரது அமைச்சுப்பதவிக்கும் ஆபத்து வந்தது.

எவன் கார்ட் விவகாரத்தை நல்லாட்சி காலத்தில் கையிலெடுத்த ரணில், அப்போது கோத்தாபய ராஜபக்சவை கைது செய்யும் முயற்சியிலிருந்தார். எனினும் நீதி அமைச்சராக இருந்த விஜேதாச பாராளுமன்றில் இந்த விவகாரத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவை கைது செய்ய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். அதற்குப்பின் வந்த காலங்களிலும் விஜதாச ராஜபக்சவிடமிருந்து நீதி அமைச்சை பறித்தெடுப்பதில் ரணில் மற்றும் மைத்திரி ஆகியோர் அழுத்தங்களை பிரயோகித்திருந்தனர்.

எவன்கார்ட் விடயம் தொடர்பில்  சட்ட ரீதியாகவே அனைத்தும் இடம்பெற்றன என அப்போது விஜேதாச தெரிவித்திருந்தார்.  ‘நான் சட்டத்தரணி என்ற ரீதியில் இதனை அறிவேன். ஆனால் இது தொடர்பில் சட்டமே தெரியாவர்கள்   கருத்துக்களை வெளியிடுகின்றனர். சிலர் இவ்விடயத்தைப் பயன்படுத்தி கோத்தாபயவை கைது செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்தனர். அவருடன் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சட்டத்தின் பிரகாரம் சரியான தீர்மானத்தையே எடுக்க வேண்டும் என சட்டத்தின் காவலராக அப்போது பாராளுமன்றில் துணிவுடன் உரையாற்றியிருந்தார் விஜேதாச ராஜபக்ச. 

இந்நிலையில் மறுபடி ராஜபக்ச சகோதரர்களிடமே அடைக்கலமான விஜேதாச ராஜபக்ச அரசியலமைப்பு விவகாரங்களில் அனுபவமுள்ள ஒரு சட்ட அறிஞராகவே கணிக்கப்படுகின்றார். எனினும் புதிய அரசாங்கத்தில் அவருக்கு எந்த பொறுப்புகளுமே வழங்கப்படவில்லை. புதிய அரசியலமைப்பு வரைபு குழுவில் கூட அவர் உள்ளடக்கப்படவில்லை. 20 ஆவது திருத்தச்சட்டம் குறித்து நீண்டதொரு மெளனத்துக்குப் பிறகே இவர் தற்போது வாய் திறந்துள்ளார்.  அரசியலமைப்பு மற்றும் அது தொடர்பான விடயங்களில் தேர்ச்சி பெற்றவரான விஜேதாச ராஜபக்ச 20 ஆவது திருத்தச்சட்டம் தற்போது ஒரு எதிர்மறையான கருத்தினை முன்வைத்திருப்பது அரசாங்க மட்டத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. 19 ஆவது திருத்தச்சட்டம் ஒன்றை கொண்டு வந்திருக்காவிட்டால் நிச்சயமாக கோத்தாபய ஜனாதிபதியாக இருந்திருக்க மாட்டார் என்பதை மறைமுகமாக விஜேதாச குறிப்பிட்டுள்ளார். 

சட்டத்தின் பிரகாரம் துணிவாக கருத்துக்களை கூறும் அதே வேளை செயற்படும் ஒருவராகவே கடந்த காலங்களில் விஜேதாச ராஜபக்ச அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக ஒரு நேர்மையான சட்டத்தரணி மற்றும் அரசியல்வாதி என்ற நற்பெயர் அவருக்குள்ளது. எனவே இவ்வாறானவர் 20 ஆவது திருத்தச்சட்டம் குறித்து கூறப்படும் கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியமானதொன்றாகவே பார்க்கப்படுகின்றது. 

நிறைவேற்றதிகார முறையை ஜே.ஆர் கொண்டு வந்திருந்தாலும் அதை ஜனநாயக விழுமியங்களை மீறி அவர் பயன்படுத்தினாரா என்பது முக்கியமான கேள்வி.  ஏனெனில் அவர் கொண்டு வந்த அரசியலமைப்பின் முக்கியமான திருத்தமாக 13 ஆவது திருத்தச்சட்டம் விளங்குகின்றது. இந்தியாவின் அழுத்தத்துக்கு அமைய அவர் இதற்கு இணங்கினாலும் சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை ஜனாநாயக ரீதியான  அதிகார பரவலாக்கத்தின் ஒரு முதல் முயற்சியாக அத்திருத்தச்சட்டம் அமைந்தது. அதற்கு பிற்பாடு ஜனாதிபதியானவர்கள் எவருமே அந்த திருத்தச்சட்டத்தை விமர்சித்தும் அல்லது அதற்கு அப்பால் செல்வோம் என்று தான் கூறி வந்திருக்கின்றார்களே ஒழிய அதை இல்லாமலாக்குவதற்கான முயற்சிகளில் இறங்கவில்லை. 

தற்போதைய சூழலிலும் இந்தியாவை பகைத்துக்கொண்டு அதில் கை வைப்பதை இலங்கை விரும்பாது. ஆனால் 20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான எதிர்ப்புகளை மழுங்கச் செய்து அனைவரையும் திசை திருப்பும் ஒரு காரியமாகத்தான்  மாகாண சபை முறை இல்லாமலாக்கப்படல் வேண்டும் என்ற பிரசாரம் மற்றொரு பக்கம் முன்னெடுக்கப்படுகின்றதோ என்ற சந்தேகமும் இல்லாமலில்லை.  

6/5 என்ற மிக வலுவான ஆதரவை பாராளுமன்றில் கொண்டிருந்த ஜே.ஆர். எவரும் அசைக்க முடியாத வகையில் செயற்பட்டு நிறைவேற்றதிகார முறையை கொண்டு வந்தார். அவ்வாறானதொரு அதிகாரத்தை கொண்டே அவர் உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற சிறிமா பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறித்தார். 1977 ஆம் ஆண்டு தேர்தலில் 8 உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இல்லாமலாக்குவதே ஜே.ஆரின் ஒரே நோக்கமாக இருந்தது. இது முற்று முழுதான ஜனநாயக விரோத செயற்பாடு என அப்போது விமர்சிக்கப்பட்டிருந்தது. 

எனினும் 1982 ஆம் ஆண்டு பாராளுமன்ற ஆயுட்காலத்தை மேலும் 6 வருடங்களுக்கு நீடிப்பதற்கான மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பை அவர் நடத்தியதன் மூலம் தான் கொண்டு வந்த அரசியலமைப்பின் ஒரு ஜனநாயகத் தன்மையான அம்சத்தை பிரயோகித்தார். சட்டவாக்க அதிகாரத்தை செயற்படுத்தும் ஒரு வழிமுறையாக மக்கள் தீர்ப்பு விளங்குகின்றது என்பதை இலங்கை அரசியலில் இடம்பெறச்செய்த சம்பவமாக அது விளங்குகிறது. 

அதன் பின்னர் 1983 ஜுலை கலவரத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்களை கண்டும் காணாதது போன்று இருந்ததற்கு நிறைவேற்றதிகாரம் அவருக்கு உதவி புரிந்தது. எனினும் இந்த நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு அவரால் 1987 இல் ஒன்றும் செய்ய முடியாது இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

ஜே.ஆரின் சாணக்கிய நகர்வுகளும் இடையில் சறுக்கின. அவரது காலத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் இப்போதும் நடப்பதற்கு சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மக்கள் அங்கீகாரம் பெறப்படல்  வேண்டும் என்பது கூட ஒரு ஜனநாயக கோஷமாகும். 6/5 ஆதரவை கொண்டிருந்த ஜே.ஆருக்கே இவ்வாறு நடந்ததென்றால் 3/2 ஐ கொண்டுள்ள ஜி.ஆர் முகங்கொடுக்க வேண்டியுள்ள சவால்கள் பல இருக்கின்றன.  20 ஆவது திருத்தச் சட்டம் இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் என்று எழுந்துள்ள கோஷங்களுக்கு மத்தியில், ஜனநாயக அம்சங்களின் ஊடாக இதற்கு எவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய பதில் கொடுக்கப் போகின்றார் என்பதே இப்போது எழுந்திருக்கும் கேள்வி.

சிவலிங்கம் சிவகுமாரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22